சென்னை,
சமீப காலங்களாக குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த சம்பவங்கள் நடந்த இடங்களை பார்த்தால் போலீசாரின் பாதுகாப்பு குறைபாடோ அல்லது அரசாங்கத்தின் கவனக்குறைவோ மட்டும் காரணம் இல்லை என்பது தெரிகிறது. 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி பிளஸ்-2 மாணவி இயற்கை உபாதைக்காக காட்டுப்பகுதியில் ஒதுங்க சென்றபோது காமுகன் ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு 76 நாளில் அதாவது கடந்த திங்கட்கிழமையன்று நீதிமன்றம் இரட்டை தூக்கு தண்டனை விதித்திருக்கிறது.
இந்த வழக்கில் மின்னல் வேகத்தில் குற்றவாளியை கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீசாரும், தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதற்கு என்னிடம் இடம் இல்லை என்று விரைந்து விசாரணை செய்து தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி பிரீத்தாவும் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். நெஞ்சம் பதைபதைக்க வைத்த இந்த கொலைக்கு அவர் வீட்டிலோ அல்லது வீட்டின் அருகாமையிலோ கழிப்பறை இல்லாததே காரணம் என்று தெரிகிறது. வீட்டுக்கு ஒரு கழிப்பறை என்பது பிரதமர் மோடியின் திட்டமாக இருந்தாலும், அந்த கனவு நனவாகவில்லை. பிளஸ்-2 மாணவி வசித்து வந்த குடியிருப்பு பகுதியில் பொதுகழிப்பறை இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காது. எனவே அனைத்து இடங்களிலும் கழிப்பறை கட்டும் முன்னெடுப்புகளை மத்திய அரசின் உதவியோடு, உள்ளாட்சி அமைப்புகள் எடுக்கவேண்டும்.
இதுபோல கோவையை அடுத்த சூலூர் அருகே பள்ளப்பாளையம் பகுதியில் வசித்த கட்டிட தொழிலாளியின் 10 வயது மகள் கடந்த 21-ந்தேதி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அந்த பகுதியில் வசித்துவந்த 33 வயதான கட்டிட தொழிலாளி, சிறுமியிடம் சாக்லெட் வாங்கித்தருகிறேன் என்று கூறி தன்னுடன் மோட்டார் சைக்கிளில் தென்னந்தோப்புக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். அந்த சிறுமி கத்தி கூச்சல் போட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, உடலை அருகில் இருந்த குளக்கரையில் உள்ள முட்புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டான். மகளை காணவில்லை என்று அவளது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ரம்யா பாரதி தலைமையில் அமைக்கப்பட்ட 5 தனிப்படை போலீசார், அந்த பகுதியில் இருந்த 250 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்து இந்த குற்றத்தில் ஈடுபட்டவனையும், அவனது நண்பனையும் 24 மணி நேரத்துக்குள் கைது செய்துவிட்டனர்.
இந்த சம்பவத்தில் போலீசாரின் புலன்விசாரணை சரியான கோணத்திலேயே நடந்திருந்தாலும், அந்த சிறுமியை காமுகன் அவள் வீட்டின் முன்பு இருந்துதான் ஏமாற்றி கூட்டிச்சென்றிருக்கிறான். தெரிந்த ஆண்களோ, தெரியாத ஆண்களோ நெருங்கி பழக வந்தால் அதற்கு எது எல்லை? என்பதை குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். நல்ல தொடுதல் எது? கெட்ட தொடுதல் எது? அதாவது 'குட் டச்' எது? 'பேட் டச்' எது? என்பதையும் ஆசிரியைகளும், பெற்றோரும் சொல்லி கொடுக்கவேண்டும். இதுபோல, முன்பின் தெரியாதவர்கள் அழைத்தால் அவர்களிடம் உஷாராக இருக்க தங்கள் குழந்தைகளிடம் பாஸ்வேர்டை சொல்லி, அதை நினைவில் வைத்துக்கொள்ள பெற்றோர் அறிவுறுத்தவேண்டும். குழந்தைகளுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.