பள்ளிக்கூட கல்வியை முடித்தவுடன் உயர்கல்விக்கென கல்லூரிப்படிப்பையே மாணவர்கள் நாடுகிறார்கள். அவ்வாறு கலை, அறிவியல், என்ஜினீயரிங், மருத்துவம் வேளாண்மை, சட்டம் என உயர்படிப்புகளை கற்றுக்கொடுக்கும் கல்லூரிகள் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும். பல்கலைக்கழகத்துக்கு தலையாக, ஏன் மூளையாக செயல்படுபவர் துணைவேந்தர்தான். துணைவேந்தர் எடுக்கும் முடிவுகள்தான், அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துகிறது. பொதுவாக துணைவேந்தர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். அவரின் பதவிக்காலம் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்பே புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் தொடங்கிவிடும். இதில் அரசு மற்றும் கவர்னருக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது.
அரசு புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்க தேடுதல்குழுவை நியமிக்கும். அவற்றில் ஒருவர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழுவின் பிரதிநிதியாகவும், மற்றொருவர் அரசு நியமிக்கும் பிரதிநிதியாகவும், இன்னொருவர் கவர்னரால் பரிந்துரைக்கும் பிரதிநிதியாகவும் இருப்பார்கள். இந்த தேடுதல்குழு 10 பேர் கொண்ட பட்டியலை தயாரித்து, அதில் 3 பேரை கவர்னரிடம் பரிந்துரைக்கும். கவர்னர் அதில் ஒருவரை தேர்வுசெய்து அறிவிப்பார். இப்படியாக நீடித்துவந்த இந்த நடைமுறையை தமிழக கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி மாற்றி, பல்கலைக்கழக மானியக்குழுவின் பிரதிநிதியாக 4-வது நபரை தேடுதல்குழுவில் நியமிக்கும் நடைமுறையை கொண்டு வந்தார். அதனை தமிழகஅரசு ஏற்கவில்லை. இதனால் புதிய துணைவேந்தர் தேடுதல்குழுவை நியமிக்க முடியாத நிலை சில ஆண்டுகளாக நீடிக்கிறது.
தமிழ்நாட்டில் 22 அரசு பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இதில் சென்னை பல்கலைக்கழகம். அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல், அதன் நிர்வாகம் முடங்கி கிடக்கிறது. துணைவேந்தர்கள் இல்லாமல், அரசால் நியமிக்கப்படும் நிர்வாகக்குழுவின் ஏற்பாட்டில், கவர்னராக ஆர்.என்.ரவி இருந்தவரை பட்டமளிப்பு விழாக்கள் நடந்தன. அவ்வாறு வழங்கப்படும் பட்டமளிப்பு சான்றிதழில் துணைவேந்தர் கையெழுத்தில்லாமல், அரசுசெயலாளர் கையெழுத்தே இடம்பெற்றிருந்தது. இதனால் பல இடங்களில் உரிய அங்கீகாரம் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல். பல்கலைக்கழகங்களின் அன்றாட நிர்வாகப்பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பல பல்கலைக்கழகங்களில் பதிவாளர், நிதிஅலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நிதிதொடர்பான எந்த முக்கிய முடிவுகளையும் இந்த 14 பல்கலைக்கழகங்களில் எடுக்கமுடியவில்லை. நிதிஒதுக்கப்படாததால், கல்வி, திட்டம், ஆராய்ச்சி போன்றவை தொடர்பான பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
நிர்வாக ரீதியாக மட்டுமல்லாமல், புதிய பேராசிரியர்களையும் நியமிக்க முடியவில்லை. ஏற்கனவே பணியாற்றும் உதவி பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர்களுக்கு பதவி உயர்வும் அளிக்க முடியவில்லை. துணைவேந்தர் இருந்தால், திறமையானவர்களை ஆசிரியர் பணியில் நியமிக்கமுடியும். இப்போது திறமையானவர்கள் கூடுவிட்டு கூடு பாயும்', 'தண்ணீர் தேடித்திரியும்' பறவைகள் போல தங்களுக்கேற்ற பணிகளைத்தேடி பிற மாநிலங்கள், ஏன் வெளிநாடுகளுக்கும் செல்ல தொடங்கிவிட்டனர். இது ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தின் கல்வித்தரத்தையே சீர்குலைத்துவிட்டது. இந்த நிலை நீடித்தால், அந்த 14 பல்கலைக்கழகங்களிலும் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இந்த 14 மட்டுமல்ல, அடுத்த பதவிக்காலம் நிறைவு பெறப்போகும் மற்ற பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடங்களும் காலியாகிவிடும் சூழல் உள்ளது. இதற்கிடையே கடைசியாக நடந்த சென்னை பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, துணைவேந்தர் இல்லாமல் நடந்திருக்கிறது. அமைச்சர்களும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை. எனவே அரசும், புதிய கவர்னர் ஆர்.வி.அர்லேகரும் உடனடியாக கலந்தாலோசித்து இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி காணவேண்டும். 14 பல்கலைக்கழகங்களிலும் புதிய துணைவேந்தர் நியமனங்களை மலரச்செய்யவேண்டும்.