கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் நேற்று தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் நேற்று முதல் கட்டமாக 152 தொகுதிகளிலும் தேர்தல் நடந்தது. அடுத்த கட்டமாக 142 தொகுதிகளுக்கு வருகிற 29-ந்தேதி தேர்தல் நடக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் ஓட்டு எண்ணிக்கை மே மாதம் 4-ந்தேதி நடந்து, ஜெயிக்கப்போவது யார்? என்பது தெரிந்துவிடும். 5 மாநிலங்களிலும் ஆட்சிக்கான புதிய அத்தியாயம் எழுதப்படும். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலுமே வாக்குப்பதிவு தொடங்கிய 7 மணிக்கே வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை இருந்தது. பல வாக்குச்சாவடிகளில் காலை 6.30 மணிக்கே வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து நிற்க தொடங்கினார்கள்.
இந்த ஆர்வத்தின் விளைவு எதை நோக்கியதாக இருக்கும்?, யாருக்கு ஆதரவாக இருக்கும்?, யாருக்கு எதிராக இருக்கும்? என்ற புதிருக்கெல்லாம் மே 4-ந்தேதி விடை கிடைத்துவிடும். ஜனநாயக கடமையை நிறைவேற்ற இவ்வளவு ஆர்வமாக இருந்த பொதுமக்களுக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த கெடுபிடிகள் சொல்லி மாளாது. உயர் அரசு அதிகாரிகள் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு தூக்கி அடிக்கப்பட்டனர். மக்கள் எவ்வளவு இன்னல்களை சந்தித்தனர் என்பதற்கு தேர்தல் கமிஷன் மிக பெருமையோடு மேற்கு வங்காளம், தமிழ்நாட்டில் கைப்பற்றிய பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.1,072 கோடி என்று பட்டியலிட்டதே சான்றாகும். தேர்தல் கமிஷன் நியமித்த பறக்கும் படை வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கவே இவ்வளவு கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்தது என்று என்னதான் காரணம் சொன்னாலும் அது உண்மையல்ல என்பது பாமர மக்களுக்கு கூட தெரியும்.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்வோம் என்று காய்கறி வாங்கப்போன வியாபாரிகள், ஆடு, மாடு வாங்கப்போனவர்கள், ஆஸ்பத்திரிக்கு நோயாளிகளை அழைத்துச்சென்றவர்கள், மளிகை கடைக்காரர்கள், பள்ளி, கல்லூரி கட்டணம் செலுத்த சென்றவர்கள் என யாரையும் விட்டுவைக்கவில்லை. வியாபாரிகள் பணம் கொண்டு செல்லமுடியாததால் ஈரோடு உள்ளிட்ட மாட்டுச் சந்தைகள் வெறிச்சோடி கிடந்தன. ஆனால் தேர்தல் கமிஷனின் நோக்கம் எதுவும் நிறைவேறவில்லை என்றும், அரசியல் கட்சிகளால் வாக்காளர்களுக்கு மிக தாராளமாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகவும் முணுமுணுப்பு செய்திகள் கிளம்பியுள்ளன. வாக்காளர்கள் பலரும் எங்கள் தொகுதியில் இவ்வளவு பணம் கொடுத்தார்கள். உங்கள் தொகுதியில் எவ்வளவு கொடுத்தார்கள்? என்று விசாரித்ததை பரவலாக கேட்கமுடிந்தது.
ஆக தேர்தல் கமிஷன் தடுக்க நினைத்த பணப்பட்டுவாடா வெற்றிகரமாக நடந்துமுடிந்துவிட்டது. துள்ளாட்டம் போட்டு ஓடும் மாட்டை பிடிக்க அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள தும்பை பிடிப்பதற்கு பதிலாக, அதன் பின்னால் ஓடி வாலை பிடித்த கதையாக மக்களிடம் இருந்துதான் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்துவிட்டீர்கள். அதை திரும்பப்பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கடினமான நிர்வாக நடைமுறைகளை அதாவது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சில நூறு ரூபாய்கள் அதிகமாக வைத்திருந்த பணத்தை மீண்டும் பெற கால்கடுக்க அலைந்து திரியவேண்டிய நிலையை மாற்றி எளிமைப்படுத்தவேண்டும். தேர்தல் கமிஷன் கைப்பற்றியது மக்கள் வியர்வை சிந்தி சம்பாதித்த பணம். தேர்தல் முடிந்துவிட்டதால் அந்த பணத்தை அவர்களிடமே திரும்பக்கொடுக்க என்ன நடைமுறை வேண்டும்? எனவே கைப்பற்றியதுபோல மனிதாபிமான அடிப்படையில் பணத்தை திரும்பக்கொடுக்க வேண்டும்.