சென்னை,
தமிழ்நாடு தினத்தை எந்த நாளில் கொண்டாடுவது என்பது குறித்து அரசியல்ரீதியாக சர்ச்சை கிளம்பியிருக்கிறது. நாடு விடுதலை அடைந்தபின்னர் மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கை வலுப்பெற்றது. அதன்படி, 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி மெட்ராஸ் ஸ்டேட் அதாவது சென்னை மாநிலத்தின் எல்லைகள் மறுவரை செய்யப்பட்டன. தமிழர்கள் உரிமைக்கோரிய சிலபகுதிகளுக்காக நடந்த போராட்டங்கள், உயிர்நீத்தவர்கள், சிறைசென்றவர்கள், வாழ்நாளை அர்ப்பணித்தவர்களை நினைவுகூரும் வகையில் நவம்பர் 1-ந்தேதி எல்லை போராட்ட தியாகிகள் நாளாக அனுசரிக்கப்பட்டது. 1967-ம் ஆண்டு ஜூலை 18-ந்தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்றபெயர் தமிழ்நாடு என்று மாற்றுவதற்கான தீர்மானம் தமிழக சட்டசபையில் அண்ணா முதல்-அமைச்சராக இருந்தபோது நிறைவேறியது. மறைந்த பட்டிமன்ற நடுவர் சாலமன்பாப்பையா தலைமையில் தமிழறிஞர்கள் கடந்த 2021-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஜூலை 18-ந்தேதியை தமிழ்நாடு நாளாக அறிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தியதைத்தொடர்ந்து, அதேநாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
ஆனால் இப்போது முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, மொழிவாரியாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு உருவான நவம்பர் 1-ந்தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுகிறது. அப்படி கொண்டாடப்பட்ட விழாவில், பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன், "முதல்-அமைச்சரிடம் வாரத்துக்கு ஒருநாள் நீங்கள் பட்டு வேட்டி-சட்டை அணிந்துவருவதை பார்க்கும்போதே கண்களுக்கு அழகாக இருக்கிறது. நீங்கள் வருவதுபோல தமிழ்நாடு முழுவதும் தலைமைச்செயலகம் முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாரத்தில் ஒருநாள் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் ஏன் வேட்டி-சட்டை அணிந்துவர சொல்லக்கூடாது என்று கேட்டேன். வேட்டி, சட்டை, பட்டு சட்டை, சேலை ஆகியவற்றை வாங்கும்போது நெசவாளர்களுக்கு வியாபாரம் கிடைக்கிறது. கதர் கிராமதொழில்களுக்கும், கைத்தறி நெசவாளர்களுக்கும் வாழ்வாதாரமாக இருக்கும். இது பல்லாயிரம் ஆண்டுகளாக தொடரும் பண்பாட்டு மரபு இல்லையா? என்றவுடன் சரி, நீ ஏற்பாடு செய் என்று சொல்லிவிட்டார்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முதல்முறையாக அறிவிக்கிறோம். இனி வாரத்தில் ஒரு நாள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மரபு உடை தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. முதல்-அமைச்சர் உத்தரவின்படி இது நடைமுறைக்கு வர இருக்கிறது" என்று பெரிய அறிவிப்பை சர்வசாதாரணமாக வெளியிட்டுவிட்டார். வாரத்தில் ஒருநாள் ஆண்கள் வேட்டி-சட்டையும், பெண்கள் சேலையும் என மரபு உடை கண்டிப்பாக அணியவேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமல்ல. ஒருவர் எந்த ஆடை அணியவேண்டும் என்பது அவரது வசதிக்கும், விருப்பத்துக்கும் ஏற்றவகையில்தான் அமையவேண்டுமே தவிர, இதைத்தான் அணிந்துவரவேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தவோ, நிர்பந்தப்படுத்தவோ கூடாது. காலம்மாறிவிட்டது. நாகரிக உலகில் உடை என்பது அவரவர் வசதியையும், உடல்வாகையும், விருப்பத்தையும் பொருத்தது. இளைஞர்கள் பலருக்கு எப்படி வேட்டி அணியத்தெரியாதோ, அதுபோல இளம்பெண்களுக்கு சேலைஉடுத்த தெரிவதில்லை.
திருமணத்தன்றும், பண்டிகை தினங்களில் மட்டுமே அணியும் உடையாகவே அவை இருக்கிறது. வேட்டி கூட இப்போது கட்டிக்கொள்வதற்கு பதிலாக ஒட்டிக்கொள்ளும் வகையில் விற்பனைக்கு வந்துவிட்டது. அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக தடம்பதித்துவரும் சிங்கப்பெண்கள் நிறையபேர் இருசக்கர வாகனங்களில் மிடுக்காக பணிக்கு வருவதால், அவர்களால் நிச்சயமாக சேலைஅணிந்து வரமுடியாது. அது அசவுகரியமாக இருக்கும் என்பதால் சுடிதார்தான் அவர்களுக்கு சிறந்தஉடையாக இருக்கிறது. அதுபோல ஆண்களுக்கும் மோட்டார்வாகனங்களில் வருவதற்கு பேண்ட்-சட்டைதான் வசதியான உடையாகும். இப்படி பலகாரணங்களுக்காக ஆடை அணிவதை அவரவர் விருப்பத்துக்கு விட்டுவிடவேண்டுமே தவிர, இதைத்தான் அணிந்துவரவேண்டும் என்று அரசு உத்தரவிடுவது சரியாகஇருக்காது. உடை விஷயத்தில் அரசு ஆலோசனை வேண்டுமானால் கூறலாமேதவிர, கட்டாயம் அணிந்து வரவேண்டும் என்றுசொல்வது ஏற்புடையதல்ல.