கருப்பு-வெள்ளை காலங்களில் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று சொல்லி பெண்களை வெளியே செல்லவிடாமல் வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்தார்கள். இதுபோல உத்தியோகம் புருஷலட்சணம் என்று கூறி, ஆண்கள் மட்டுமே வேலைக்கு செல்லும் நிலை இருந்தது. சமூக சீர்திருத்தவாதிகள் முற்போக்கு கருத்தை விதைத்து போராடியதால் இந்த நிலைமை கொஞ்சம், கொஞ்சமாக மாறியது. பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பெண்களும் சாதிக்க வேண்டும் என்ற தணியாத வேட்கையில் பள்ளிகளுக்கு சென்று ஏட்டு கல்வியை படிக்க தொடங்கினர். பெண்களை அடிமைத்தளையில் இருந்து வெளியே கொண்டுவர பெரியார் பெரும் பங்காற்றினார். பெண்கள் முன்னேற்றத்துக்காக நமது தலைவர்கள் போட்ட வித்து இன்று ஆல் போல் தழைத்து அருகு போல் செழித்துள்ளது. இதன் எதிரொலியாகவே விவசாயம், அரசு பணிகள், தனியார் நிறுவன பணிகளில் பெண்கள் அதிகமாக வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள்.
தமிழக அரசை பொறுத்தமட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெண்களுக்கு அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார். இதனால் 30 சதவீதம் நிச்சயம் என்ற நிலையில், அதற்குமேல் அவர்கள் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில், ராஜேஸ்வரி சுவே என்ற பெண் அகில இந்திய அளவில் 2-வது இடத்தில் தேர்வாகி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். ஓசூரில் உள்ள அசோக் லேலண்டு தொழிற்சாலையில் உற்பத்தி பிரிவில் அதாவது புரொடக்ஷன் லைனில் பெண்கள்தான் முழுமையாக பணியாற்றுகிறார்கள். கங்கை கொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள பல தொழில் நிறுவனங்களில் பெரும்பாலான தொழிலாளர்கள் பெண்கள்தான். குறிப்பாக டாடா பவர் சோலார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள். இப்படி பல தொழில் நிறுவனங்களில் பெண்கள் கோலோச்சுகிறார்கள்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 9-வது பெர்த்தில் அதாவது கப்பல் வந்து நிற்கும் தளத்தில் பல்வேறு பணிகளில் நிறைய பெண்கள் வேலை பார்ப்பதை பார்க்கமுடிகிறது. நிர்வாக பணிகள், மருத்துவ பணிகளில் மட்டுமல்லாமல் ஆண்களுக்கு நிகராக கிரேன் ஆபரேட்டர் போன்ற இடர்மிகுந்த பல பணிகளில் சீருடை அணிந்து இளம் பெண்கள் மிடுக்காக பணியாற்றுகிறார்கள். 9-வது பெர்த்தில் மட்டும் பணியாற்றும் 40 கிரேன் ஆபரேட்டர்களில், 29 பேர் மங்கைகள். இதுதவிர 'பிளானிங் டீம்' என்று சொல்லப்படும் பல்வேறு நிலைகளில் திட்டமிடுதல் பணிகளிலும் பெண்களே யோசனைகளுக்கு வடிவம் கொடுக்கிறார்கள். கண்டெய்னர் டெர்மினலான இந்த பெர்த்தில் பணியாற்றுபவர்களில் 45 சதவீதம் பேர் பெண்கள் என்ற முத்திரையை பதித்துள்ளனர். இந்த ஆண்டு சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டாக கடைப்பிடிக்கப்பட்டு விவசாய பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது.
வயல்களில் நாற்று நடுவது, களை பறிப்பது, அறுவடை செய்வதை தாண்டி இப்போது பெண்கள் டிராக்டர் மூலம் உழவு செய்வது, அறுவடை எந்திரங்களை இயக்குவது, கட்டளைக்கு பணிந்து ஆகாயத்தில் பறக்கும் டிரோன்கள் மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பது போன்ற பணிகளிலும் அசத்துகிறார்கள். ஒட்டுமொத்தமாக பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை நிரூபித்து வருகிறார்கள். சவால்களை எதிர்கொண்டு அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனைகளை படைத்து, கொடிகட்டி பறப்பது யுகப்புரட்சியாக இருக்கிறது. 'ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி' என்ற முண்டாசு கவி பாரதியாரின் வரிகள் இப்போது நனவாகிவிட்டன.