தலையங்கம்

‘ஜென் சி' இளைஞர்களை குறிவைக்கும் பிரதமர் நரேந்திர மோடி

‘ஜென் சி' தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் 'ஒரு பல்கலைக்கழகம், ஒரு மந்திரி' என்ற புதிய முன்னெடுப்பை மேற்கொள்ள மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தீவிர போராட்டம் 'ஜென் சி' இளைஞர்களின் சக்தியை நாடு முழுவதும் உணர வைத்துவிட்டது. இளைஞர்கள் தீப்பிழம்பாக வெடித்ததைப் பார்த்துவிட்டுதான் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பேச்சுகளில் இளைஞர் பட்டாளத்துக்குத் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினார்.

சுதந்திர தின உரை

நாட்டின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்து உரையாற்றியபோது இளைஞர்களைத் தூண்டில் போட்டு இழுப்பது போல சில அறிவிப்புகளை வெளியிட்டார். 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதில் இருந்து 13-வது ஆண்டாக அவர் சுதந்திர தின உரை நிகழ்த்தியிருக்கிறார். இதுவரை அவர் ஆற்றிய உரைகளைப்போல இல்லாமல் இந்த உரை மிகவும் வித்தியாசமாக இளைஞர்களை மையப்படுத்தியே இருந்தது.

7 அம்ச அறிவிப்புகள்

தன்னுடைய 75 நிமிட பேச்சில் இளைஞர்கள் என்ற வார்த்தையை 21 முறைகளும், இளைய சமுதாயத்தை என்பதை 23 முறைகளும் குறிப்பிட்டு பேசியது இதுவரை இல்லாத ஒன்றாகும். சுதந்திர தினக் கொண்டாட்டத்திலும் நிறைய இளைஞர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். பிரதமர் மோடி தன்னுடைய உரையில் 7 அம்ச அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் நாட்டைத் தாங்கி பிடிக்கும் வருங்கால தூண்களான இளைஞர்களுக்கு உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டிருந்தன.

இளைஞர்களுக்கு ஏ.ஐ. பயிற்சி

நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களின் வேலை வாய்ப்பு திறனை மேம்படுத்த அவர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் ஏ.ஐ. என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் மிகவும் அவசியம். எதிர்காலமே இனி ஏ.ஐ.யின் கையில்தான் இருக்கிறது. ஏ.ஐ.யில் திறன் பெற்றிருந்தால் மட்டுமே நல்ல வேலைக்கு போக முடியும்.

நமது இளைஞர்கள் ஏ.ஐ. உலகின் முன்னணி இடத்தை பிடிப்பதற்கான திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏ.ஐ. பயிற்சி அளிக்க இருக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார். இது படைப்பாற்றலைக் கூர் தீட்டிக்கொண்டிருக்கும் இளைஞர்களிடம் அதிகப்படியான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இலவசமாக ஆன்லைன் பயிற்சி

பணம் இல்லாத ஏழை, நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக்கனியாக போய்விடுமோ என்ற நிலையை மாற்றும் வகையில், போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு இளைஞர்களுக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அள்ளிக் கொடுத்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளாக இந்தியாவில் கல்விக்கு என தனியாக கொள்கை இல்லாத நிலையில், பா.ஜனதா அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்துள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.

'ஜென் சி' இளைஞர்கள்

இதுமட்டுமல்லாமல் அவர் வெளியிட்ட மற்ற 5 அறிவிப்புகளுமே, இளைஞர்களை வலுப்படுத்த வேண்டும் என்ற வரம்புக்குள் கொண்டுவரும் வகையில்தான் இருந்தன. 'ஜென் சி' இளைஞர்களுடன் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் 'ஒரு பல்கலைக்கழகம், ஒரு மந்திரி' என்ற புதிய முன்னெடுப்பை மேற்கொள்ள மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி, தினமும் யாராவது ஒரு மத்திய மந்திரி தங்களுக்கு ஒதுக்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிவார். ஆக இனி கரம் வலுப்படவேண்டும் என்றால், இளைஞர்கள் தங்கள் பக்கம் இருந்தால் மட்டுமே முடியும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி முதல் அனைத்து அரசியல்வாதிகளும் நன்றாக புரிந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.