உலகிலேயே மிக உயரியதும், கவுரவமிக்கதுமான நோபல் பரிசு இந்த ஆண்டு தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குக் கிடைத்திருப்பது. அன்னைத் தமிழுக்குக் கிடைத்த பெருமையாகக் கருதப்படுகிறது.
இந்தாண்டு நோபல் பரிசு வழங்கப்படுவதன் 125-வது ஆண்டாகும். சுவீடன் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற வேதியியலாளரும், ‘டைனமைட்' வெடிப்பொருளை கண்டுபிடித்தவருமான ஆல்பிரட் நோபலின் நினைவாகவும், அவர் எழுதிய உயிலின் அடிப்படையிலும் புகழ்மிக்க நோபல் பரிசு 1901-ம் ஆண்டு முதல் வேதியியல், இயற்பியல், உடலியங்கியல் அல்லது மருத்துவம், இலக்கியம், அமைதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.
அதற்கான பரிசுத்தொகை இந்திய மதிப்பில் ரூ.11.6 கோடியாகும். இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சர் சி.வி.ராமன் 1930-ம் ஆண்டிலும், சுப்பிரமணியன் சந்திரசேகர் 1983-ம் ஆண்டிலும் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனர். வெங்கடராமன் ராமகிருஷ்ணன் 2009-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைத் தனக்கே வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பலமுறை பொதுவெளியில் பேசி வந்தார். ஆனாலும், நார்வே நோபல் குழுத்தலைவர் ஜோர்ஜன் வாட்னே பிரைட்னெஸ் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு. இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 85 வயது தமிழ் வம்சாவளிப் பெண்ணும், சட்ட நிபுணருமான நவநீதம் பிள்ளையை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது.
நவநீதம் பிள்ளையின் மூதாதையர்கள், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் 1860-ம் ஆண்டு ஆங்கிலேய அரசால் தென்னாப்பிரிக்காவுக்குத் தேயிலைத் தோட்டப் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள். நவநீதம் பிள்ளையின் தந்தை ஒரு பஸ் டிரைவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவர், டர்பன் நகரத் தமிழர்களின் உதவியுடன் பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்தார். பின்னர், சட்டம் பயின்று, அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடிய நெல்சன் மண்டேலா சிறையில் இருந்தபோது, அவருக்கு மனித உரிமைகளின் அடிப்படையில் அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட வேண்டும் என்று நவநீதம் பிள்ளை போராடினார். இதன் விளைவாக, நெல்சன் மண்டேலா ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பின்னர் ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஆணையர் பதவியையும் வகித்தார். நோபல் பரிசுக்கு நவநீதம் பிள்ளையின் பெயர் அறிவிக்கப்பட்டதை டிரம்ப்பால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது தனக்கும். அமெரிக்காவுக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என்றும், அமெரிக்கா இதை ஒருபோதும் மறக்காது என்றும் அவர் விமர்சித்து வருகிறார்.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி, நவநீதம் பிள்ளை 'தந்தி' டி.வி.க்கு சிறப்பு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர், "எனது தமிழ் இன அடையாளத்தை நான் ஒருபோதும் மறக்கவில்லை. தமிழர் என்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். நாம் வளர்ந்த பண்பாடு மற்றும் மதிப்புகளைத் சரியாக புரிந்துகொண்டுள்ளோம்” என்று பெருமையோடு கூறியிருந்தார்.
நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு வழங்குவதை, செந்தமிழ் நாட்டுத் தமிழச்சிக்கு கிடைத்த பொக்கிஷமாக கருதி தமிழ்நாட்டில் உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். இது உலக அரங்கில் தமிழ்நாட்டுக்கும், தமிழ் இனத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய கவுரவமும், பெருமையும் ஆகும்.