தலையங்கம்

மீண்டும் ரொக்கப் பரிமாற்றம் வந்து விடுமோ?

வியாபாரிகள் மீது விதிக்கப்படும் கட்டணம் நிச்சயமாக மக்கள் மீதுதான் சுமத்தப்படும்.

பண்டமாற்று முறைக்கு பின்னர் கை விட்டு கை மாறிக்கொண்டே இருக்கும் பணம் ரொக்கமாக பரிமாற்றம் செய்யப்பட்டது. இதற்கு பிறகு டெபிட், கிரெடிட் அட்டைகள் பயன்பாட்டுக்கு வந்தன.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை

வெளிநாட்டு நிறுவனங்களான விசா, மாஸ்டர் கார்டு ஆகியவற்றின் அட்டைகளே பணப் பரிமாற்றத்தில் பெரும் பங்கு வகித்தன. இந்த நிறுவனங்களுக்குப் போட்டியாக ரூபே அட்டைகள் 2014-ம் ஆண்டு மே 8-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக மக்களை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு ஏப்ரல் 11-ந்தேதி பரிசோதனை முறையில் டிஜிட்டல் பரிவர்த்தனையைத் தொடங்கி, அதே ஆண்டு ஆகஸ்டு 25-ந் தேதி மக்கள் பயன்பாட்டுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். அடுத்த 3 மாதங்களுக்குள் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அது மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பொருளாதாரத்துக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

டிஜிட்டல் பரிவர்த்தனை

அந்தச் சூழ்நிலையில் மக்கள் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு, அதாவது யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கு தள்ளப்பட்டனர். அனைத்து பரிவர்த்தனைகளும் இலவசமாகவே நடந்து வந்ததால், பொதுமக்கள் மட்டுமல்லாமல் சாதாரணமாகக் கீரை விற்கும் பெண் கூட டிஜிட்டல் பரிவர்த்தனையையே நடைமுறைப்படுத்தத் தொடங்கினார். யு.பி.ஐ. தொடங்கி சரியாக 10 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 10 ஆண்டுகளில் மொத்தம் நடந்த 95,949 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.1,070.43 லட்சம் கோடி கொடுக்கல், வாங்கல் நடந்துள்ளது.

மத்திய அரசு - அதிர்ச்சி வைத்தியம்

ஒட்டுமொத்த இந்தியாவே டிஜிட்டல் முறைக்கு மாறிக்கொண்டு இருக்கிறது. அதாவது எந்தவிதக் கட்டணமும் இன்றி பரிவர்த்தனைகள் நடந்து வரும் நிலையில், ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு மத்திய அரசு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. இதன்படி, இனி தனிநபர் வியாபாரிகளுக்கு இடையே ரூ.2,000-க்கும் அதிகமான பரிவர்த்தனை நடந்தால் 0.4 சதவீத கட்டணம், ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ரூ.300 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ. ஒரு லட்சம் வரை யு.பி.ஐ. பண பரிமாற்றத்தை பெறும் சிறுவியாபாரிகளுக்கு இந்த கட்டணம் கிடையாது.

வியாபாரிகளுக்கு பாதிப்பு

இதுமட்டுமல்லாமல் ரெயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள், விவசாய இடுபொருட்கள் போன்ற அத்தியாவசியத் துறைகளில் ரூ.2,000-க்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா ரூ.5 என்ற நிலைக்கட்டணம் வசூலிக்கப்படும். பார்ப்பதற்கு இது சிறிய கட்டணமாகத் தோன்றினாலும், வியாபாரிகளுக்கு இது பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்.

இதுமட்டுமல்லாமல், வியாபாரிகள் மீது விதிக்கப்படும் கட்டணம் நிச்சயமாக மக்கள் மீதுதான் சுமத்தப்படும். இப்படி கட்டணம் விதிக்கத் தொடங்கினால், டிஜிட்டல் பரிவர்த்தனை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும். இது மீண்டும் ரொக்கப் பரிவர்த்தனைக்கான வாசலைத் திறந்துவைத்து விடும்.

ரொக்கப் பரிவர்த்தனைக்குத் திரும்பும் சூழல்

கடந்த காலங்களில் இதுபோல் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டபோது, மக்கள் அந்த வரம்புக்குள் பணம் எடுக்கப் பழகிக்கொண்டனர். இப்போது யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், ரூ.2 ஆயிரத்துக்கு உட்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே மக்கள் அதனைப் பயன்படுத்தும் நிலை ஏற்படும். அதற்கு மேற்பட்ட தொகைக்கு மீண்டும் ரொக்கப் பரிவர்த்தனைக்குத் திரும்பும் சூழல் ஏற்படும்.

அதுபோல ரொக்கப் பரிவர்த்தனையிலும் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பணமாக வழங்கக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே அந்த கட்டுப்பாடுகளை எல்லாம் மத்திய அரசு நீக்கவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

SCROLL FOR NEXT