சென்னை,
ஒரு அரசு நிர்வாகத்தில் சிறந்து விளங்கவேண்டும் என்றால், அது ஆட்சியை நடத்தும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களை பொறுத்துதான் இருக்கிறது. என்றாலும் அவர்களுக்கு அச்சாணியாக இருந்து அரசு எந்திரத்தை சுழல வைக்கும் மிகப்பெரும் பொறுப்பு அதிகாரிகளிடம்தான் இருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளுக்கு செயலாக்கம் கொடுப்பதும், அரசு வகுக்கும் திட்டங்கள் மக்களை சென்றடைவதற்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதும் அதிகாரிகள்தான். சினிமாவில் 68 படங்களில் நடித்து தளபதி என்ற அடைமொழியுடன் முடிசூடா மன்னனாக வலம் வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மாண்புமிகு முதல்-அமைச்சர் ஆனார். அரசியல் அனுபவமே இல்லாமல் சினிமாவில் மட்டுமே நடித்த முதல்-அமைச்சர் விஜய்யால் இந்த ஆட்சி கப்பலை சவால்களை தாண்டி இயக்க முடியுமா? என்று தமிழக மக்கள் பலரிடமும் எண்ணம் மேலோங்கியிருந்தது.
ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மேலாக அவர் மிக திறமையாக ஆட்சியை நடத்தி வருகிறார். நல்ல அரசுக்கு தேவை நல்ல அதிகாரிகள் என்ற தாரக மந்திரத்தை நன்றாக புரிந்துகொண்ட விஜய், முதலில் நல்ல அதிகாரிகளை தேர்வு செய்ய, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். வகுத்த பார்முலாவை கையில் எடுத்தார். எம்.ஜி.ஆர். ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன் எப்படி துறைரீதியிலான உயர் அதிகாரிகளை தேர்வு செய்தார் என்பதை அவருடைய செயலாளராக பணியாற்றிய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பிச்சாண்டி விவரித்துள்ளார். அதாவது, ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளில் நேர்மையும், திறமையும் உள்ள அதிகாரிகள் என்று முதல் பிரிவாகவும், நேர்மையின்மையும், திறமையும் உள்ள அதிகாரிகள் என்று 2-வது பிரிவாகவும், திறமையின்மையும், நேர்மையும் உள்ள அதிகாரிகள் என்று 3-வது பிரிவாகவும், நேர்மையின்மையும், திறமையின்மையும் என்று 4-வது பிரிவாகவும் எம்.ஜி.ஆர். பட்டியலிட்டார்.
பின்னர் அந்த 4 பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்ட அதிகாரிகளை அவர்களுக்கு ஏற்ற துறைகளில் நியமித்ததுதான் அவரது ஆட்சியின் வெற்றிக்கு காரணம் என்று பிச்சாண்டி கூறினார். முதல்-அமைச்சர் விஜய்யும் அதே சூத்திரத்தின்படியே இப்போது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்து வருவது மிகப்பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. அதாவது, கடந்த ஆட்சியில் நல்ல பதவியில் இருந்தவர்கள் யார்?, புறக்கணிக்கப்பட்டவர்கள் யார்? என்றெல்லாம் அவர் பார்க்கவில்லை. எந்த பதவிக்கு யார் பொருத்தமானவர்கள்? என்று மட்டுமே பார்த்து நியமித்து வருகிறார். இதற்கு உதாரணமாக தற்போது முக்கிய துறைகளில் பணியாற்றி வரும் ஏராளமான அதிகாரிகளை சொல்லலாம். விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றது முதல் அதிகாரிகளை மாற்றம் செய்வதற்கான படலம் தொடர்ந்து வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 56 போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். நேர்மையும், திறமையும் உள்ள அதிகாரிகளுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை பார்க்கும்போது, இந்த அதிகாரிகளின் பின்னணிகளை பற்றியெல்லாம் அவருக்கு யார் தெரியப்படுத்தினார்கள்? என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. நேர்மையும், திறமையும் உள்ள அந்த அதிகாரிகளும் தங்களது கடமையை உத்வேகத்துடனும், அர்ப்பணிப்புடனும் செய்யத் தொடங்கிவிட்டார்கள். இதற்கு, எடுத்துக்காட்டாக மக்களுக்கு பலன் அளிக்கும் நல்ல பல திட்டங்கள் அடுக்கடுக்காக அறிவிக்கப்பட்டு வருகின்றன. விஜய் நல்ல முன்னுரையை எழுதியிருக்கிறார். இது தொடரவேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் ஆசையாக இருக்கிறது.