விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் பிறந்த செல்ல குழந்தையான செல்போன் இப்போது பெரும்பாலானவர்களின் கைகளில் தவழ்ந்து வருகிறது. இதனால் சாதகமும் இருக்கிறது, பாதகமும் இருக்கிறது. பாக்கெட்டுகளில் ஓய்வெடுக்கும் செல்போனுக்கு வரும் விரும்பத்தகாத அழைப்புகளால் பல நேரங்களில் தேவையற்ற தொல்லையும் ஏற்படுகிறது. ஆரம்ப காலத்தில் எப்போதாவது சிணுங்கும் அழைப்பை ஆசையோடு எடுத்து உரையாடினார்கள். ஆனால் காலப்போக்கில் நிதி, விளம்பரம், சந்தையியல் சார்ந்து வரும் அழைப்புகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இதனால் தொலைபேசி இப்போது நிறையபேருக்கு தொல்லை பேசியாகவே இருக்கிறது. எனவே என்னை கூப்பிடவேண்டாம். முக்கியமான செய்தி என்றால் வாட்ஸ்அப்பில் அனுப்புங்கள். அதை பார்த்துவிட்டு தேவையென்றால் நானே உங்களை தொடர்புகொள்கிறேன் என்று கூறிவிடுகிறார்கள்.
வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்புவது மட்டுமல்லாமல், புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றையும் பகிர்ந்துகொள்ளமுடியும். எல்லாவற்றுக்கும் மேலாக வாட்ஸ்அப் காலில் பேசுவதை மற்றவர்கள் 'ரெக்கார்ட்' செய்யமுடியாதது மட்டுமின்றி, யாரும் ஒட்டுக்கேட்கவும் முடியாது. அதனால் முக்கிய தகவல்களை பகிர்ந்துகொள்ளவும், ரகசியங்கள் பேசவும் நிறையபேர் இந்த வசதியையே பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மட்டும் வாட்ஸ்அப் பயனர்கள் 85.38 கோடி பேர் இருக்கிறார்கள். வாட்ஸ்அப் உரிமையாளரான மெட்டா நிறுவனம் பயனர்களுக்கு எளிதான சேவைகளை வழங்க சீரான இடைவெளியில் பல முயற்சிகளை எடுத்துவருகிறது. வாட்ஸ்அப் சேவையை பெறுவதற்கு அடிப்படையே செல்போன் எண்கள்தான். செல்போன் எண்களை பதிவு செய்வதன் மூலமாகத்தான் தகவல் பரிமாற்றம் நடக்கிறது.
பல நேரங்களில் செல்போன் எண்களை மற்றவர்களுக்கு தெரிவிக்கவேண்டிய சூழல் ஏற்படுவதால் வேண்டாத அழைப்புகள் அவ்வப்போது வந்து நேரத்தை விரயமாக்குவதோடு, சங்கடத்திலும் ஆழ்த்திவிடுகிறது. சில சமயங்களில் ஒருவருக்கு கொடுக்கும் செல்போன் எண்கள், தங்களுக்கு தொடர்பே இல்லாதவர்களுக்கும் பகிரப்படுவதால் தனியுரிமையும் பாதிக்கப்படுகிறது. இந்த தொல்லைகளை தடுக்க வாட்ஸ்அப் நிறுவனம் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களைப்போல பிரத்தியேக 'யூசர் நேம்' (பயனர் பெயர்) மூலமாக மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் மற்றவர்களிடம் நம்முடைய செல்போன் எண்ணை கொடுக்காமல் 'யூசர் நேமை' மட்டும் கொடுத்து வாட்ஸ்அப்பை முழுமையாக பயன்படுத்த முடியும். அதாவது முன்பு இருந்ததுபோன்று மற்றவர்களுடன் வாட்ஸ்அப் காலில் பேசவும் முடியும். செய்திகளை அனுப்பவும் முடியும்.
இது தொல்லை இல்லாத நல்ல அம்சம் என்பதால் ஏராளமானவர்கள் இந்த சேவையை பயன்படுத்த பதிவு செய்தனர். இந்த தொழில்நுட்பம் பயனர்களிடம் வரவேற்பு பெற்றுக்கொண்டிருந்தநிலையில் மத்திய அரசு தற்காலிக தடை போட்டுள்ளது. இந்த சேவையை பிரதமர், ரிசர்வ் வங்கி மற்றும் பிரபலங்களின் பெயரில் சமூக விரோதிகள் தொடங்கி இணைய மோசடிகளை செய்துவிடமுடியும் என்று கருதுவதால் மெட்டா நிறுவனத்துக்கு தொலைதொடர்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கிடையே அரசு நிறுவனங்கள், அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களின் பெயர்கள், பிரபலங்களின் பெயர்களை யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மெட்டா நிறுவனம் முடக்கி வைத்துள்ளது. மற்ற சமூக வலைத்தளங்களைப்போல வேறு பெயர்களை தட்டச்சு செய்து யாரையும் கண்டுபிடித்துவிட முடியாது. சரியான 'யூசர் நேம்'களை தந்தால் மட்டுமே தொடர்புகொள்ளமுடியும் என்று தெரிவித்துள்ளது. மொத்தத்தில் இதன் சாதக, பாதகங்களை மத்திய அரசு அலசி ஆராய்ந்து முடிவை தெரிவிக்கவேண்டும் என்பதே வாட்ஸ்அப் பயனர்களின் கோரிக்கையாக இருக்கிறது.