அரசியல் கட்சி தலைவர்கள் நிறைவேற்றிய முத்திரை திட்டங்கள், காலங்கள் உருண்டோடினாலும் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்று என்றும் மக்களுக்கு நன்மை பயத்துக்கொண்டேயிருக்கும்.
பெரியார் என்றால் பகுத்தறிவும், சுயமரியாதையும்தான். காமராஜர் என்றால் நினைவுக்கு வருவது அவர் கட்டிய அணைகளும், பசியாற்றிய மதிய உணவு திட்டமும்தான். அண்ணா என்றால் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்த பெயரை நா மணக்க தமிழ்நாடு என்று மாற்றியது அனைவருக்கும் ஞாபகம் வரும். கருணாநிதி என்றால் அன்னை தமிழை செம்மொழி ஆக்கியது மட்டுமின்றி பெரியார், அண்ணா கண்ட கனவான சமூகநீதி திட்டங்களை நனவாக்கியது சிந்தையில் உதிக்கும்.
எம்.ஜி.ஆர். என்றால் அவர் நிறைவேற்றிய சத்துணவு திட்டம், ஜெயலலிதா என்றால் அம்மா உணவகம் திட்டம். அந்த வரிசையில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு புகழ் கொடுப்பது 108 ஆம்புலன்ஸ் திட்டமாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தபோது 2005-ம் ஆண்டு தேசிய ஊரக சுகாதார இயக்க திட்டத்தின் ஒரு அங்கமாக, அன்புமணி ராமதாஸ் அறிமுகப்படுத்தியதுதான் 108 ஆம்புலன்ஸ் திட்டம்.
108 என்ற எண் அப்போது ராணுவத்தின் பயன்பாட்டில் இருந்ததால், அதை ஆம்புலன்ஸ் திட்டத்துக்காக பயன்படுத்த முடியாதநிலை இருந்தது. அந்த நேரத்தில் அவர் பிரதமர் மன்மோகன்சிங், ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, தொலைதொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா ஆகியோருடன் பேசி 108 என்ற டெலிபோன் எண்ணை வாங்கினார். அதன்பிறகு நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை 2008-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். அந்த நேரத்தில் சுகாதாரத்துறையில் சிறப்பு செயலாளராகவும், தமிழ்நாட்டு சுகாதார திட்டத்தின் இயக்குனராகவும் தற்போதைய தொழில்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.விஜயகுமார் இருந்தார். அவர் இந்த திட்டத்தின் செயலாக்கத்துக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.
அதற்குமுன்பு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ, விபத்து ஏற்பட்டாலோ உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல ஆம்புலன்ஸ் சேவையை வசதியுள்ளவர்கள் மட்டுமே அதற்கான கட்டணத்தை செலுத்தி பயன்படுத்தமுடியும் என்ற நிலை இருந்தது. வசதியில்லாதவர்களுக்கு, உறவினர்களை ஆம்புலன்சில் சிகிச்சைக்கு அழைத்து செல்வது எட்டா கனியாகவே இருந்தது. ஆனால் உயிர்காக்கும் தோழனாக 108 ஆம்புலன்ஸ் வந்தப்பிறகு ஒரு பைசா கூட செலவழிக்காமல் பரம ஏழைகள் கூட ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்திக்கொள்ளமுடிந்தது. ஆம்புலன்சில் செல்லும்போதே உயிர் காக்கும் முதல் உதவி சிகிச்சை பெறமுடியும்.
தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையை சுகாதாரத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 'எம்ரி கிரீன் ஹெல்த் சர்வீசஸ்' என்ற நிறுவனம் நடத்திவருகிறது. தமிழ்நாடு முழுவதும் 1,353 ஆம்புலன்சுகள் 108 என்ற எண்ணை தொடர்புகொண்டால் உடனடியாக நோயாளிகள் இருக்கும் இடத்துக்கே வந்து ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து செல்கிறது. 108 என்ற எண்ணை தொடர்புகொண்டால் கிராமப்புறங்களில் அதிகபட்சமாக 10.07 நிமிடங்களிலும், மலைப்பிரதேசங்களில் 14.23 நிமிடங்களிலும், சென்னையில் 6.14 நிமிடங்களிலும் கூப்பிட்ட இடத்துக்கு ஆம்புலன்சுகள் மின்னல் வேகத்தில் வந்து நிற்கும்.
இதுவரை 2 கோடிக்கும் அதிகமான உயிர்கள் 108 ஆம்புலன்சால் காப்பாற்றப்பட்டுள்ளன. முன்பு இருந்ததைவிட இப்போது அழைத்த உடன் சம்பவ இடத்துக்கு வரும் நேரம் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விபத்தில் சிக்குபவர்கள், உயிர் காக்க முக்கியமானதாக கருதப்படும் தங்கமான நேரத்தில் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுவதால் சரியான சிகிச்சையை உடனடியாக பெறமுடிகிறது. ஆக உயிர்காக்கும் பணியை 108 ஆம்புலன்ஸ் 24 மணிநேரமும் செய்வதால், இது ஈடு, இணையற்ற கருணை சேவையாகவே கருதப்படுகிறது. இந்த சேவையை இன்னும் விரிவுபடுத்தவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.