மும்பை

'பிபர்ஜாய்' புயல் முன்னெச்சரிக்கை- கடற்கரைகளில் கூடுதல் தேசிய பேரிடர் மீட்புபடையினர் நிறுத்திவைப்பு

'பிபர்ஜாய்' புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மும்பையில் கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார்.

மும்பை, 

'பிபர்ஜாய்' புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மும்பையில் கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார்.

கரையை கடக்கும் புயல்

அரபிக்கடலில் உருவாகி உள்ள 'பிபர்ஜாய்' புயல் வரும் 15-ந் தேதி (வியாழக்கிழமை) குஜராத் மாநிலம் கட்ஜ் பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக கடந்த சில நாட்களாக மும்பையில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. மெரின் டிரைவ், சிவாஜிபார்க், கேட்வே ஆப் இந்தியா பகுதிகளில் பொது மக்கள் ராட்சத அலையை பார்த்து ரசித்தனர்.

இதேபோல நகரில் காற்றும் வேகமாக வீசியது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன.

மும்பையில் காற்று, அலைசீற்றம்

மேலும் புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு மும்பையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்தநிலையில் நேற்றும் மும்பையில் காற்று வேகமாக வீசியது. அலைசீற்றமும் காணப்பட்டது.

புயல் கரையை கடக்க உள்ள நிலையில் நகரில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரைக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடற்கரைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உயிர்காக்கும் வீரர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

கூடுதலாக மீட்பு படையினர்

இதேபோல புயலை எதிர்கொள்ள மும்பையில் ஏற்கனவே 3 தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நகரில் கூடுதலாக 2 குழுவினர் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரி கூறுகையில், "மும்பையில் ஏற்கனவே 3 குழு போடர் மீட்பு படையினர் உள்ளனர். தற்போது கூடுதலாக மேலும் 2 குழு அந்தேரி, காஞ்சூர்மார்க் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். புனேயில் உள்ள பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் இருப்பார்கள். புயலை எதிர்கொள்ள குஜராத்துக்கு 4 குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.