தலையங்கம்

இது ஒரு துல்லியமான வாக்காளர் பட்டியல்

மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 215 தொகுதிகளில் பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், முகவரி மாற்றங்களை திருத்தவும் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை வாய்ப்பளிக்கப்படுகிறது. தேர்தல் கமிஷன் தூய்மையான வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்காக சிறப்பு தீவிர திருத்த பணிகளை அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்வதாக கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இது புதிதாக வாக்காளர்களை சேர்ப்பதற்காக அல்ல. வேண்டாத வாக்காளர்களை நீக்குவதற்காகவே என்று கூறி நாடுமுழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டன. ஆனாலும் தேர்தல் கமிஷன் இதில் உறுதியாகவே இருந்தது. சிறப்பு தீவிர திருத்த பணிகளை கைவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் தேர்தல் கமிஷனுக்கு பச்சைக் கொடி காட்டியது.

இதனால் முதலில் பீகாரில் தொடங்கிய இந்த பணி, தொடர்ந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளப்போகும் தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்காளம் உள்பட 9 மாநிலங்கள், புதுச்சேரி உள்பட 3 யூனியன் பிரதேசங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த பணிக்காக வீடு, வீடாக வந்து வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி வெளியிடப்பட்ட நிலவரப்படி, தொடர்ந்து சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 6.41 கோடி வாக்காளர்கள் மட்டுமே இருந்தனர். அதற்குப்பிறகு டிசம்பர் 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், இந்த எண்ணிக்கை 5.44 கோடியாக குறைந்தது. இதில் பெயர் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த பணிகளை முடித்தப்பிறகு கடந்த திங்கட்கிழமையன்று இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். இதில், ஏற்கனவே பட்டியலில் இருந்த 74.07 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு, 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 77.07 லட்சம் பெயர்கள் நீக்கமா? என்று மலைக்கலாம். ஆனால் யார்? யார்? பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என்பதை தேர்தல் ஆணையம் தெளிவாக தெரிவித்துள்ளது.

இவர்களில் 27 லட்சம் பேர் உயிரோடு இல்லை. 3 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள். மீதம் உள்ளவர்கள் நிரந்தரமாக இடம் மாறிவிட்டனர். இந்த வாக்காளர் பட்டியலின்படி, ஆண்களைவிட 12.22 லட்சம் பெண்கள் அதிகமாக இருக்கின்றனர். இதுபோல மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 215 தொகுதிகளில் பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

18 வயதில் இருந்து 19 வயது வரையுள்ள புதிய வாக்காளர்கள் என்றால் 12.51 லட்சம் பேர்தான் இருக்கிறார்கள். அதுபோல 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 3.99 லட்சம் பேர் அங்கம் வகிக்கிறார்கள். 103 தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கு மேல் குறைந்திருக்கிறது.

அதிகபட்சமாக சென்னையில் 29.3 சதவீதம் சரிந்திருக்கிறது. வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் கவலை அடையவேண்டியதில்லை. வேட்புமனு தாக்கலின் இறுதி நாளுக்கு 10 3 நாட்களுக்கு முன்புவரை தங்கள் பெயர்களை சேர்க்கமுடியும். ஆக மொத்தத்தில் இந்த வாக்காளர் பட்டியல் மிக துல்லியமான வாக்காளர் பட்டியலாகும்.

தகுதியுள்ள வாக்காளர்கள் ஜனநாயக கடமையாற்றி தங்களுக்கு விருப்பமானவர்களை தேர்வு செய்யமுடியும். எது எப்படி என்றாலும், இல்லத்தை ஆளும் அரசிகள்தான் ஒருவிரல் புரட்சி செய்து புதிய அரசை அமைக்க கை கொடுக்கப்போகிறார்கள்.