சென்னை,
தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வுக்கான காரணம் குறித்து பொருளாதார நிபுணரும், முன்னாள் வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் அலுவல் சார்ந்த உறுப்பினருமான ஏ.நாராயணமூர்த்தி ஆய்வு செய்து வெளியிட்டுள்ள கருத்துகள் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.
மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புடைய அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரம் குறித்து 'தினத்தந்தி'யில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. நாட்டு நடப்புகளோடு உணவுப்பொருட்கள், காய்கறி, தங்கம் உள்ளிட்டவற்றின் விலை பற்றிய விவரங்களும் ஏட்டை அலங்கரித்து வருகின்றன. அந்தவகையில், கடந்த சனிக்கிழமையன்று '25 முதல் 30 சதவீதம் அதிகரிப்பு; தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு: 26 கிலோ பொன்னி ரூ.1,800-க்கு விற்பனை' என்ற தலைப்பில் தினத்தந்தியில் வெளியிடப்பட்ட செய்தி, தற்போதைய நிலையை படம்பிடித்து காட்டியிருந்தது. தமிழகத்தின் அரிசி தேவை ஆண்டுக்கு 95 லட்சம் டன் ஆக உள்ளது. ஆனால் ஆண்டுக்கு சராசரியாக 75 முதல் 80 லட்சம் டன் அரிசி மட்டுமே நமது மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் மோட்டா ரக அரிசியை நமது மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவதில்லை. அதனால் பொன்னி உள்பட சன்ன ரக அரிசிக்காக ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய அண்டை மாநிலங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வுக்கான காரணம் குறித்து பொருளாதார நிபுணரும், முன்னாள் வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் அலுவல் சார்ந்த உறுப்பினருமான ஏ.நாராயணமூர்த்தி ஆய்வு செய்து வெளியிட்டுள்ள கருத்துகள் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. அவரது ஆய்வின்படி, தமிழ்நாட்டில் நெல் சாகுபடி பரப்பளவு 1970-ம் ஆண்டு 27 லட்சம் எக்டேராக இருந்தது. இது 2024-ம் ஆண்டு 19 லட்சம் எக்டேராக சுருங்கிவிட்டது. பஞ்சாப், அரியானா மாநிலங்களில் ஒரு எக்டேருக்கு 4,400 கிலோ நெல் உற்பத்தியாகும் நிலையில், தமிழ்நாட்டில் 3,300 கிலோ மட்டுமே உற்பத்தியாகிறது. அந்த மாநிலங்களில் விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, பாசன வசதிகளை மேம்படுத்துவது, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, அதிக விளைச்சல் தரும் விதைகளை விதைப்பது ஆகியவை அதிக விளைச்சலுக்கு காரணிகளாக உள்ளன.
அதேநேரத்தில், தமிழ்நாட்டில் நெல் சாகுபடி செலவும் அதிகமாக உள்ளது. ஒரு எக்டேருக்கு ரூ.99.902 செலவாகும் நிலையில், அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்படும் ஒடிசா, உத்தரபிரதேசத்தில் ரூ.83,563 மட்டுமே செலவாகிறது. விவசாயத் தொழிலாளர்களின் கூலி, எந்திர வாடகை, பாசனச் செலவு, உரம், பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவற்றின் விலை உயர்வால் சாகுபடிச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தச் செலவை ஈடுகட்ட போதிய வருமானம் கிடைக்காததால், கடனில் சிக்கிய விவசாயிகள் நெல் சாகுபடியை கைவிட்டு நிலத்தை தரிசாக போடும் நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண விவசாய நிபுணர் குழுவை அமைத்து, விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கவேண்டும். மாவட்டந்தோறும் சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும்.
மற்ற மாநிலங்களைப்போல விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும். பாசன வசதிகளை உறுதி செய்வதுடன், சொட்டுநீர் பாசனம் போன்ற நுண்ணிய நீர்ப்பாசன முறைகளையும் ஊக்கப்படுத்தவேண்டும் என்று நாராயணமூர்த்தி ஆலோசனை தெரிவித்துள்ளார். இதுபோன்ற நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று, விவசாயிகளுக்கு உரிய வருமானம் கிடைக்க வழிவகுப்பதுடன், அரிசி விலையையும் கட்டுக்குள் வைக்க நீண்டகால தீர்வை அரசு உருவாக்கவேண்டியது அவசியமாகும். அதேநேரத்தில் விவசாய வேலைகளுக்கும் கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. ஏனெனில் அதிகமானோர் 125 நாள் வேலைத்திட்டத்தில் வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். ஆகவே அந்த திட்டத்தில் வேலை கொடுக்கும்போது. விவசாயிகளின் விளைநிலங்களிலும் வேலைபார்க்கும் முறையை கொண்டுவரவேண்டும்.