எதிர்கால திட்டமிடலுக்கும், அரசின் திட்டங்கள் கடைக்கோடி மனிதனுக்கும் போய் சேருவதற்கும் அச்சாணியாக விளங்குவது மக்கள் தொகை கணக்கெடுப்புதான். இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. கடைசியாக 2011-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு 2021-ம் ஆண்டு கணக்கெடுப்பு நடந்திருக்க வேண்டும். ஆனால் அப்போது கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருந்ததால், இந்த கணக்கெடுப்பை நடத்த முடியவில்லை.
இந்த நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டுக்கான கால அட்டவணையை மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர் மிருத்யுஞ்சய் குமார் நாராயணன் வெளியிட்டுள்ளார். இது இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு என்று சொல்லப்பட்டாலும், சுதந்திரத்திற்கு பின்பு நடைபெறும் 8-வது கணக்கெடுப்பு ஆகும்.
இதன் சின்னத்தை கடந்த மாதம் 6-ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டார். 'பிரகதி' என்ற பெண்ணும், 'விகாஸ்' என்ற ஆணும் தான் இந்த சின்னம். அந்த பெண் இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்து கையில் செல்போன் வைத்திருக்கிறார். அதுபோல ஆண் பேண்ட்-சட்டை அணிந்து கையில் செல்போன் வைத்திருக்கிறார். இருவரும் செல்போன் வைத்திருப்பதற்கு காரணம் இருக்கிறது.
அதாவது, இதுவரை இல்லாத வகையில், முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் தான் இந்த கணக்கெடுப்பு நடக்கிறது. அதன் அடையாளம்தான் இது. மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமான வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு நாடு முழுவதும் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. 2-வது கட்ட கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது.
வீட்டு பட்டியல் கணக்கெடுப்பை சுயவிவர கணக்கெடுப்பு, வீட்டுக்கு வந்து விவரங்கள் கேட்கும் பணி என 2 பிரிவுகளாக மத்திய அரசு நடத்துகிறது. அதாவது சுயவிவர கணக்கெடுப்பில், பொதுமக்கள் தங்களது செல்போனை பயன்படுத்தி இதற்கான பிரத்தியேக இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள 33 கேள்விகளுக்கு தாங்களாகவே பதில் அளித்து பதிவு செய்துவிடலாம்.
இதையடுத்து அவர்களுக்கு 16 இலக்க எண் வழங்கப்படும். இந்த எண்ணை, கணக்கெடுப்பு பணியின் 2-வது பிரிவாக வீட்டுக்கு வந்து கணக்கெடுப்பவர்களிடம் கொடுத்தால் போதும். அவரிடம் வேறு தகவல்கள் தர தேவையில்லை. ஒருவேளை இந்த சுயவிவர படிவத்தை இணையதளத்தில் பூர்த்தி செய்யாவிட்டால், கணக்கெடுப்பாளரிடம் அந்த 33 கேள்விகளுக்கும் பதில் அளிக்கவேண்டும். அவர் டிஜிட்டல் முறையில் செல்போனில் அதனை பதிவு செய்துகொள்வார். இந்த பணிக்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுயவிவர கணக்கெடுப்பு பணி ஜூலை மாதம் 17-ந்தேதி முதல் ஜூலை 30-ந்தேதி வரையும், அதன் தொடர்ச்சியாக கணக்கெடுப்பாளர்கள் வீட்டுக்கு வந்து தகவல் சேகரிக்கும் பணி ஆகஸ்டு 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 31-ந்தேதி வரையும் நடக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் மக்கள் கணக்கெடுப்பு பணியின்போது மக்களின் தனிப்பட்ட விவரங்கள், கல்வி, சாதி, மதம் போன்ற கேள்விகள் கேட்கப்படும்.
வரலாற்றில் முதல் முறையாக, நீண்ட நாள் கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பும் அதில் இடம்பெறுகிறது. இந்த கணக்கெடுப்பு மூலம் ஒவ்வொரு சாதியிலும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? என்பது துல்லியமாக தெரிந்துவிடும் என்பதால், அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டை மீண்டும் வரையறை செய்ய இது வழிவகுக்கும்.