தலையங்கம்

சட்டத்தை இயற்றும் இடத்தில் பெண்கள்

தமிழக சட்டசபை வரலாற்றிலேயே 1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்தில்தான் அதிகபட்சமாக 32 பெண் எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.

சென்னை,

இந்தியாவிலேயே பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் தமிழ்நாடுதான் முன்னோடி. முதலில் அரசுப் பணிகளில் கலைஞர் கருணாநிதி 1989-ல் 30 சதவீத இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். அதனை 2021-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் 40 சதவீதமாக உயர்த்தினார். அதுபோல, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை 1994-ம் ஆண்டு ஜெயலலிதா கொண்டு வந்தார். அதனை கலைஞர் கருணாநிதி, 1996-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நடைமுறைப்படுத்தினார். பின்னர், 2016-ம் ஆண்டு ஜெயலலிதா அதனை 50 சதவீதமாக உயர்த்தினார். ஆனால், சட்டங்களை இயற்றும் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றுவதில் பல முட்டுக்கட்டைகள் இருக்கின்றன.

தமிழக சட்டசபை வரலாற்றிலேயே 1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்தில்தான் அதிகபட்சமாக 32 பெண் எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இதில் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 27 பேர். அந்தச் சமயத்தில் ராதாபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த ரமணி நல்லதம்பி, ஜெயலலிதாவிடம், "பெண் உறுப்பினர்களான நாம் அனைவரும் ஒரே நிறச் சேலை அணிந்தால் நன்றாக இருக்குமே" என்று கூறினார். அவ்வளவுதான்! ஜெயலலிதா அடுத்த நாளே அனைத்துப் பெண் உறுப்பினர்களுக்கும் பச்சை நிறச் சேலைகளை வாங்கிக் கொடுத்தார். இதையடுத்து, கவர்னர் மாளிகையில் நடந்த ஒரு விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட அனைத்துப் பெண் உறுப்பினர்களும் பச்சைச் சேலை அணிந்து வந்தது வரலாற்றில் முக்கியப் பதிவாக அமைந்தது.

தற்போதைய சட்டசபையில் த.வெ.க.வைச் சேர்ந்த 13 பேர், அ.தி.மு.க.வைச் சேர்ந்த 6 பேர் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 23 பெண்கள் எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், இதில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 2 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துவிட்டனர். தி.மு.க.வில் இருந்து ஒரு பெண் உறுப்பினர் கூட இல்லை. தமிழக அமைச்சரவையை எடுத்துக்கொண்டால், இதுவரை இல்லாத அளவுக்கு 4 பெண் அமைச்சர்கள் இருந்தாலும், மொத்தமுள்ள 35 அமைச்சர்களில் இது வெறும் 11.43 சதவீதம் மட்டுமே. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் மத்திய, மாநில அமைச்சர்களாக 679 பேர் இருக்கும் நிலையில், அதில் 66 பேர் மட்டுமே பெண் அமைச்சர்கள். அதாவது, 10 அமைச்சர்களுக்கு ஒரு பெண் அமைச்சர் என்ற அளவில்தான் உள்ளனர்.

இந்தக் கணக்குகளையெல்லாம் பார்த்துத்தான் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை அனைவரும் வலியுறுத்துகிறார்கள். இந்தக் கருத்தை வலியுறுத்தி, முதல்-அமைச்சர் விஜய் தமிழக சட்டசபையில் அரசின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். அது அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. மொத்த வாக்காளர்களில் 49 சதவீதம் பெண் வாக்காளர்களாக இருக்கும் நிலையில், சட்டம் வந்தால்தான் பெண்களின் எண்ணிக்கை உயர வேண்டும் என்பதில்லை.

சட்டம் இல்லாமலேயே 1991-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா தனது கட்சி சார்பில் பெண்களுக்கு வாய்ப்பளித்து, 27 பேரை வெற்றி பெறச் செய்ததை அனைத்துக் கட்சிகளும் பின்பற்றினால், "சட்டங்கள் செய்வதும், பட்டங்கள் ஆள்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்று பெண்கள் ஆனந்தக் கும்மி அடிக்க முடியும்.

SCROLL FOR NEXT