"மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான்...." என பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த திரைப்படப் பாடலின் வரிகள் நிஜமாகியுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய வீரியமிக்க போராட்டம், மத்திய கல்வித்துறை மந்திரியாக இருந்த தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுடன் மாபெரும் வெற்றியில் முடிவடைந்துள்ளது. கடந்த மே மாதம் 3-ந்தேதி சுமார் 22.05 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு வினாத்தாள் கசிவால், அதை மத்திய அரசு ரத்து செய்தது. மறுதேர்வு கடந்த ஜூன் 21-ந்தேதி நடத்தப்பட்டு தேர்வு முடிவும் வெளியாகியது. இந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று ராஜினாமா செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து சமூக ஆர்வலர் வான்சுக் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
சமூக வலைதளங்களில் 'நையாண்டி மீம்ஸ்' இயக்கமாக தொடங்கப்பட்டு, இப்போது இன்ஸ்டாகிராமில் தேசிய கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளைவிட மிக அதிகமாக அதாவது, 2 கோடியே 60 லட்சம் பேர் பின்தொடரும் பெரிய இயக்கமாக உருவெடுத்திருக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் ஆதரவாளர்களான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை நடத்தி வந்தனர். இதன் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு உடனடியாக மந்திரி சபை கூட்டத்தை கூட்டி வினாத்தாள் கசிவுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையிலான சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதன்படி, நீட் தேர்வுகளில் மட்டுமல்லாமல், அனைத்து பொதுத்தேர்வுகளிலும் வினாத்தாள் கசிந்தால் ஏற்கனவே உள்ள சட்டத்தில் இதற்காக 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை என்ற பிரிவு, இப்போது 10 ஆண்டுகள் என்றும், அபராதம் அதிகபட்சமாக ரூ.10 கோடி வரையும் விதிக்க புதிய சட்டம் வகை செய்கிறது.
இதுமட்டுமல்லாமல், இந்த குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைத்து புலன் விசாரணைக்கு காலக்கெடு நிர்ணயித்து நீதிமன்றத்தில் 3 மாதங்களுக்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்றும், அந்த மசோதாவில் இடம்பெறச் செய்திருக்கின்றனர். இந்த சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தி புலன் விசாரணை செய்யப்போகும் போலீசாரின் திறமையில்தான் இதன் உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது. வினாத்தாள் கசியாமல் இருக்க தேர்வுமுறைகளிலும் மாற்றத்தை கொண்டு வருவது காலத்தின் கட்டாயம். இந்தச் சூழலில், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்-இளைஞர்கள் பட்டாளத்தின் முதன்மை கோரிக்கையான கல்வித்துறை மந்திரி பதவி விலகவேண்டும் என்பதை கடந்த சனிக்கிழமை அவர்கள் சாதித்திருக்கின்றனர். தர்மேந்திர பிரதான் தன்னுடைய மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டார். இது மாணவர்-இளைஞர்கள் பட்டாளத்துக்கு கிடைத்த பெரிய வெற்றி.
மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டவுடன் தற்கொலை செய்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மாணவர்-இளைஞர்களை தாக்கிய துணை ராணுவம், போலீசார் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். இதுதொடர்பாக மத்திய மந்திரிகளுடன், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமுக தீர்வு எட்டப்பட்டதால், போராட்டத்தை விலக்கிக்கொண்டனர். 4 வாரங்களுக்கு பிறகு மீண்டும் இதுகுறித்து பேச இருக்கின்றனர். ஆக ஒரு மாதமாக டெல்லியை உலுக்கி வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. மாணவர்-இளைஞர்கள் பட்டாளம் நினைத்தால் எதையும் சாதிக்கும் என்பதற்கு டெல்லி மற்றும் நாடு முழுவதும் நடந்த இந்த போராட்டம் வரலாற்று சான்றாகியுள்ளது.