தலையங்கம்

வெற்றி மீது வெற்றி வந்து சேரும்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிதான் பட்டத்தை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக அனைத்து துறைகளிலும் வெற்றி மீது வெற்றி வந்து சேருகிறது. இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், இந்தியா-27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் என்று தொடங்கி எட்டுத் திக்கிலும் முத்திரை பதித்துவருகிறது. இதில் கிரிக்கெட் விளையாட்டில் அடைந்துவரும் வெற்றி மகத்தானது. 2024-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பெற்று சாதனை படைத்தது. கடந்த ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்றதன்மூலம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்த இரு தொடர்களிலும் ஒரு ஆட்டத்தில்கூட இந்திய அணி தோல்வியையே சந்திக்கவில்லை. அடுத்து பெண்கள் ஜூனியர் உலகக் கோப்பையை வென்றதன் தொடர்ச்சியாக பெண்களுக்கான சீனியர் உலகக் கோப்பை போட்டியிலும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான நமது அணி முதல் முறையாக வாகை சூடி இந்தியாவுக்கு பெருமையை தேடித்தந்தது.

ஆண்கள் அணி வெற்றி பெற்றுவிட்டது. பெண்கள் அணி வெற்றியை ருசித்துவிட்டது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் அணி மட்டும் சளைத்ததா என்ன? என்று களத்தில் இறங்கினார்கள் பயம் அறியாத நமது இளம் வேங்கைகள். ஜூனியர்களுக்கான கிரிக்கெட்டில் 6-வது முறையாக நமது வீரர்கள் கோப்பையை உச்சி முகர்ந்து ஆண்கள் அணிக்கும். பெண்கள் அணிக்கும் நீட்சியாக கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிக்கொடியை நாட்டிவிட்டார்கள். ஜிம்பாப்வே, நமிபியாவில் நடந்த இந்த ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து வெற்றியை வசப்படுத்தியது. சூரியவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, அபிக்யான் குண்டு, ஆரோன் ஜார்ஜ், கேப்டன் ஆயுஷ் மாத்ரே, தமிழக இளம் சிங்கங்கள் அம்ப்ரிஷ், தீபேஷ் ஆகியோர் முழு பங்களிப்பையும் நல்கி வெற்றியை சாத்தியமாக்கினார்கள்.

ஆண்கள் கிரிக்கெட் அணியில் வாஷிங்டன் சுந்தர். வருண் சக்கரவர்த்தி, பெண்கள் ஜூனியர் அணியில் கமலினி, ஆண்கள் ஜூனியர் அணியில் 2 பேர் என்று பஞ்ச பாண்டவர்கள் போல 5 பேரும் அளப்பரிய பங்களிப்பை கொடுத்து தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடி தந்தனர். இப்போது ஜூனியர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றவர்கள் எதிர்காலத்தில் சீனியர் ஆண்கள் அணியில் விளையாட தேர்ச்சி பெறவும் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் என இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பலரும் முன்பு ஜூனியர் அணியில் விளையாடி முத்திரை பதித்தவர்கள்தான். இந்த 3 தொடர்கள் மட்டுமல்லாமல் தற்போது நடந்துவரும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பையிலும் இந்தியாதான் பட்டத்தை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதுவும் நடந்துவிட்டால் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு பொற்காலம் என்று உலகமே கட்டியம் கூறும். கிரிக்கெட்டில் பட்டை தீட்டப்பட்ட வைரமாக மின்னுவதைப்போல மற்ற விளையாட்டுகளிலும் இந்திய அணியினர் வெற்றிக்கோப்பையை தட்டி தூக்கவேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சமீபத்தில் ஹர்மன்பிரீத் கவுர், "கிரிக்கெட்டுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் அனைத்து விளையாட்டுகளுக்கும் வழங்கப்படவேண்டும்" என்று கூறியது சிந்திக்க வைக்கிறது. ஆக கிரிக்கெட்டில் துருவ நட்சத்திரமாக ஜொலிப்பதுபோல மற்ற விளையாட்டுகளிலும் சிறந்த நிலையை எட்டுவதற்கு விளையாட்டு சங்கங்கள் மட்டுமல்லாமல், மத்திய-மாநில அரசுகளும் முன்னெடுப்புகளை தீவிரப்படுத்தவேண்டும்.