தொழில்துறையில் தமிழ்நாடு வியத்தகு முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களும் தங்கள் தொழிற்சாலைக்கு ஏற்ற இடமாக தமிழ்நாட்டைத்தான் மனதில் வைத்து தங்கள் நிறுவனங்களை நிறுவுகிறார்கள். சென்னையை சுற்றிலும் மட்டும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்ட காலம் போய்விட்டது. இப்போது தமிழ்நாடு முழுவதும் தொழில் கேந்திரங்களாக மாறும்வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் தொடங்கப்படுகின்றன. தென் கோடியான தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் கார் கம்பெனி தன் உற்பத்தியை தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் பெரிய நிறுவனங்கள் தொழிலை தொடங்குவதற்கு ஓடோடி வருவதற்கு இங்கு நிலவும் தொழில் அமைதிதான் காரணம்.
இதேபோல மின்சார வசதி இருக்கிறது. தண்ணீர் வசதி இருக்கிறது, ரெயில், விமானம், கப்பல் போக்குவரத்து மிகவும் வசதியாக இருக்கிறது, எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து அனுமதிகளையும் ஒற்றை சாளர முறையில் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதோடு பல சலுகைகளை, ஊக்கங்களை வழங்கி வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதன்மைச்செயலாளர் அருண் ராய் ஆகியோரை தொழில் அதிபர்களால் தங்கள் கோரிக்கைகளுக்காக மிக எளிதாக நினைத்த நேரத்தில் சந்தித்து முறையிடமுடிந்தது. இதனால் அவர்களின் கோரிக்கைகளும் மின்னல் வேகத்தில் நிறைவேறியது. இங்கு உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்ய சென்னை, எண்ணூர், தூத்துக்குடியில் உள்ள துறைமுகங்கள் வசதியாக இருப்பதால் ஏற்றுமதியில் தமிழ்நாடு கொடி கட்டிப்பறக்கிறது.
இந்தியாவிலேயே மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருக்கிறது. கடந்த 2024-25 நிதி ஆண்டில் மட்டும் 14.65 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 36 கோடி) தமிழ்நாட்டில் இருந்து மின்னணு பொருட்கள் ஏற்றுமதியாகியிருக்கிறது. கடந்த ஆண்டு ஏற்றுமதியை விட இது 53 சதவீதம் அதிகமாகும். இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் ஏற்றுமதி 41.2 சதவீதமாகும். 2-வது இடத்தில் கர்நாடகமும், 3-வது இடத்தில் உத்தரப்பிரதேசமும், 4-வது இடத்தில் மராட்டியமும், 5-வது இடத்தில் குஜராத்தும் இருக்கின்றன. இதில் பெருமை என்னவென்றால் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவில் மட்டும் கடந்த ஆண்டைவிட இந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி அதிகரித்து இருக்கிறதே தவிர மற்ற 3 மாநிலங்களிலும் ஏற்றுமதி அளவு குறைந்து இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நோக்கியா நிறுவனம் தன் உற்பத்தியை ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் நிறுத்தியதற்கு மாறாக பாக்ஸ்கான், சான்மினா, பிளெக்ஸ், டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற பல நிறுவனங்கள் இப்போது தமிழ்நாட்டில் தங்கள் தொழிற்சாலைகளில் உற்பத்தியை மேற்கொண்டுள்ளன. மின்னணு தொழிலில் மட்டுமல்லாமல் ஜவுளி ஏற்றுமதியிலும் சுமார் ரூ.73 ஆயிரத்து 925 கோடி துணிகளை ஏற்றுமதி செய்து தமிழ்நாடுதான் முன்னணியில் இருக்கிறது. இந்த பட்டியலில் குஜராத், மராட்டியம், உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதுமட்டுமல்லாமல் மோட்டார் வாகனங்கள், தோல் பொருட்கள், பொறியியல் சார்ந்த உற்பத்தி பொருட்கள், கைத்தறி பொருட்கள் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்திய ஏற்றுமதியில் தமிழ்நாடுதான் இதுவரை முக்கிய பங்காற்றி வந்து இருக்கிறது. தற்போது நிலவி வரும் அமெரிக்கா-ஈரான் போர் பதற்றத்துக்கு பிறகு இந்த நிலை எந்த வகையில் நீடிக்கும் என்பது போக போகத் தான் தெரியும்.