மத்திய மற்றும் மாநில அரசுகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி செய்தாலும், நிர்வாகத்தை பெரும்பாலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அதிகாரிகள்தான் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிர்வாக முறை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கியது. அப்போது இங்கிலாந்தில் ஹெய்லிபரி கல்லூரியில் பயின்றவர்களே இந்தியாவில் அகில இந்திய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர். பின்னர் போட்டித் தேர்வு மூலம், தேர்வு செய்யும் நடைமுறை 1854-ம் ஆண்டு தொடங்கியது. இந்த தேர்வுகள் இங்கிலாந்தில் மட்டுமே நடந்து வந்தன. முதன் முதலில் 1922-ம் ஆண்டு இந்தியாவில் அலகாபாத், பின்பு டெல்லி என இந்த தேர்வுகள் நடக்கத் தொடங்கின. 1926-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி 'பப்ளிக் சர்வீஸ் கமிஷன்' நிறுவப்பட்டது. அதன் முதல் தலைவராக சர் ராஸ் பார்க்கர் நியமிக்கப்பட்டார்.
பின்னர், 1935-ல் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசு சட்டத்தின் அடிப்படையில் அது 'பெடரல் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்' என பெயர் மாற்றப்பட்டது. 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி இந்திய அரசியலமைப்பு அமலுக்கு வந்தபோது, யு.பி.எஸ்.சி. அதாவது மத்திய பணியாளர் தேர்வாணையம் என பெயர் மாற்றம் பெற்றது. இந்த தேர்வாணையம் விண்ணப்பதாரர்கள் நகரம்-கிராமம், மேல்தட்டு-கீழ்தட்டு, ஆங்கிலத்தில் புலமை உள்ளவர்களா?, இல்லையா? என்பதை எல்லாம் பார்ப்பதில்லை. 'கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே' என்ற பகவத் கீதையின் போதனைக்கு ஏற்ப எந்த சார்பும் இல்லாமல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், காலியிடங்களின் அடிப்படையில் நவீன முறையில் போட்டித் தேர்வுகள் நடைபெறுகின்றன. பூர்வாங்க தேர்விற்கு 10 லட்சம் முதல் 12 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கின்றனர். 48 விதமான பாடங்கள், 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் தேர்வுகள் நடைபெறுகின்றன.
நாடு முழுவதும் 2,500-க்கும் மேற்பட்ட மையங்களில் இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. விடைத்தாள்களை 48 பாட நிபுணர்கள் திருத்துகின்றனர். வினாத்தாள்கள் உருவாக்குபவர்கள் யார், திருத்துபவர்கள் யார்? என்பது கூட யாருக்கும் தெரியாது. இவர்கள்தான் யு.பி.எஸ்.சி.யின் "முதுகெலும்பு”. ஆகவே, நாட்டின் நிர்வாக அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் பணி முழுவதற்கும் யு.பி.எஸ்.சி.தான் பொறுப்பேற்கிறது. அதன் வழியாக தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகள், மக்களின் வாழ்வை நேரடியாக தொடும் முக்கியமான பணிகளை செய்கிறார்கள் என்பதால், இந்த அமைப்பின் பணி அடிப்படையானதாகவும், அத்தியாவசியமானதாகவும் திகழ்கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.ஒ.எஸ். (வனத்துறை) ஆகிய அகில இந்திய பணிகள் மட்டுமின்றி, மத்திய சிவில் சேவைகள் குரூப்-ஏ மற்றும் குரூப்-பி ஆகிய பணியிடங்களுக்கும் யு.பி.எஸ்.சி. மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கடந்த ஆண்டு மட்டும் சுமார் 11 ஆயிரம் பணியிடங்கள் அதன் மூலம் நிரப்பப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். இடையில் இதில் தொய்வுகள் ஏற்பட்டு பின்னர், அந்த எண்ணிக்கை தற்போது சற்று உயர தொடங்கியுள்ளது. இதனை மேலும் அதிகரிக்க தமிழக அரசு இலவச பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது. அதேபோல் சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை மூலம் ஏராளமானோர் இலவச பயிற்சி பெறுகின்றனர். நூற்றாண்டை நிறைவு செய்திருக்கும் யு.பி.எஸ்.சி.யின் வரவிருக்கும் தேர்வுகளில், தமிழகத்திலிருந்து அதிகமான இளைஞர்கள் வெற்றி பெற்று, நாட்டின் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.