தலையங்கம்

மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்: நானே ராஜா; நானே மந்திரி!

ஹாட்ரிக் சாதனை படைத்த மம்தா பானர்ஜி 4-வது முறையாகவும் வெற்றி பெறுவாரா? என்பதுதான் நாட்டு மக்களின் கேள்வியாக இருக்கிறது.

மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பார்ப்பதற்கு எளிமையானவர் என்றாலும், அரசியல் களத்தில் அவர் ஒரு சிங்கம்தான். மேற்கு வங்காளத்தில் அசுர பலத்தோடு 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை தோற்கடித்து மீண்டும் தலையெடுக்கவிடாமல் செய்துவிட்டார். அதுபோல அடுத்த அரசியல் எதிரியான காங்கிரஸ் கட்சியையும் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிவிட்டார். கடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 215 இடங்களில் இமாலய வெற்றி பெற்றார். பா.ஜனதாவுக்கு வெறும் 77 இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்பு கிடைத்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி கணக்கை தொடங்கவில்லை. இவற்றையெல்லாம்விட பா.ஜனதாவை மேற்கு வங்காளத்தில் தனக்கு நிகராக வளராமல் தடுத்துவிட்டார்.

கடந்த 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி பொறுப்பில் அவர்தான் இருக்கிறார். தொடர்ந்து வெற்றி மகுடத்தை சூடிக்கொண்டிருந்த மம்தா பானர்ஜி இந்த தேர்தலிலும் களத்தில் இறங்கிவிட்டார். தேர்தல் கமிஷன் மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்த பணியால் வாக்காளர் பட்டியலில் மொத்தம் இருந்த 7 கோடியே 4 லட்சம் வாக்காளர் எண்ணிக்கையில் 60 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இப்போது 6 கோடியே 44 லட்சம் வாக்காளர்கள்தான் இருக்கிறார்கள். இது எனக்கு ஆதரவான ஓட்டுகள் என்பதால் நீக்கப்பட்டுவிட்டன என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியதோடு, அதற்காக சுப்ரீம் கோர்ட்டில் தானே நேரில் ஆஜராகி சூடான வாதங்களையும் முன்வைத்தார். சுப்ரீம் கோர்ட்டில் ஒரு முதல்-மந்திரி நேரில் ஆஜராகி வாதாடியது வரலாற்றில் இதுதான் முதல் முறை என்ற முத்திரையையும் அவர் பதித்துவிட்டார்.

இத்தகைய பின்னணியில் தேர்தல் கமிஷன் தமிழ்நாடு சட்டசபையோடு மேற்கு வங்காளம், அசாம், கேரளம் மற்றும் புதுச்சேரியிலும் சட்டசபை தேர்தலுக்கான தேதியை அறிவித்துள்ளது. இதில் கேரளம், அசாம், புதுச்சேரிக்கு ஒரே நாளில் அதாவது ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 23-ந்தேதியும், அதே நாளிலும் மற்றும் 29-ந்தேதியும் என மேற்கு வங்காளத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை மேற்கு வங்காளத்துக்கு 6,7,8 கட்டங்களாக தேர்தல் நடந்த நிலையில், இப்போது 2 கட்டங்களாக நடக்க இருக்கிறது. மற்ற மாநிலங்களில் எல்லாம் இன்னும் கூட்டணி கட்சிகளுக்கிடையே உடன்பாடு, தொகுதி பங்கீடு முடியாத நிலையில் மம்தா பானர்ஜி மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், 291 தொகுதிகளுக்கு தனது கட்சியின் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்.

மீதம் உள்ள 3 தொகுதிகளை பாரதிய கோர்க்கா பிரஜாதந்ரிக் மோர்ச்சா என்ற தனது தோழமை கட்சிக்கு ஒதுக்கியுள்ளார். நானே ராஜா, நானே மந்திரி என்று ஏகபோக அரசியல் நடத்தும் மம்தா பானர்ஜியால் மட்டுமே இப்படி செய்யமுடியும். 52 பெண்கள், 95 தலித், பழங்குடியினர், 47 சிறுபான்மை சமூகத்தினர்களை வேட்பாளர் பட்டியலில் இடம் பெற செய்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இப்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் 74 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கவில்லை. கடந்த 2021 தேர்தலில் அடைந்த வெற்றி மூலம் ஹாட்ரிக் சாதனை படைத்த மம்தா பானர்ஜி 4-வது முறையாகவும் வெற்றி பெறுவாரா?, அவரது சிங்க குரல் மீண்டும் ஒலிக்குமா? என்பதுதான் நாட்டு மக்களின் கேள்வியாக இருக்கிறது.