தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகளில் எதிர்பார்த்ததும், எதிர்பாராததும் நடந்திருக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க. அதிக இடங்களில் அதாவது 108 இடங்களில் வெற்றி பெற்றும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியமைக்க 117 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், தலா 2 இடங்களில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தன. இதனால் தனிப்பெரும்பான்மையை எளிதாக அடையமுடிந்தது.
இத்தகைய சூழ்நிலையில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற சத்தியபாமா (தாராபுரம்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்). ஜெயக்குமார் (பெருந்துறை), டாக்டர் விஜயபாஸ்கர் (விராலிமலை). எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.வில் இணைந்தனர். மேலும் பலர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்
அ.தி.மு.க.வில் இருந்து கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் வழக்கு போட்டதால், அந்த கதவுகள் சாத்தப்பட்டன. இந்தநிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே போட்டியிட்டு வென்ற சத்தியபாமா அதே தாராபுரம் தொகுதியிலும், மரகதம் குமரவேல் அதே மதுராந்தகம் தொகுதியிலும் இந்த முறை த.வெ.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டனர். இந்த தொகுதிகளில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க.. நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் களம் கண்டதால் ஐந்து முனை போட்டி நிலவியது.
தாராபுரம் தொகுதியில் முன்பு நடந்த தேர்தலில் முதல் இடத்தை அ.தி.மு.க.வும், 2-வது இடத்தை தி.மு.க.வும், 3-வது இடத்தை த.வெ.க.வும் பெற்றிருந்தது. மதுராந்தகம் தொகுதியில் முதல் இடத்தை அ.தி.மு.க.வும், 2-வது இடத்தை த.வெ.க.வும், 3-வது இடத்தை தி.மு.க.வும் பிடித்தது. த.வெ.க.. தி.மு.க., அ.தி.மு.க. மூன்று கட்சியினரும் எப்படியாவது வெற்றி பெற்றாகவேண்டும் என்ற முனைப்பில் தீவிர களப்பணியாற்றினர். முதல்-அமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய 3 பேருமே பம்பரமாக சுழன்று அனல் பறக்கும் பிரசாரம் செய்தனர். ரோடு ஷோவும் நடத்தினார்கள். ஆனால் இரு தொகுதிகளிலுமே இப்போது விசில் சத்தம்தான் வெற்றி சத்தமாக கேட்டிருக்கிறது. மதுராந்தகத்தைப் பொறுத்தமட்டில் முதல் சுற்றில் இருந்தே மரகதம் குமரவேல்தான் பந்தயத்தில் முதலாவதாக ஓடி வந்துக்கொண்டிருந்தார். தாராபுரத்தில் முதல் சில சுற்றுகளில் அ.தி.மு.க. முன்னணியில் இருந்தாலும், அடுத்தடுத்த சுற்றுகளில் த.வெ.க. முந்திவிட்டது.
தாராபுரம் அ.தி.மு.க.வின் கோட்டையாக கருதப்பட்ட நிலையில் பிரசாரத்தின்போது முருங்கைக்காய் பறித்த முதல்-அமைச்சர் விஜய்க்கு மக்கள் வெற்றிக்கனியை கொடுத்துவிட்டார்கள். அதுபோல டிராக்டர் ஓட்டிய மதுராந்தகம் தொகுதியிலும் மக்கள் வெற்றிப் பாதையை காட்டிவிட்டார்கள். தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இது பெருமைக்குரிய தோல்வியாகவே கருதப்படுகிறது. நாம் தமிழர் கட்சிக்கும், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் டெபாசிட் போய்விட்டது. த.வெ.க.வைப் பொறுத்தமட்டில் இது பெரிய வெற்றிதான். 2 தொகுதிகளிலுமே முதல் இடத்தில் இருந்த அ.தி.மு.க. 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தி.மு.க. 2-வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் பல விக்கெட்டுகள் த.வெ.க.வுக்கு ஆதரவாக விழும் என்றும். அடுத்து நடக்க இருக்கும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கும் இது நல்ல பாடமாக இருக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. இடைத்தேர்தல் வெற்றி 5 மாத த.வெ.க. ஆட்சிக்கு மக்கள் கொடுத்த சான்றிதழ் என்பதும் பொதுவான கருத்தாக இருக்கிறது. மேலும் பல தொகுதிகளுக்கு தேர்தல் வருவதற்கான முரசை இந்த இடைத்தேர்தல் முடிவு கொட்டிவிட்டது. இந்த 2 தொகுதிகளிலுமே ஓட்டுக்கு யாருமே பணம் கொடுக்கவில்லை என்று கட்சிகள் சொல்வது ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.