முதல்-அமைச்சர் விஜய் பதவியேற்றதில் இருந்து தேர்தல் அறிக்கையில் தான் அறிவித்ததை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அந்தவகையில், அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் தாய்மாமன் சீராக வழங்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முதல்-அமைச்சர் விஜய்யே தாய்மாமனாக இருந்து முதல் சீரை செய்துவருகிறார். அடுத்து திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் அனைத்து ஏழை பெண்களுக்கும் 'நான் அண்ணன்' என்று சொல்லும் விதமாக, தேர்தல் அறிக்கையில் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு 8 கிராம் அதாவது ஒரு பவுன் தங்கமும், பட்டு சேலையும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அது விரைவில் செயல்பாட்டுக்கு வரப்போகிறது. ஆனால் இப்போது ஒரு சிறிய மாற்றத்துடன் இந்த திட்டத்துக்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்துக்கான பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ரூ.2.5 லட்சத்துக்குள் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது பயனாளிகளின் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்கும்.
அதாவது, ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால் பயனாளிகளான 60 ஆயிரம் பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் 8 கிராம் தங்க நாணயமும், பட்டு சேலையும் வழங்குவதற்காக கொள்முதல் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இ-டெண்டர் மூலம் நடைபெறப்போகும் இந்த 60 ஆயிரம் தங்க நாணயங்களுக்கான டெண்டர் டிசம்பர் மாதம் 7-ந்தேதி திறக்கப்படுகிறது.
இந்த தங்க நாணயங்கள் 22 காரட் தூய்மை அளவீட்டில் 22 மில்லி மீட்டர் விட்டத்துடனும், 1.10 மில்லி மீட்டர் தடிமனாகவும் இருக்கவேண்டும். நாணயத்தின் முன்புறம் தமிழக அரசு முத்திரையும், பின்புறம் இந்திய தர நிர்ணயத்தின் 916 என்ற ஹால்மார்க் முத்திரையும் பொறிக்கப்பட்டு இருக்கவேண்டும். இதேபோல 60 ஆயிரம் பட்டு சேலைகள் வாங்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதுவும் இ-டெண்டர்தான்.
இந்த டெண்டர் டிசம்பர் 8-ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக எந்த நிறுவனம் தங்க நாணயம் சப்ளை செய்யப்போகிறது?, எந்த நிறுவனம் பட்டு சேலைகளை சப்ளை செய்யப்போகிறது? என்பது டிசம்பர் 7, 8-ந்தேதிகளில் தெரிந்துவிடும். பட்டு சேலைகளை பொருத்தமட்டில் 100 சதவீதம் சுத்தமான 'மல்பெரி பட்டு சேலையாக ஜரிகையுடன் இருக்கவேண்டும். சேலை 5.5 மீட்டர் நீளத்துடனும், அதற்கான ரவிக்கை 0.70 மீட்டர் துணியாகவும் இருக்கவேண்டும்.
சேலையின் அகலம் 1.15 மீட்டராக இருக்கவேண்டும். சேலை 430 கிராம் எடையுடன் பல வண்ணங்களில் இருக்கவேண்டும் என்றும், சில்க் மார்க் சான்றிதழ் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஜாக்கெட் தைக்க 0.70 மீட்டர் துணி என்பது இயல்பான உடல்வாகு உள்ள சராசரியான பெண்களுக்கே போதாது என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது.
தரம்தான் எப்போதும் நிரந்தரம் என்பதால் தங்க நாணயத்திலும், பட்டு சேலையின் தரத்திலும் எந்த சமரசமும் கிடையாது, உரிய விலையில் மிக உயர்ந்த தரத்தில் மணப்பெண்களுக்கு பிடித்தவகையில் இருக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக சொல்கிறார் சமூக நலத்துறை செயலாளர் பல்லவி பல்தேவ். அவரும் பெண் என்பதால் நிச்சயமாக இந்த தேர்வு மங்கைகளின் மனம் கவரும் வகையில் நிச்சயமாக இருக்கும்.