தலையங்கம்

பலமாக ஒலித்த விசில் சத்தம்

234 தொகுதிகளிலும், எந்த கூட்டணியிலும் சேராமல் தனித்து போட்டியிட்ட த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

"இவன் போட்ட கணக்கொன்று, அவள் போட்ட கணக்கொன்று, இரண்டுமே தவறானது. யார் போட்ட புதிருக்கோ. இருவரும் விடையாகி நின்றதே முடிவானது" என்று கே.பி.சுந்தராம்பாள் பாடியுள்ளார். தேர்தலுக்கு முன், பின் நடந்த பெரும்பாலான கணிப்புகளில் தி.மு.க. தான் வெற்றி பெறும் என்றும், சில கணிப்புகளில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டது. அதிலும் வேடிக்கை என்னவென்றால், அனைவரும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒற்றைப்படை எண்ணிக்கையில் மட்டுமே இடங்கள் கிடைக்கும் என்று கணித்திருந்தனர். தந்தி டி.வி. கணிப்பில் மட்டும் இழுபறி என்று சொல்லப்பட்டது. ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. ரவி மட்டுமே. தமிழக வெற்றிக் கழகமே வெற்றி பெறும் என்று உறுதியாக தெரிவித்திருந்தார். இதுதான் போலீஸ் மூளை!

இந்த தேர்தலில் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகமும் களமிறங்கியது. "என்னுடன் கூட்டணி சேருபவர்களுக்கு ஆட்சியிலும். அதிகாரத்திலும் பங்கு" என்று 2024-ம் ஆண்டு விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டில் அவர் வெளிப்படையாக அறிவித்தார். இருந்தாலும், இந்தத் தேர்தல் வரை யாரும் அவருடன் கூட்டணி அமைக்கவில்லை. அடுத்து, 2025-ம் ஆண்டு மதுரை மாநாட்டில் விஜய் பேசும்போது, த.வெ.க. வேட்பாளர் பட்டியலில் 'ஒரு சர்ப்ரைஸ்' என்று கூறி, மதுரை கிழக்கு-விஜய், மதுரை மேற்கு-விஜய் என்று அந்த மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளையும் குறிப்பிட்டு, பின் "234 தொகுதிகளிலும் நான்தான் வேட்பாளர்" என்று அறிவித்தார்.

விஜய் கேட்டுக் கொண்டபடி, ஜனவரி 23-ந்தேதி தேர்தல் கமிஷன் "விசில்" சின்னத்தை ஒதுக்கியது. அந்த நாள்முதல் மாநிலம் முழுவதும் விசில் விற்பனை மிகுந்த வேகத்தில் நடைபெற்றது. எங்கும் விசில் சத்தம் ஒலிக்கத் தொடங்கியது. விஜய் எங்கு சென்றாலும் இளைஞர் பட்டாளம், குறிப்பாக இளம்பெண்கள் உள்பட பெரும் கூட்டம் திரண்டது. இப்போது த.வெ.க. பெற்ற வெற்றி மிகப் பெரியதாக இருந்தாலும், தி.மு.க.வின் கோட்டையாக கருதப்பட்ட சென்னையின் 14 தொகுதிகளையும் த.வெ.க. கைப்பற்றியது விஜய்க்கு கிடைத்த இமாலய வெற்றியாகும். மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். காலத்தில் கூட, முதல் தேர்தலில் சென்னையில் ஒரு இடத்தில் மட்டும் அதாவது ஆர்.கே.நகர் தொகுதியில் ஐசரி வேலன் வெற்றி பெற்றார்.

ஆனால் தனது முதல் தேர்தலிலேயே விஜய் சென்னையில் 14 தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து. வரலாற்றில் தனக்கென இடம் பிடித்துள்ளார். பல தொகுதிகளில் விஜய் நிறுத்திய வேட்பாளர்களின் பெயரையே அறியாத வாக்காளர்கள் கூட, அதை பொருட்படுத்தவில்லை. அவர்கள் "விசில்" சின்னத்தைத் தேடி, மனதில் விஜய்யின் முகத்தை நினைத்து வாக்களித்துள்ளனர். 234 தொகுதிகளிலும், எந்த கூட்டணியிலும் சேராமல் தனித்து போட்டியிட்ட த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது பிரபலமானவர்கள் தான் எம்.எல்.ஏ. ஆக முடியும் என்ற பிம்பத்தை உடைத்து இருக்கிறது. எந்தெந்த கட்சிகள் இனி விஜய் பக்கம் தாவப்போகிறது என்ற அரசியல் அதிசயங்களை வரும் நாட்களில் பார்க்கப் போகிறோம். 1967-ம் ஆண்டுக்கு பிறகு திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக ஒரு கட்சி வெற்றி பெற்று இருக்கிறது. மொத்தத்தில் ஒரு அரசியல் வரலாற்றை மக்கள் இந்த தேர்தல் முடிவில் பதிவு செய்து விட்டார்கள்.