தலையங்கம்

இது மனிதகுலத்தின் மாபெரும் சாதனை

1977-ம் ஆண்டில் நாசாவால் அனுப்பப்பட்ட ‘வாயேஜர்-1’ விண்கலம், வியாழன் மற்றும் சனியை ஆய்வு செய்தது.

சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு ‘வாயேஜர்-1’ பயணம் தொடர்ந்துகொண்டே இருப்பது மனிதகுலத்தின் மாபெரும் சாதனையாகும்.

நாம் வாழும் பூமிப்பந்து. சூரிய குடும்பத்தை சேர்ந்த ஒரு கோளாகும். இந்த சூரிய குடும்பத்தில் உள்ள புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கோள்களும் சூரியனை சுற்றி வந்துக்கொண்டிருக்கின்றன. இந்த கோள்களின் துணை கோளான நிலவை தவிர வேறு எந்த கோளிலும் மனிதன் தனது காலடியை பதித்ததில்லை. செவ்வாய் கோளுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால் செவ்வாய்க்கு செல்லும் மனிதன் தற்போதைய தொழில்நுட்ப வசதிகளால் மீண்டும் பூமிக்கு திரும்புவதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் அந்த திட்டம் சவாலானதாக இருக்கிறது. மனிதனால் செல்லமுடியாத தொலைவுகளுக்கு விண்கலன்களை அனுப்பும் முயற்சிகள் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, வியாழன், சனி ஆகிய கோள்களை ஆராய்ச்சி செய்வதற்காக 1977-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி நாசாவால் அனுப்பப்பட்ட 'வாயேஜர்-1' விண்கலம், வியாழன் மற்றும் சனியை ஆய்வு செய்த பிறகும் தனது பயணத்தை நிறுத்தவில்லை. ஈர்ப்பு விசையை வென்று முடிவில்லாத பிரபஞ்சத்தின் ரகசியத்தை தேடி உலா வந்துகொண்டே இருக்கிறது. 1990-ம் ஆண்டு அது பூமியில் இருந்து சுமார் 600 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது பூமியை எடுத்த படம் உலக அளவில் புகழப்பட்டது. அந்த படத்தில் பூமி மிகச்சிறிய, மங்கலான துகளாக மட்டுமே காட்சியளித்தது. அந்த படம் 'மங்கலான நீலப்புள்ளி' என்று அழைக்கப்பட்டது. அதன்பின்னர், ‘வாயேஜர்-1’ விண்கலம் 2012-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ந்தேதி, சூரியக்காற்றின் ஆதிக்கம் முடிவடையும் 'ஹீலியோபாஸ்' எனப்படும் எல்லையை கடந்து, விண்மீன் இடைவெளிக்குள் நுழைந்த முதல் மனிதனால் உருவாக்கப்பட்ட விண்கலம் என்ற பெருமையை பெற்றது.

தற்போது மணிக்கு சுமார் 61 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் அது தொடர்ந்து பயணம் செய்துக்கொண்டிருக்கிறது. சுமார் 49 ஆண்டுகளாக விண்வெளியில் பயணம் செய்து, அது ஒரு ஒளிநாள் பயணத்தை இன்று (புதன்கிழமை) எட்டி சாதனை படைக்கிறது. அதாவது. ஒளி ஒரு வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது. அந்த வேகத்தில் 24 மணி நேரத்தில் ஒளி கடக்கும் தூரம் சுமார் 2,596 கோடி கிலோ மீட்டர். இந்த தூரத்தைத்தான் ‘வாயேஜர்-1’ எட்டியுள்ளது. இந்த விண்கலம் ஒருவேளை எதிர்காலத்தில் வேற்றுக்கிரக அறிவாற்றல் கொண்ட உயிரினங்களால் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு பூமியை பற்றிய தகவல்களை தெரிவிக்கும் வகையில் ஒரு ஒலிப்பதிவு வட்டும் அனுப்பப்பட்டுள்ளது. 'கோல்டன் ரெக்கார்டு' எனப்படும் அந்த வட்டில் பூமியின் படங்கள், இயற்கை ஒலிகள், இசை மற்றும் 55 மொழிகளில் மனிதர்களின் வாழ்த்துகள் இடம்பெற்றுள்ளன.

இதில் இந்தியாவை சேர்ந்த 10 மொழிகளும் இடம்பெற்றுள்ளன. ஆனால் அந்த பட்டியலில் தொன்மையான தமிழ்மொழி இடம்பெறாதது ஏமாற்றமளிக்கும் விஷயமாகவே உள்ளது. மனிதன் உருவாக்கிய ஒரு சிறிய விண்கலம், பூமியை விட்டு பல்லாயிரம் கோடி கிலோ மீட்டர் தொலைவை கடந்து தொடர்ந்து பயணம் செய்துக்கொண்டிருக்கிறது. அதன் பயணத்திற்கு முடிவே இல்லை. சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு. ‘வாயேஜர்-1’ விண்கலம் 'கிளீஸ் 445' என்ற நட்சத்திரத்தின் அருகில் கடந்து செல்லும் என்று நாசா கணித்துள்ளது. அதன்பிறகும் ‘வாயேஜர்-1’-ன் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பதுதான் அதன் சிறப்பு. மொத்தத்தில் இது மனிதகுலத்தின் மாபெரும் சாதனையாகும்.

SCROLL FOR NEXT