தலையங்கம்

கியாஸ் தட்டுப்பாடு எப்போது சீரடையும்?

மத்திய அரசு உத்தரவுப்படி உள்நாட்டு கியாஸ் உற்பத்தியை கூடுதலாக 25 சதவீதம் அதிகரிக்கவேண்டும்.

அமெரிக்கா உடனான போர் காரணமாக பாரசீக வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்த கப்பலும் போகக்கூடாது என்று ஈரான் தடை விதித்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. ஏனெனில் இந்தியா தனது கியாஸ் தேவையில் 50 சதவீதம் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது.

அதிலும் 90 சதவீதம் கத்தாரில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு வந்துக்கொண்டிருந்தது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுவிட்டதால், இந்தியாவுக்கு இயற்கை எரிவாயு ஏற்றிக்கொண்டு வந்த கப்பல்கள் ஆங்காங்கே நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளன. இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை கூடுதல் செயலாளர் சுஜாதா சர்மா, ஹார்முஸ் ஜலசந்தியை கடப்பதற்காக 28 கப்பல்கள் காத்துக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

ஈரானின் டெஹ்ரான் டைம்ஸ் பத்திரிகை, இந்த தடைக்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தினமும் ஏறத்தாழ 2 கோடி கச்சா எண்ணெய் பீப்பாய்களும், 3.3 கோடி கன அடி கியாசும் கொண்டுசெல்லப்பட்டு வந்ததாக தெரிவித்து இருக்கிறது. இது உலகில் மொத்த கியாஸ் சப்ளையில் 5-ல் ஒரு பங்காகும்.

இந்த தடை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் கடந்த 9-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் நடத்திய தாக்குதலால் கத்தார் தன் கியாஸ் உற்பத்தியை முற்றிலும் நிறுத்திவிட்டது. ஈராக்கும், குவைத்தும் தங்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியை 70 சதவீதம் அளவுக்கு குறைத்துவிட்டன. இதனால்தான் தற்போது உலக அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 115 டாலர் வரை சென்றுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் விசாகப்பட்டினத்துக்கு கூட்டு பயிற்சிக்காக வந்த ஈரானிய கப்பலை இலங்கை கடற்கரைக்கு அருகில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையால் தாக்கி மூழ்கடித்துவிட்டது. அந்த கப்பலுடன் வந்த 2 கப்பல்களில் ஒன்றான 'ஐரிஸ் லாவன்', என்ற கப்பலுக்கு கொச்சி துறைமுகத்தில் இந்திய அரசு அடைக்கலம் கொடுத்ததோடு. அதில் இருந்த மாலுமிகளையும் விருந்தினர்களாக பாவித்துவருகிறது.

இதனால் ஈரானுக்கு. இந்தியா மீது நல்லெண்ணம் துளிர்விட்டுள்ளது. இதற்கு கைமாறாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு வந்த லைபீரிய நாட்டு கப்பலை ஹார்முஸ் வழியாக கடந்து செல்ல ஈரான் பச்சை கொடி காட்டியது. அந்த கப்பலும் புதன்கிழமை மும்பை துறைமுகம் வந்தடைந்துள்ளது.

அந்த கப்பலில் இருந்த ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 335 டன் கச்சா எண்ணெய் இப்போது இறக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மேலும் புஷ்பக், பரிமல் என்ற இரு கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது. இதுபோல் நடுக்கடலில் காத்துக்கொண்டு இருக்கும் மீதம் உள்ள கப்பல்களுக்கும் விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கப்பல்கள் விரைவில் இந்தியா வரவேண்டும். அதோடு மத்திய அரசு உத்தரவுப்படி உள்நாட்டு கியாஸ் உற்பத்தியை கூடுதலாக 25 சதவீதம் அதிகரிக்கவேண்டும். மேலும் கத்தார் உள்பட அனைத்து வளைகுடா நாடுகளிலும் போர் மேகம் கலைந்து உற்பத்தி முழுவீச்சில் தொடங்கினால்தான் நமது நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை முற்றிலும் சீரடையும். அதுவரை நிலைமையை ஓரளவுக்கு சமாளிக்கமுடியும்.