ஒரு காலத்தில் இங்கிலாந்தின் ஆளுகைக்குள் இருந்த 74 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் காமன்வெல்த் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நாடுகளுக்குள் வர்த்தக மற்றும் கலாசார உறவு மட்டுமல்லாமல் விளையாட்டுத்துறையிலும் ஒருங்கிணைப்பு இருக்கிறது.
அந்தவகையில், இந்த நாடுகள் தங்களுக்குள் காமன்வெல்த் என்ற பெயரில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையாட்டு போட்டிகளை நடத்துகின்றன. இந்தியாவில் கடைசியாக 2010-ம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் போட்டி நடந்தது. நடந்தது என்றுதான் சொல்ல முடியுமே தவிர, வெற்றிகரமாக நடந்தது என்று சொல்லமுடியாத அளவுக்கு தீராத வடுவாக அந்த போட்டியில் ஒரு கரும்புள்ளி விழுந்துவிட்டது
அப்போது இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடியின் மீது நிறைய ஊழல் புகார்கள் கூறப்பட்டன. விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு போதுமான வசதிகள் செய்துதரவில்லையென்று அடுக்கடுக்கான புகார்களை அள்ளி வீசினர். உள்கட்டமைப்பு வசதிகளிலும் பல குறைபாடுகள் இருந்தது.
இதன் தொடர்ச்சியாக சுரேஷ் கல்மாடியை சி.பி.ஐ. கைது செய்தது. இது காமன்வெல்த் நாடுகளிடையே இந்தியாவுக்கு மிகப்பெரிய அவப்பெயரை தேடி தந்தது. அதைத்தொடர்ந்து அவர் காமன்வெல்த் போட்டி கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு பொதுக்குழு கூட்டத்தில் 2030-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை இந்தியாவில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்ததும் மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி உலகை வரவேற்க காத்திருக்கிறோம் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த போட்டியை 2030-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.
போட்டியை நடத்தப்போகும் நாடு என்ற முறையில், இந்தியா 2 புதிய அல்லது பாரம்பரிய விளையாட்டுகளை இந்த போட்டியில் சேர்த்துக்கொள்ளலாம். அந்தவகையில், நமது நாட்டில் பிறந்து பூமி பந்தில் உள்ளவர்களின் மனங்களை ஆட்சி செய்துக்கொண்டிருக்கும் யோகாவை காமன்வெல்த் போட்டியில் சேர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் யோகாவின் தலைநகராக இந்தியா திகழ்கிறது.
சர்வதேச யோகா தினம் இப்போது அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. அடுத்த மாதம் ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் யோகா, காட்சி போட்டியாக நடத்தப்படுகிறது. அதைத்தொடர்ந்து 2030-ல் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியிலும் யோகாவை சேர்க்க முயற்சிகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன.
இதுபோல 2036-ல் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தால், அதையும் ஆமதாபாத்தில் நடத்தவும், யோகாவையும் ஒரு போட்டியாக நடத்தவும் இந்தியா பட்டியலிட்டுள்ளது. மேலும் சமீபத்தில் கிளாஸ்கோவில் நடந்த 23-வது காமன்வெல்த் போட்டியில் இந்தியா 39 பதக்கங்களை குவித்தபோதிலும் அதில் பேட்மிண்டன், ஆக்கி, மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறாதது பெருத்த ஏமாற்றம் அளித்தது. இந்த விளையாட்டுகள் இந்தியாவில் நடைபெறும் போட்டியில் மீண்டும் இடம்பெறுகின்றன.
2030 காமன்வெல்த் போட்டியில் 15 முதல் 17 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. 2030 காமன்வெல்த் போட்டியைப்போல, 2029-ல் சர்வதேச போலீஸ் விளையாட்டு போட்டியும் ஆமதாபாத்தில் நடத்தப்படும் என்று மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மொத்தத்தில் இந்தியாவின் விளையாட்டு தலைநகராக காந்தி பிறந்த மண்ணில் உள்ள ஆமதாபாத் உருவெடுத்துவிட்டது.