தலையங்கம்

யார் சொன்னது உண்மை?

5 நாட்களுக்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அமெரிக்கா கூறியிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

உலக அமைதியை குலைப்பது போர் தான். சரித்திரத்தின் ஞானக்குரல் எச்சரிப்பது என்னவென்றால், போர் என்பது மறைந்து இருந்து கொல்லும் விஷம் என்பதாகும். விலைமதிக்க முடியாத மனித உயிர்களின் இழப்பும், பொருளாதார சேதமும் அதன் நேரடி விளைவுகளாகும். அமெரிக்காவின் முன்னாள் ராணுவ தளபதியான வில்லியம் ஷெர்மன், "போர் என்பது நரகம். இருந்தாலும், தலைவர்கள் தீப்பிழம்பில் வெற்றியைத் தேடி விரட்டுகின்றனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நடைபெற்றுவரும் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதல் குறித்து 'தி வீக்' இதழின் ஆசிரியர் பிலிப் மாத்யூ எழுதிய கட்டுரையில், "போரை இந்தியா விரும்பவில்லை. போரால் இந்தியா லாபமும் அடையவில்லை. ஆனால் அதற்கான விலையை இந்தியாவில் உள்ள அனைவரும் செலுத்திக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியிருப்பதில் பல அர்த்தங்கள் உள்ளன.

உக்கிரமாக நடைபெறும் இந்த மோதலில் நேரடி தொடர்பு இல்லாத இந்தியா உள்பட பல நாடுகள் பாதிப்படைந்துள்ளன. போரில் நேரடியாக ஈடுபடாத வளைகுடா நாடுகளையும் ஈரான் விட்டு வைக்கவில்லை. அங்குள்ள அமெரிக்க ராணுவத் தளங்களையும், அமெரிக்க நிறுவனங்களையும் ஏவுகணை தாக்குதல்களுக்கு இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியதால், அந்தப் பகுதிகள் முழுவதும் நிலைகுலைந்துள்ளன. இதுமட்டுமல்லாமல், பாரசீக வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் தடை விதித்ததால், அதன் வழியாகச் செல்லும் இந்தியா உள்பட பல தெற்கு ஆசிய நாடுகளின் கப்பல்கள் முன்னேற முடியாமல் நடுக்கடலில் பல நாட்களாக நின்றுகொண்டிருக்கின்றன. இதனால் சர்வதேச வர்த்தக சங்கிலியும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் 28 கப்பல்கள் நின்றிருந்த நிலையில், பிரதமர் மோடி ஈரானுடன் பேசியதன் விளைவாக தற்போது 4 கப்பல்கள் இந்திய துறைமுகங்களை வந்தடைந்துள்ளன. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்திற்கு முழுமையான தீர்வு காணும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்காவும், ஈரானும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன” என்று தெரிவித்துள்ளார். மேலும், "இந்த வாரம் தொடரும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளுக்கு எதிரான தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றும் கூறியுள்ளார். இந்த முடிவு, தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் போக்கைச் சார்ந்ததாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஈரான் வெளியுறவுத்துறை, டிரம்பின் இந்த கூற்றை முற்றிலுமாக மறுத்துள்ளது. "அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை” என்று தெளிவாக தெரிவித்துள்ளது. மேலும், ஈரான் சபாநாயகர் முகமது பாகரும், அமெரிக்காவுடன் எந்தத் தீர்வையும் நோக்கிய பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும், அது நிதி மற்றும் எண்ணெய் சந்தைகளை மாற்றி அமைக்க வெளியிடப்படும் போலி செய்தி என்றும் கூறியுள்ளார். இதனால்,யார் கூறுவது உண்மை என்பது தெரியாமல் உலக நாடுகள் குழப்பத்தில் உள்ளன. இந்தியா-பாகிஸ்தான் போரை "நான்தான் நிறுத்தினேன்” என்று, இந்தியா மறுத்த பின்னரும் தொடர்ந்து கூறி வரும் டிரம்பின் பழைய கூற்றைப் போல இதையும் எடுத்துக்கொள்வதா? என்ற சந்தேகம் எழுகிறது. இருப்பினும், 5 நாட்களுக்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அமெரிக்கா கூறியிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.