தலையங்கம்

டாஸ்மாக் கடை: இப்போது கேட்டது கிடைக்கும்

குடிமகன்கள் நினைத்தது கிடைக்கவில்லை என்பதால் வேண்டா விருப்புடன் கிடைத்ததை போதைக்காக குடித்து வந்தனர்.

தமிழ்நாட்டில் மதுப்பிரியர்கள் மனம் மகிழும் வகையில் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. மதுபான விற்பனை அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகள் மூலம் நடைபெறுகிறது. இதனால் அரசுக்கும் வரி வருவாய் கிடைத்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 4,048 டாஸ்மாக் கடைகள் மூலம் பிராந்தி, விஸ்கி, ரம், பீர் போன்ற மது வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கடைகளில் 6,473 மேற்பார்வையாளர்கள், 14,379 விற்பனையாளர்கள், 2,025 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 22,877 பேர் பணியாற்றுகிறார்கள். த.வெ.க. அரசு பொறுப்பேற்றப்பிறகு அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. அவர்கள் வாங்கிய சம்பளத்தில் 25 சதவீதம் அளவுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் உயர்த்தப்பட்டது. அதன்படி, மேற்பார்வையாளர்களின் சம்பளம் ரூ.22,313 ஆகவும். விற்பனையாளர்களின் சம்பளம் ரூ.19,413 ஆகவும், உதவி விற்பனையாளர்களின் சம்பளம் ரூ.17,925 ஆகவும் அதிகரித்தது.

அதன்பிறகு இந்த மாதம் முதல் சம்பளம் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023 ஆகவும், விற்பனையாளர்களுக்கு ரூ.30,284 ஆகவும், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 ஆகவும் உயர்த்தப்படும் என்று சட்டசபையில் மானியக்கோரிக்கையின் மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து பேசும்போது அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார். இந்த சம்பள உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது மகிழ்ச்சி மற்றும் வரவேற்புக்குரியது என்று டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.தனசேகரன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நிர்வாக செலவுகளை முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்ததையும் உடனடியாக அமலுக்கு கொண்டுவரவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரூ.500-க்கு மேற்பட்ட விலையுடைய மதுபானங்களை வாங்குபவர்களிடம் யு.பி.ஐ. மூலமாக மட்டுமே பணம் பெறவேண்டும் என்ற உத்தரவும் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.

இதற்கிடையே அனைத்து பணியாளர்களுக்கும் சீருடை நவம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது. மேற்பார்வையாளர்களுக்கு நீல நிற சட்டையும் அடர் நீல நிற முழுக்கால் சட்டையும், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு வெளிர் பிரவுன் கலர் சட்டையும், அடர் பிரவுன் நிற முழுக்கால் சட்டையும் வழங்கப்பட உள்ளது. இது அவர்களுக்கு மிடுக்கான தோற்றத்தை தருவதோடு, கவுரவத்தையும் கொடுக்கும். டாஸ்மாக் கடைகளுக்கு எஸ்.என்.ஜே., எம்.பி., கால்ஸ் (2 நிறுவனங்கள்), டிரான்ஸ்வேல்டு, சிவா, மிடாஸ், அக்கார்டு, எம்.ஜி.எம்., எண்டிரிகா, கோல்டன் வாவட் ஆகிய 11 நிறுவனங்கள் பிராந்தி, விஸ்கி போன்ற இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுவகைகளையும், எஸ்.என்.ஜே., யுனைட்டட் பிரெவரிஸ் (2 ஆலைகள்), டிராபிகல், கால்ஸ் ஆகிய 5 நிறுவனங்கள் பீர் ரகங்களையும் சப்ளை செய்கின்றன.

இந்த சரக்குகள் அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் சமமான அளவிலேயே டாஸ்மாக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. மதுப்பிரியர்கள் பெரிதும் விரும்பி பருகும் மதுவகைகள் விரைவில் விற்று தீர்ந்து விடுகின்றன. அதன்பிறகு இருப்பு இருக்கும் மதுவகைகளை குடிமகன்கள் வேண்டா விருப்புடன் வாங்கும் கட்டாயம் இருந்தது. அதாவது நினைத்தது கிடைக்கவில்லை என்பதால் கிடைத்ததை போதைக்காக குடித்து வந்தனர். இப்போது இந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. மதுப்பிரியர்கள் அதிகம் விரும்பும் மதுவகைகளை மட்டுமே தேவை மற்றும் கோரிக்கைக்கேற்ப வாங்கவேண்டும் என்று பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவால் மதுவிரும்பிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு சம்பள உயர்வு மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்பிறகாவது பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலாக வாங்குவது நிறுத்தப்படவேண்டும் என்பதுதான் மதுப்பிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

SCROLL FOR NEXT