தலையங்கம்

நட்சத்திர அணியை புரட்டிப்போட்ட ஸ்பெயின்

கால்பந்து விளையாட்டு வரலாற்றில் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டிகளில் வழங்கப்படும் 2 உலகக் கோப்பைகளையும் ஸ்பெயின் தன்வசம் வைத்திருக்கிறது.

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த ஜூன் மாதம் 11-ந்தேதி தொடங்கி நேற்றுமுன்தினம் வரை நடந்தது. இது உலகம் முழுவதும் திருவிழாவாக கொண்டாடப்பட்டது. 48 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்றது. போட்டி நடந்த 40 நாட்களும் உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களை கால்பந்து தன்வசம் கட்டிப்போட்டுவிட்டது. இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்கவில்லையே என்ற குறை நமது மக்களுக்கு இருந்தாலும், இந்த போட்டிகளை பார்க்க அவர்கள் அதிக ஆர்வத்தோடு இருந்தார்கள். அதிலும் குறிப்பாக தென்மாநில மக்கள், மேற்குவங்காள மக்களுக்கு இந்த விளையாட்டில் அதிக வேட்கை உண்டு. அதனால்தான் ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவும், ஸ்பெயினும் மோதிய ஆட்டத்தை பார்க்க அதிகாலை முதல் மாணவர்கள் விழித்திருப்பார்கள் என்பதால், கேரளா, மேகாலயா மற்றும் மணிப்பூரில் கல்லூரிகள், பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது.

தனது நளினமான ஆட்டத்தால் உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் குடிகொண்டிருக்கும் லயோனல் மெஸ்சி அங்கம் வகித்த அர்ஜென்டினாதான் இறுதிப்போட்டியில் வாகை சூடும் என்று பலத்த எதிர்பார்ப்புகள் இருந்தன. 2022-ல் நடந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினாதான் மகுடம் சூடியிருந்தது. கடந்த 64 ஆண்டுகளில் எந்த அணியும் அடுத்தடுத்து வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றி எழுதவேண்டும் என்பதே அர்ஜென்டினாவின் லட்சியமாக இருந்தது. ஆனால் அந்தக் கனவு, ஆசை எல்லாவற்றையும் ஸ்பெயின் சுக்கு நூறாக்கிவிட்டது. பொதுவாக எந்த அணி என்றாலும் நட்சத்திர வீரர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். அவர்களை சுற்றித்தான் அந்த அணிக்கான வெற்றி வரையறுக்கப்படும். ஆனால் இந்த போட்டியில் ஸ்பெயின் அணியில் 11 வீரர்களுமே ஹீரோக்கள்தான் என்றவகையில் கூட்டு முயற்சியோடு விளையாடினார்கள்.

அதனால்தான் இறுதி ஆட்டத்தில் கூடுதல் நேரத்தில் பெர்ரான் டோரஸ் அடித்த கோல் மூலம் வெற்றிக்கனியை பறிக்கமுடிந்தது. ஸ்பெயினின் வெற்றிக்கு கூட்டு முயற்சி, குழு உணர்வு தான் அங்கீகாரம் என்றாலும், அவர்கள் ஆட்டத்தின் நேர்த்திதான் அர்ஜென்டினா வெற்றி பெறவேண்டும் என்று நினைத்த ரசிகர்களையும் ஸ்பெயின் பக்கம் ரசிப்பை இழுத்தது. இப்போது அனைத்து அணிகளும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எதிரணியின் பலம், பலவீனத்தை மதிப்பீடு செய்து அந்த அணியில் உள்ள நட்சத்திர வீரர்களை குறிவைத்து ஆடுகிறார்கள். ஆனால் ஸ்பெயின் அணி வீரர்கள் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பாரம்பரிய முறைப்படியே விளையாடினார்கள்.

அவர்களின் ஒரே இலக்கு பந்தை லாவகமாக தட்டிச்சென்று கோல் கம்பத்துக்குள் கடத்துவதாகத்தான் இருந்தது. அந்த அணி வீரர்களில் 75 சதவீதம் பேர் 22 வயதுக்குட்பட்ட துடிப்புமிக்க வீரர்கள் என்பது மிகப்பெரிய பலமாகும். மாறாக அர்ஜென்டினா வீரர்கள் பெரும்பாலானோர் இந்த தொடரோடு ஓய்வுபெறும் நிலையில் உள்ளார்கள். மொத்தத்தில் துடிப்புமிக்க இளமைக்கும், பொறுமைமிக்க முதுமைக்கும் இடையேயான போட்டியாக இருந்தது. கடந்த 2024 முதல் தற்போதைய இறுதிப்போட்டி வரை விளையாடிய 38 சர்வதேச போட்டிகளில் ஒரு போட்டியில்கூட ஸ்பெயின் அணி தோற்கவில்லை. அது மட்டுமல்லாமல், இந்த உலகக் கோப்பைக்கான போட்டியில் ஆடிய 8 ஆட்டங்களில், அவர்களது பக்கம் ஒரே ஒரு கோல்தான் கோல் கம்பத்துக்குள் நுழைந்தது. ஆக, கால்பந்து விளையாட்டை அடுத்த தலைமுறையின் ஆதிக்கத்துக்கு கொண்டுச்சென்றது ஸ்பெயின்தான். கால்பந்து விளையாட்டு வரலாற்றில் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டிகளில் வழங்கப்படும் 2 உலகக் கோப்பைகளையும் தன்வசம் வைத்திருக்கும் ஒரே நாடு என்ற மற்றொரு பெரிய பெருமையும் ஸ்பெயினுக்கு கிடைத்துள்ளது.