அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு பதவியேற்ற டிரம்ப், சில நாட்களிலேயே 'பரஸ்பர வரி' என்ற பெயரில் ஒவ்வொரு நாட்டுக்கும் தன் இஷ்டத்துக்கு வரி விதித்தார். இதனை எதிர்த்து அரசு நிர்வாகங்களில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில், அந்த நாட்டின் 12 மாகாணங்களில் உள்ள கவர்னர்கள், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர், வணிகர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
"நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே" என்று நக்கீரன் சொன்னதைப்போல, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் தலைமை நீதிபதி உள்பட 9 நீதிபதிகளில் 6 பேர் இந்த வரி விதிப்பு செல்லாது என்ற அதிரடி தீர்ப்பளித்தனர்.
அவர்கள் தங்களது தீர்ப்பில், வரி விதிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. அது நாடாளுமன்றத்திற்கே உரியது. ஜனாதிபதி டிரம்ப் 1977-ம் ஆண்டின் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தை பயன்படுத்தி வரி விதிப்புக்கு உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் அந்தச் சட்டம் சொத்துகளை முடக்கவும், வர்த்தகத் தடைகளை விதிக்கவும் மட்டுமே அதிகாரம் வழங்குகிறது. புதிய வரியை விதிக்கமுடியாது.
போதைப்பொருள் கடத்தல், வர்த்தக பற்றாக்குறை போன்றவற்றைக் காரணம் காட்டி 'தேசிய அவசரநிலை' என போர்வை போட்டு வரி விதிக்கமுடியாது. இந்த 3 காரணங்களால் டிரம்ப் விதித்த வரி செல்லாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கு பின்னரும் அடங்காத டிரம்ப் வேறு வகைகளில் பல்வேறு வரிகளை விதித்துள்ளார். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு என்னவாக இருக்கும் என்பது விவாதப்பொருளாக உருவெடுத்துள்ளது.
அமெரிக்காவை போல, இந்தியாவிலும் வெகுகாலமாக பூனைக்கு யார் மணி கட்டுவது? என்ற பிரச்சினைக்கு தீர்வு காண நமது சுப்ரீம் கோர்ட்டும் சில அதிரடி கருத்துகளை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின் வினியோகக் கழகத்தின் சார்பில் 2024 மின்சார திருத்தச் சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 3 பேர் அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கூறிய கருத்துகள் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில், மின்சாரக் கட்டணத்தை செலுத்தத் தகுதி உள்ளவர்களுக்கே இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் மேலும் பல இலவசங்களை வழங்குவது பொதுநலனுக்கு உகந்ததல்ல. இந்த விவகாரத்தில் நாங்கள் மிகுந்த கவலை கொள்கிறோம்.
ஏழை மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதை ஏற்றுக்கொள்கிறோம்; ஆனால் தேர்தல் நேரங்களில் பல்வேறு இலவசங்களை அறிவிப்பது சரிதானா? இது என்ன புதிய கலாசாரம்? இலவசங்களை தொடர்ந்து வழங்குவதால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இலவசங்களுக்கு பதிலாக மக்கள் சுயமாக சம்பாதித்து, சுயமரியாதையுடன் வாழ வேலைவாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளை மாநில நலனை கருத்தில்கொண்டு அரசுகள் எப்படித் தீர்மானிக்கப்போகிறது என்பதை காலமே காட்டவேண்டும். தமிழ்நாட்டில் கூட, 2024-25 நிதியாண்டில் மானியங்களுக்காக ரூ.52,603 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டைவிட 39 சதவீதம் அதிகம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தலையொட்டி ரூ.1 லட்சம் கோடியிலான இலவச திட்டங்களை அறிவித்துள்ளார். நிதி ஆதாரத்தை பெருக்கி இதனை எவ்வாறு நிறைவேற்றப்படும்? என்று அவர் தெரிவிக்கவில்லை என்பதையும் கருத்தில்கொள்ளவேண்டும்.