சென்னை,
முதல்-அமைச்சர் விஜய் ஏற்கனவே தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, நிதி அமைச்சர் மரிய வில்சனும், நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சித்திக்கும் வெள்ளை அறிக்கையை வெளியிட்டனர். இதற்கு முன் 2001-ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது நிதி அமைச்சராக இருந்த சி.பொன்னையனும், 2021-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். வெள்ளை அறிக்கை என்பது தமிழக அரசின் நிதிநிலையை ஒரு காலக்கண்ணாடிபோல் பட்டவர்த்தனமாக பிரதிபலிப்பதாகும். ஒரு குடும்பத்தின் வரவு-செலவு விவரங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிந்திருந்தால்தான் எந்தச் செலவுகள் அவசியமானவை, எது தேவையற்றது, எவற்றை தவிர்க்கலாம் என்பதை வருமானத்தை அடிப்படையாக வைத்து திட்டமிடமுடியும்.
வெள்ளை அறிக்கை, தமிழக நிதிநிலையின் தற்போதைய கருப்பு நிலையை தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளது. குறிப்பாக, அரசுக்கு ரூ.100 வருமானம் கிடைக்கும் நிலையில் ரூ.145 செலவாகிறது என்ற அதிர்ச்சித் தகவலை அது வெளிப்படுத்தியுள்ளது. அரசின் செலவுகள் நான்கு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஏற்கனவே பெற்ற கடன்களுக்கான வட்டி ஆகியவை கட்டாயச் செலவுகளாகும். தவிர்க்கமுடியாத இந்தக் கட்டாயச் செலவுகளுக்கே அரசின் வருவாயில் ரூ.64 செலவாகிவிடுகிறது. 2-வது பிரிவான உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப்பகிர்வுக்காக ரூ.23-ம், 3-வது பிரிவான மானியங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கு ரூ.40-ம் செலவாகிறது. இதன் பின்னர் சாலைகள், கட்டிடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான மூலதனச் செலவுகளுக்கு வெறும் ரூ.13 மட்டுமே எஞ்சுகிறது. அதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், மூலதன முதலீட்டுக்காக செலவிடப்படும் தொகையைவிட வட்டிக்காக செலவிடப்படும் தொகை அதிகமாக இருப்பதுதான்.
தமிழகஅரசின் நேரடிக்கடன் தற்போது ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மின்வாரியம், போக்குவரத்துக்கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்தால், தமிழகத்தின் மொத்த நிதிச்சுமை ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்கிறது. கடந்த நிதியாண்டில் வட்டிக்காக மட்டும் ரூ.67,050 கோடி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும், தமிழக அரசு ரூ.7.7 கோடி வட்டிக்காக செலவிடும் நிலை உள்ளது. அரசின் செலவுகளை சமாளிக்க வருவாயை அதிகரிக்கவேண்டும். ஆனால் அதற்கும் வாய்ப்பு இல்லாதநிலை உள்ளது. ஏனென்றால் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக உள்ளது. மராட்டியம், கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு அதிக கடன், அதிக நிதி பற்றாக்குறை. அதிக வருவாய் பற்றாக்குறை, குறைந்த வரி வருவாய் திறன், அதிக வட்டி சுமை என பல முக்கிய நிதி குறியீடுகளில் பின்தங்கிய நிலையில் இருப்பதை வெள்ளை அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
மேலும் அதில், மாநிலத்தின் வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக செலவுகளை சமாளிக்க வருவாய் பெருக்கமும், செலவு கட்டுப்பாடும் அவசியமாகின்றன. எந்தெந்த செலவுகளை கட்டுப்படுத்தமுடியும் என்பதை ஆராய்ந்து, மாநிலத்தின் செலவழிக்கக்கூடிய நிதிநிலையை மக்களிடம் வெளிப்படையாக எடுத்துரைத்து, அதற்கேற்ப அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டால், நிதி நிர்வாகத்தை படிப்படியாக மேம்படுத்தமுடியும். முதல்-அமைச்சர் விஜய் உறுதியளித்ததுபோல், ஊழலுக்கு இடமளிக்காமல் வருவாயை பெருக்கி, தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால், தற்போதைய நிதி சவால்களை படிப்படியாக சீரமைக்க முடியும்.