விவசாயத்துக்கு அடிப்படைத் தேவையே தண்ணீர்தான். விதைப்பு முதல் அறுவடை வரை ஒவ்வொரு பருவத்திலும் தடையில்லாமல் கிடைக்கும் தண்ணீர்தான் பயிரின் விளைச்சலை உறுதி செய்கிறது.
காவிரி டெல்டாவில் உள்ள 13 மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கர்நாடகத்தில் பிறந்து தமிழ்நாட்டுக்கு தவழ்ந்து வரும் காவிரி ஆற்றுத் தண்ணீர்தான் அந்த மாவட்டங்களுக்கு உயிர்நாடி.
வறட்சியைச் செழிப்பாக்க புரட்சியாய் ஓடி வரும் காவிரி ஆற்றில் இருந்துதான் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்கான நீர்ப்பிடிப்புப் பகுதிகளும் கர்நாடக மாநிலத்தில்தான் இருக்கின்றன. தென்மேற்குப் பருவமழை கர்நாடகாவில் நன்றாகப் பெய்தால்தான், மேட்டூருக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். அதனால்தான் தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் பெய்யாவிட்டாலும், கர்நாடகாவில் அதிகமாகப் பெய்தால் தமிழக மக்கள் அளவில்லா மகிழ்ச்சி அடைவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டதால், கர்நாடகாவில் இருந்து காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி மேட்டூர் அணைக்கு திறந்து விட வேண்டிய தண்ணீர் வந்து சேரவில்லை. அதனால்தான் வழக்கமாக ஜூன் 12-ந்தேதி திறந்து விடப்படவேண்டிய தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டு திறந்து விடப்படவில்லை. எனவே காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட வேண்டிய குறுவை நெல் சாகுபடியை முழுமையாகத் தொடங்க முடியாமல் நிலத்தடி நீர் மற்றும் கிணற்றுப் பாசனத்தை நம்பி 3½ லட்சம் ஏக்கரில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டது.
பொதுவாக குறுவை சாகுபடியின் பயிர்க்காலம் ஏறத்தாழ 120 நாட்கள். இதற்கு மேட்டூர் அணையில் இருந்து மட்டும் 50 டி.எம்.சி. தண்ணீர் தேவை. ஆனால் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடி குறுகி போனது.
அடுத்து உள்ள சம்பா சாகுபடி இந்த மாதம் வழக்கமாக தொடங்கவேண்டும். இந்தப் பயிரின் காலம் குறைந்தபட்சம் 150 நாட்களாகும். இந்தச் சாகுபடிக்கான நிலப்பரப்பளவு 12 லட்சம் ஏக்கராகும். இதற்கான நீர்த்தேவையை மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும், டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் வடகிழக்குப் பருவமழையும்தான் பூர்த்தி செய்கின்றன. இந்தப் பயிருக்கு 140 டி.எம்.சி. தண்ணீர் தேவையாகும். முதல்-அமைச்சர் விஜய், மேட்டூரில் இருந்து கடந்த 1-ந்தேதி தண்ணீரை திறந்து வைத்திருக்கிறார். அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்தத் தண்ணீர் நாளை இரவு கல்லணையை அடைந்து கடைமடைக்குச் செல்ல இன்னும் சில நாட்கள் ஆகும். மேட்டூர் அணையில் இருந்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந்தத் தண்ணீர் பயிர் சாகுபடிக்கு போதாது. எனவே காவிரி மேலாண்மை குழு பிறப்பித்துள்ள உத்தரவுப்படி கர்நாடக அரசை தண்ணீர் திறந்துவிட வலியுறுத்துமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. வருணபகவானின் கருணைப் பார்வை கிடைத்து, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நன்றாகப் பெய்தால் விளைந்த நெற்கதிர்கள் தலைசாய்ந்து சம்பா அறுவடையும் சிறப்பாக நடக்கும், தாளடியையும் தொடங்கி விவசாயிகள் மகிழ்ச்சியில் பொங்குவார்கள்.