சென்னை,
கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த முயற்சிகளின் பலனாக இந்தியாவுக்கும், 27 நாடுகளைக்கொண்ட ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியின் முன்னிலையில் கையெழுத்தான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பர வர்த்தகத்துக்கு மிக விசாலமாக வழிகளை திறந்துவிட்டது. அனேகமாக அனைத்து பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு வரி கிடையாது என்ற நிலை உருவாகிவிட்டது. இது நடைமுறைக்குவர சிலமாதங்கள் ஆகும் என்றாலும், அதை சார்ந்து இருநாடுகளிலும் உற்பத்தி பெருக்கம் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதற்கான அடையாளங்கள், திட்டமிடுதல் ஆகியவை இப்போதே தொடங்கிவிட்டன.
அமெரிக்காவின் வரி பாதிப்புகளை இந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் சரிசெய்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. ஒரு புதிய வானம் தெரிகிறது. உலகத்தையே கவர்ந்து இருக்கும் ஒரு மையமாக இந்தியாவை இந்த ஒப்பந்தம் ஆக்கியிருக்கிறது என்று பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டிலும் ஜவுளி, ஆடை மற்றும் தோல்பொருள் தொழில் என பல தொழில்களில் மறுமலர்ச்சி ஏற்படும். வேலைவாய்ப்புகள் மற்றும் வர்த்தகம் பெருகும். இந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவிலும் மற்றும் ஐரோப்பிய யூனியனிலும் உள்ள 27 நாடுகளில் மட்டுமல்லாமல் சர்வதேச ஊடகங்கள், வெளிநாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள், உலகளாவிய வர்த்தக தலைவர்கள், கொள்கை வகுப்பவர்கள் ஆகியோர்களிடமும் வலுவான, ஆக்கப்பூர்வமான பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்தம் பொருளாதார ரீதியாகவும் வரலாற்று சிறப்புமிக்கது. உரியநேரத்தில் செய்யப்பட்டது. உத்தி சார்ந்தது என்று பலராலும் விவரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் புகழ்பெற்ற 'வால் ஸ்டிரீட் ஜர்னல்' என்ற பத்திரிகை அமெரிக்க வர்த்தக கொள்கைகளால் உருவாக்கப்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மைக்கு இடையே கூட்டணிகளை விரிவாக்குவது எவ்வாறு? என்பதை இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான ஒப்பந்தம் எடுத்துக்காட்டுகிறது என்று கூறியுள்ளது. 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை சுமார் 20 ஆண்டுகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு உலகின் மிகப்பெரிய அதிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்கள் இணைந்து இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கிறது. 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை தன் தலைப்பு செய்தியில் 'வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்' இது என்று குறிப்பிட்டுள்ளது. 'பாக்ஸ் நியூஸ்' தொலைக்காட்சியில் பேசிய பாகிஸ்தான் பத்திரிகையாளர் உமர் சீமா பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகள் இனி ஐரோப்பிய சந்தையில் இந்தியாவுடன் போட்டியிட இயலாது என்று கூறியுள்ளார்.
இதுபோல டெலிகிராப், புளூம்பெர்க், கார்டியன், பிபிசி, அசோசியேட் பிரஸ், ராய்ட்டர்ஸ் போன்ற பல ஊடகங்கள், பத்திரிகைகள் இந்த ஒப்பந்தத்தை பாராட்டி செய்திகளை பதிவு செய்துள்ளன. இதுமட்டுமல்லாமல், ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பிரதமர்கள், அதிபர்கள் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளனர். ஏர் பஸ், வோக்ஸ்வேகன், பி.எம்.டபிள்யு., மெர்சிடஸ் பென்ஸ் போன்ற இந்தியாவில் உள்ள ஐரோப்பிய, உலகளாவிய நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள், பல்வேறு வர்த்தக சபைகளின் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தை வெகுவாக பாராட்டியதோடு மட்டுமல்லாமல், உயர்வான வளர்ச்சிகளுக்கு இது வித்திடும் என்று தெரிவித்துள்ளனர். உலகமே வியந்து பாராட்டும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் நீண்டகால வளர்ச்சிக்கான இலக்குகளை மிகவேகமாகவும், எளிதாகவும் அடைய முடியும். மொத்தத்தில், உலகத்தின் பாராட்டு மழையில் இந்த ஒப்பந்தம் இந்தியாவை மகிழ்வடைய செய்திருப்பது மட்டுமின்றி, புதிய உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது.