தலையங்கம்

இன்று உலக நீரிழிவு தினம்

கனடா நாட்டை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி பிரெடெரிக் பாண்டிங் பிறந்த நாளான நவம்பர் 14-ந்தேதி நீரிழிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

1991-ம் ஆண்டு முதல் நவம்பர் 14-ந்தேதி உலக நீரிழிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நீரிழிவு நோய் மனிதனுக்கு சரித்திர காலந்தொட்டே இருந்தாலும், அதற்கான மருந்துகள் பிற்காலங்களில்தான் கண்டுபிடிக்கப்பட்டன. நீரிழிவு நோய்க்கு தீர்வாக வந்த இன்சுலின் மருந்தை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்காற்றிய கனடா நாட்டை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி பிரெடெரிக் பாண்டிங் பிறந்த நாளான நவம்பர் 14-ந்தேதி நீரிழிவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நீரிழிவு நோயில் 2 வகைகள் உள்ளன. அதில் 'டைப்-2' நீரிழிவு என்பது உடல் இன்சுலினை சரியாக பயன்படுத்தமுடியாததால் ஏற்படுகிறது. உடல் பருமன், உடற்பயிற்சி இல்லாமை, குடும்ப மரபு போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாகும். ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உணவு மற்றும் வாழ்க்கைமுறையை மாற்றுவதன் மூலம் இதை கட்டுப்படுத்தவும், தாமதப்படுத்தவும் முடியும்.

“டைப்-1' நீரிழிவு என்பது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு கணையத்தில் இன்சுலின் சுரக்கும் செல்களை தாக்குவதால் ஏற்படுகிறது. இதனால் இன்சுலின் குறைபாடு ஏற்பட்டு, வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி தேவைப்படும். இந்த இரு நீரிழிவு நோய்களும் எந்த வயதிலும் வரலாம். இரண்டையும் ரத்த பரிசோதனை செய்து, டாக்டர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை பெறுவது அவசியமாகும். நீரிழிவு நோய் குறித்து பிரபல நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.மோகனிடம் கேட்டபோது, பயனுள்ள பல நல்ல தகவல்களை தந்தார். இந்தியா முழுவதும் 10 கோடியே 10 லட்சம் பேருக்கு நீரிழிவு நோயும், 13 கோடியே 60 லட்சம் பேருக்கு நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையும் இருக்கிறது.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், 18 முதல் 20 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. அதாவது, ஒரு கோடி பேருக்கு மேல் நீரிழிவு நோயும், ஒரு கோடியே 20 லட்சம் முதல் ஒரு கோடியே 50 லட்சம் பேருக்கு நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையும் இருக்கிறது. நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் மதில் மேல் நிற்கும் பூனை போன்ற சூழலில் இருப்பவர்கள். அவர்கள் நீரிழிவு நோயில் இருந்து தப்பிக்கவும் முடியும், மாட்டிக்கொள்ளவும் முடியும். எல்லோருமே தங்கள் உடல் எடையை 3 முதல் 4 கிலோ குறைக்கவேண்டும். கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்து, புரத சத்து உணவை அதிகப்படுத்தவேண்டும். தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் நடக்கவேண்டும்.

இந்த மூன்றையும் செய்தாலே சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கமுடியும். அப்படி செய்யாமல் நீரிழிவு நோய் கடுமையானால், கண் பார்வை பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, கால் பாதங்களில் எரிச்சல், மதமதப்பு, இருதய நோய், பக்கவாதம், ஆண்மை குறைவு மட்டுமல்லாமல், சில வகை புற்றுநோய், மறதி நோய், ஈரலில் கொழுப்பு படிதல் போன்ற நோய்கள் வரவும் வாசலை திறந்து வைக்கும் என்பது அவர் கூற்று. நீரிழிவு நோய் வந்தவர்கள் கட்டுப்பாடுடன் வாழ்க்கையை நடத்தினால் மேலும் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழமுடியும் என்று நீரிழிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் நந்திதா ராமச்சந்திரன் சொல்வது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் பாடமாக உள்ளது. நீரிழிவு நோய் வராமல் தடுப்பதும், வந்த பிறகு அதை கட்டுப்படுத்தி நெடுங்காலம் ஆரோக்கியமாக வாழ்வதும் நமது கையில்தான் இருக்கிறது என்பது அவரது ஆலோசனையாகும். எனவே சர்க்கரையை தவிர்ப்பதில் அக்கறை செலுத்தி, இனிப்பை குறைத்து, இனிய வாழ்வை நீட்டிப்போம்.

SCROLL FOR NEXT