தலையங்கம்

அமெரிக்காவை தொடர்ந்து ரஷியாவும் கை கொடுக்குமா?

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு கோர தாண்டவம் ஆடத்தொடங்கிவிட்டது.

உலக அரசியல் சூழ்நிலை எப்போது எந்த திசையில் திரும்பும் என்பதை கணிக்கமுடியாது. குறிப்பாக கச்சா எண்ணெய் போன்ற முக்கிய வளங்களை சுற்றி உருவாகும் பதற்றங்கள் உலக பொருளாதாரத்தையே ஆட்டி அசைக்கும். அதுபோன்ற அசாதாரண நிலைதான் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் நமது கப்பல் போக்குவரத்தில் பெரும்பங்கு வகிக்கும் பாரசீக வளைகுடாவில் உள்ள ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை எந்த நாட்டு கப்பலும் போகமுடியாத அளவுக்கு அந்த நாடு மூடிவிட்டது.

குறிப்பாக இந்தியாவுக்கு கியாஸ் சிலிண்டர் அனுப்புவதில் பெரும்பங்கு வகிக்கும் கத்தாரில் உள்ள பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது குண்டு வீசி அழித்துவிட்டதால், அந்த நாடு அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் மூடிவிட்டது. இது ஒரு பாதிப்பு என்றால். இந்தியாவுக்கு கியாஸ் சிலிண்டர்களை ஏற்றுமதி செய்துவரும் மற்ற நாடுகளில் இருந்தும் கப்பல்கள் வரமுடியவில்லை. இதனால் இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு கோர தாண்டவம் ஆடத்தொடங்கிவிட்டது.

இந்த நிலை இன்னும் ஒரு வாரத்துக்கு நீடித்தால்கூட நினைத்து பார்க்கமுடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பீதி உருவாகிவிட்டது. இந்தியாவுக்கு ஆண்டுக்கு 3.3 கோடி டன் சமையல் கியாஸ் தேவை இருக்கிறது. அந்த கணக்குப்படி மாதத்துக்கு குறைந்தபட்சம் 27.5 லட்சம் டன் சமையல் கியாஸ் தேவை இருக்கிறது. இது 3.30 கோடி இணைப்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

என்ன செய்யப்போகிறோம் என்று தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அமெரிக்காவும், கனடாவும் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளன. உடனடியாக அமெரிக்கா 10 லட்சம் டன் சமையல் கியாசை இந்தியாவுக்கு தருகிறது. அமெரிக்காவில் இருந்து ஹார்முஸ் நீரிணை வழியாக இந்த சமையல் கியாசை ஏற்றிக்கொண்டு கப்பல்கள் வர தேவையில்லை. தென்கிழக்கு ஆசியா கடல்பாதை வழியாக கொண்டுவரப்படும்.

இந்த சமையல் கியாசை ஒரு கப்பலில் 50 ஆயிரம் டன் என்று 20 பெரிய கப்பல்களில் கொண்டுவரவும், அந்த கப்பல்கள் இந்த மாத கடைசியில் இந்திய துறைமுகங்களுக்கு வந்து சேரும்வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல அமெரிக்கா, கனடாவில் இருந்து மேலும் 20 கப்பல்களில் சமையல் கியாஸ் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இது நமது ஒருமாத மொத்த தேவையில் பாதி அளவைக்கூட பூர்த்தி செய்யாது.

இந்தியாவுக்கு சிறந்த மாற்றுவழி, ரஷியாவிடம் இருந்து கியாஸ் வாங்குவதுதான். ரஷியாதான் ஐரோப்பிய நாடுகளுக்கான கியாஸ் தேவையை பெருமளவில் நிறைவேற்றி வருகிறது. அமெரிக்காவின் வரிவிதிப்பு அச்சுறுத்தலால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்ததால், ரஷியா இந்தியாவுடன் இனி நட்பு கிடையாது, எல்லாம் வியாபாரம்தான் என்று கறாராக சொல்லி நீண்டகால உறவில் விரிசலை ஏற்படுத்திவிட்டது.

நமது தேவைக்கு கச்சா எண்ணெயை எந்த நாட்டிடம் இருந்தும் வாங்கிக்கொள்ள உரிமை இருக்கிறது. இதற்கு அமெரிக்கா எப்படி கட்டுப்பாடு விதிக்கமுடியும் என்ற கேள்விகள் இப்போது மக்கள் மனதில் எழுகின்றன. ஆக ரஷியா உடனான நட்பை மீண்டும் மலர செய்வதன் மூலம் மட்டுமே இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். வளைகுடாவில் பிரச்சினை என்றால் நமது எரிபொருள் தேவையை நிறைவேற்ற ரஷியாதான் கை கொடுக்கமுடியும்.