தலையங்கம்

முன்பே பூத்த நீலகிரி குறிஞ்சி மலர்க்கூட்டம்

குறிஞ்சிப் பூ 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூப்பதால், அதனை பார்த்து ரசிக்க சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு திரைப்படத்தில் பாடகர்கள் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி பாடிய, "மலரே குறிஞ்சி மலரே, தலைவன் சூட நீ மலர்ந்தாய், பிறவிப் பயனை நீ அடைந்தாய்” என்ற பாடல், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மலரைப் பற்றிப் பாடியது. இந்த பூ, இந்தாண்டு மேற்கு தொடர்ச்சி மலையில் அதாவது நீலகிரி, கொடைக்கானல், பழனி மலை, ஆனைமலை ஆகிய இடங்களில் பரவலாக பூத்து குலுங்குகிறது. குறிப்பாக, நீலகிரியில் நீண்ட நெடுங்காலமாக இந்தப் பூ அதிகமாக பூத்து வருவதால், நீலகிரி என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது நீலம்+மலை என்ற பொருளில் நீலமலை என்றும் அழைக்கப்படுகிறது. இதேபோல், கேரளம் மாநிலத்தில் மூணாறுக்கு அருகில் உள்ள சோக்ரகுடி மலைப்பகுதிகளிலும் குறிஞ்சி மலர் பூத்து எழில் சேர்த்துவருகிறது.

குறிஞ்சிப் பூ 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூப்பதால், அதனை பார்த்து ரசிக்க சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என்று சங்க இலக்கியங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அத்தகைய குறிஞ்சிப் பகுதிகளில் மட்டுமே இந்தப் பூக்கள் பூப்பதால், குறிஞ்சி என்று அழைக்கப்படுவதாகவும் வரலாறு உண்டு.

இந்தக் குறிஞ்சி மலர் பூக்கும் செடி அப்படியே இருப்பதில்லை. இந்த மலர் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்து, கருகியவுடனேயே அந்தச் செடியும் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு தரையோடு தரையாகக் கலந்துவிடும். அந்தச் செடியில் உள்ள விதைகள் மீண்டும் முளைத்து, செடியாக வளர்ந்து, அதிலிருந்து அடுத்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு பூக்கிறது.

இந்தச் சக்கரம் இப்படி சுழன்று 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்த நிலையில், கடந்த முறை மட்டும் 2018-ல் பூத்த குறிஞ்சி மலர், மீண்டும் 2030-ல் பூத்திருக்க வேண்டிய நிலையில், இப்போது 8 ஆண்டுகளில் மீண்டும் பூத்திருக்கிறது. 1838-ம் ஆண்டு முதல் ஆங்கிலேயர்கள், இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்ததைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்திருக்கிறார்கள். 2000-ம் ஆண்டுக்குப் பிறகுகூட முதலில் 2006-ம் ஆண்டு பூத்த நிலையில், அடுத்து 12 ஆண்டுகள் கழித்து 2018-ல் பூத்தது. அதன்பிறகு 12 ஆண்டுகள் கழித்து 2030-ல்தான் பூக்கும் என்ற சுழற்சியை மாற்றி, 8 ஆண்டுகளில் பூத்திருப்பதன் காரணத்தை யாராலும் அறிய முடியவில்லை.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்தது ஏன்?, இப்போது 8 ஆண்டுகளில் பூத்தது ஏன்? என்பதை அறிவியல் பூர்வமாக யாரும் நிரூபிக்கவில்லை. இந்தக் குறிஞ்சி மலர்கள் தாவரக் கூட்டங்களுக்கு மட்டும் அழகு சேர்க்கவில்லை. இந்தப் பூக்கள் வண்ணத்துப்பூச்சிகளையும், தேனீக்களையும் ஈர்த்து பரவசப்படுத்துகின்றன. இந்த மலர்க்கூட்டத்தைப் பார்க்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் குறிப்பிட்ட பாதையில்தான் செல்ல வேண்டும். குறிஞ்சிப் பூக்களைப் பறிக்கவோ அல்லது கீழே போட்டு மிதிக்கவோ கூடாது. அந்தச் செடிகள் இருக்கும் இடத்தில் பிளாஸ்டிக் பைகளைப் போடக்கூடாது என்று வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். இதை மீறுபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க மத்திய சுற்றுச்சூழல் சட்டத்தில் இடம் இருக்கிறது. மொத்தத்தில், சங்க இலக்கியத்தின் படி காதல், தமிழர் கலாசாரம், பண்பாட்டின் அடையாளமாகவும் குறிஞ்சி மலர்க்கூட்டம் திகழ்கிறது.

SCROLL FOR NEXT