வந்தாலும் வந்தது, மேற்காசிய போர், அனைத்து நாடுகளின் அரசாங்கங்களை மட்டுமல்ல. ஒவ்வொருவரின் பையிலும் கைவைத்துவிட்டது. போரின் உச்சமாக ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டுவரும் கப்பல்களால் அதைக் கடந்து வரமுடியவில்லை. மேலும் வளைகுடாநாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படுவதாகக்கூறி ஈரான் அந்த நாடுகள்மீது நடத்தும் தாக்குதலும் அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துவிட்டது. இதன் விளைவாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளையும் வெகுவாக குறைந்துவிட்டது. விலையும் அதிகரிக்க தொடங்கியது. கச்சா எண்ணெயை போல, எல்.பி.ஜி.யையும் இந்தியா இறக்குமதிதான் செய்கிறது. அதன் சப்ளையும் பெருமளவில் குறைந்துவிட்டது. மாதத்துக்கு 20 லட்சம் டன் என்ற அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்த எல்.பி.ஜி.. இப்போது 10 லட்சம் டன்னுக்கும் கீழ் வந்துவிட்டது.
இதனால் ஏற்பட்ட தாக்கத்தின் முதல் அடி ஓட்டல்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் வணிக சிலிண்டர்கள் மீதுதான் விழுந்தது. முதலில் கொஞ்சநாட்கள் இந்த சப்ளை அடியோடு நிறுத்தப்பட்டு, இப்போது வழக்கமான அளவைவிட குறைவாகவே வினியோகிக்கப்படுகிறது. விலையும் மார்ச் 1-ந் தேதியில் இருந்து 4 முறை உயர்ந்துவிட்டது. சிலிண்டர் விலை உயர்வால் பல ஓட்டல்கள் விறகு, மின்சார அடுப்புகளுக்கு மாறியதால் ஏற்படும் செலவுகளை சமாளிக்கமுடியாமல் காபி, டீ உள்பட அனைத்து உணவுப்பண்டங்களின் விலையும் உயர்ந்துவிட்டது.
இப்போது தாங்க முடியாத சம்மட்டி அடியாக கடந்த 1-ந்தேதி 19 கிலோ எடைகொண்ட வணிக சிலிண்டர் விலை 5-வது முறையாக இதுவரை இல்லாத உயர்வாக 990 ரூபாய் 50 காசு உயர்ந்து, ரூ.3,237 ஆக எகிறி விண்ணை தொட்டுவிட்டது. இதுமட்டுமல்லாமல் வீடுகளிலும், வெளியூர்களில் இருந்து வந்து குடிபுகுந்தவர்களும் பயன்படுத்தும் 5 கிலோ எடைகொண்ட மினிசிலிண்டர் விலையும் 261 ரூபாய் 50 காசு உயர்ந்து 810 ரூபாய் 50 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் ஏற்கனவே உயர்ந்துள்ள உணவுப்பண்டங்களின் விலை இனி மேலும் கடுமையாக உயரப்போகிறது. வணிக சிலிண்டர் விலை உயர்வு ஓட்டல்களை மட்டுமல்லாமல், அதிக வேலைவாய்ப்புகளை தரும் ஜவுளி, தோல், ரப்பர், ரசாயனப்பொருட்கள் போன்ற பல பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளையும் பெரிதும் பாதித்திருக்கிறது. அங்கு பணியாற்றும் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்திக்கும் அபாயமும் உள்ளது. அதுமட்டுமல்லாமல், அங்கு தயாரிக்கும் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்போகிறது. குறிப்பாக துணிவிலை 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை ஏற்றம் காணப்போகிறது.
அடுத்து வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை மட்டுமல்லாமல், பெட்ரோல்-டீசல் விலையும் விரைவில் உயரப்போகிறது. முன்னே மணி ஓசையாக வணிக சிலிண்டர் விலை உயர்வு வந்து எகிறிவிட்டது. பின்னே யானையாக பெட்ரோல்-டீசல் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர இருக்கிறது. மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி இந்த விலை உயர்வு பற்றி பேசுகையில், 'நேரம் வரும்போது இதுகுறித்து மத்திய அரசாங்கம் முடிவெடுக்கும்' என்று சூசகமாக மணியடித்துவிட்டார். இந்த மணி ஓசை எப்போது ஒலிக்கப்போகிறது என்பதுதான் இப்போதைய கேள்விக்குறியாக இருக்கிறது. இதுபோன்ற விலை உயர்வை மக்கள் மட்டும் சுமக்காமல், மத்திய அரசாங்கம்-எண்ணெய் நிறுவனங்கள்-மக்கள் என அவரவர் தாங்கும் சக்தியை நிர்ணயித்து பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்பதே இந்த விலை உயர்வின் பாடமாக இருக்கிறது.