தலையங்கம்

இந்தியாவின் ஒற்றுமைக்கு வித்திட்ட சியாமா பிரசாத்

சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாள் சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் ஒற்றுமை, இறையாண்மைக்காக நிலைத்து நின்ற கல்வியாளர், சிந்தனையாளர், உண்மையான தேசபக்தர், நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் என்று போற்றி புகழப்படும் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாள் சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. கொல்கத்தாவின் பவானிபூரில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். அவரது 125 அடி உயர சிலைக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சி செய்யும் பா.ஜனதாவின் பிதாமகன் சியாமா பிரசாத் முகர்ஜிதான். அவரது வாழ்க்கை வரலாற்றை இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ளவேண்டிய அவசியமாகும். 1901-ல் வங்காளத்தில் பிறந்த அவர், இங்கிலாந்தில் சட்டம் படித்து புகழ்பெற்ற வக்கீலாக பணியாற்றினார்.

தனது 28-வது வயதில் சட்டமேலவை உறுப்பினராகவும், 33 வயதில் கொல்கத்தா பல்கலைக்கழக துணை வேந்தராகவும் ஆனார். தனது குழந்தையையும், மனைவியையும் மரணத்துக்கு பறிகொடுத்துவிட்டு சின்ன வயதிலேயே சோகங்களை சந்தித்தார். இதையடுத்து இனி சமுதாயத்துக்கு அயராது பணியாற்றவேண்டும் என்று உறுதி பூண்டார். ஆரம்பத்தில் இந்து மகாசபை தலைவராக பொறுப்பேற்ற அவர், வங்காளத்தில் கூட்டணி ஆட்சி அமைந்த நேரத்தில் நிதி மந்திரியாக பணியாற்றி சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். 1946 ல் இந்திய அரசியல் சட்ட நிர்ணயசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, நமது நாடு சுதந்திரம் அடைந்தவுடன் மத்திய மந்திரிசபையில் முதல் தொழில்துறை மந்திரியாக திறம்பட பணியாற்றினார். முதல் தொழில் கொள்கையை வெளியிட்டவரும் அவர்தான்.

சித்தரஞ்சன் ரெயில் தொழிற்சாலை உள்ளிட்ட பெரிய தொழிற்சாலைகள் வருவதற்கு வித்திட்டார். பிரதமர் மோடி இப்போது பிரகடனப்படுத்தி வரும் சுயசார்பு கொள்கையை அந்த காலத்திலேயே சியாமா பிரசாத் தன் மனதில் வைத்து பல காய்களை நகர்த்தினார். நேருவின் மதச்சார்பின்மை கொள்கைகள் இந்துக்களுக்கு எதிராக இருக்கிறது என்று எதிர்ப்பு குரலை கிளப்பியவரும் அவர்தான். காங்கிரசுக்கு மாற்றாக நமது நாட்டின் பண்பாடு அடிப்படையில் ஒரு கட்சி உருவாகவேண்டும் என்ற அடிப்படையில் இன்றைய பா.ஜனதா கட்சியின் பிதாமகனான பாரதிய ஜனசங்கம் கட்சியை 1951-ல் நிறுவினார். சுதந்திரத்துக்கு பின்னர் நடந்த முதல் பொதுத்தேர்தலில் அந்த கட்சி சார்பில் போட்டியிட்டு சியாமா பிரசாத் உள்பட 3 பேர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தனர்.

3 பேர் மட்டும் இருந்தாலும், அப்போதைய பிரதமர் நேரு கொண்டுவந்த பல முன்மொழிவுகளை சித்தாந்த ரீதியில் கடுமையாக எதிர்த்தார். வங்காளதேசத்தை பிரித்து கிழக்கு பாகிஸ்தானை உருவாக்க முயற்சி நடந்த நேரத்தில், கொல்கத்தா உள்ளிட்ட வங்காளதேசம் இந்தியாவுடன்தான் இருக்கவேண்டும் என்று போராடி வெற்றி பெற்றார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் சட்டப்பிரிவை ரத்து செய்ய, தடையை மீறி 1953-ம் ஆண்டு மே மாதம் 11-ந்தேதி காஷ்மீருக்குள் நுழைய முயன்றபோது சியாமா பிரசாத் கைது செய்யப்பட்டு, ஸ்ரீநகர் சிறையில் அடைக்கப்பட்டார். அதே ஆண்டு ஜூன் 23-ந்தேதி தன்னுடைய 52-வது வயதில் சிறையிலேயே அவர் மரணமடைந்தது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது. நேருவுக்கு போட்டியாக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் அவரது மறைவு அனைவரையும் உலுக்கியது. மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற கொள்கைகள் பிரதமர் மோடி ஆட்சியில் உயர்த்தி பிடிக்கப்பட்டு வருவதே சியாமா பிரசாத்துக்கு மத்திய அரசாங்கம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகு