புதுச்சேரி
புதுவையில் கொசுத்தொல்லை காரணமாக நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொசுத்தொல்லை
புதுவையில் தற்போது பனிக்காலம் முடியும் தருவாயில் உள்ளது. இரவு நேரங்களில் கடுமையான பனி பெய்கிறது. காலை 8 மணிவரை பனி இருப்பதால் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் குளிர் தாக்காத வண்ணம் குல்லா, ஸ்வட்டர் அணிந்து செல்கின்றனர்.
இத்தகைய நிலையில் தற்போது கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. மாலை வேளையில் வீடுகளில் கதவு, ஜன்னலை திறந்து வைத்திருந்தால் கொசுக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றன. அதன் தொல்லையில் இருந்து தப்ப மக்கள் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.
நோய்கள் பரவும்
வீடுகளில் இரவு கொசுவர்த்தி அல்லது கொசுவலை இல்லாமல் தூங்க முடியவில்லை. சாலையோரம் வசிப்பவர்கள் தூங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். படுக்கும் இடத்தின் அருகில் தீமூட்டியோ, கொசுவலை கட்டிக்கொண்டோதான் தூங்குகின்றனர்.
கொசு கடிப்பதால் குழந்தைகள், நோயாளிகள் இரவு துக்கமின்றி தவிக்கின்றனர். இதனால் அவர்களின் உடல்நிலை மோசமாகும் நிலை உள்ளது. மேலும் கொசுவினால் ஏற்படும் டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவும் ஆபத்தும் உள்ளது.
மருந்து தெளிப்பு
சாக்கடை வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்பட்டாததால் தண்ணீர் தேங்கி நின்று அங்கு கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் சுகாதரத்துறை மற்றும் நகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிக்கப்படும். ஆனால் இப்போது இந்த பணிகள் இன்னும் தொடங்கியதாக தெரியவில்லை.
எனவே போர்க்கால அடிப்படையில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணிகளை அரசு நிர்வாகம் தொடங்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.