பாகூர்
பொதுமக்களின் புகாரை அலட்சியப்படுத்தக்கூடாது என்று போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்தார்.
குறைகேட்பு கூட்டம்
புதுச்சேரியில் 2 போலீசார் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் கவுன்சிலிங் நடத்தப்படும் என்று போலீஸ் உயர்அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில் பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் போலீசார் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், விஜயகுமார், தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கிருமாம்பாக்கம், பாகூர், கரையாம்புத்தூர் புறக்காவல் நிலைய உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பணியின் போது ஏற்படும் பிரச்சினைகள், தனிப்பட்ட பிரச்சினைகளையும் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
போலீசார் எண்ணிக்கை
அப்போது தற்கொலை, பொது இடத்தில் இறந்தவர்களை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் நமது பகுதியில் இல்லாததால், ஏற்படும் காலதாமதத்தால் பொதுமக்கள் பிரச்சினையில் ஈடுபடுகின்றனர். விபத்து அல்லது நோயினால் சிகிச்சை பெறும் போலீசாருக்கான தொகையை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் பெண்களுக்கான தனி கழிப்பறை, ஓய்வறை அமைத்து தரவேண்டும், தற்போது போலீஸ் நிலையங்களில் போலீசார் குறைவாக இருப்பதால் தொடர்ந்து பணியில் இருக்கும் நிலை உள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். காவலர்கள் பதவி உயர்வுக்கு காலம் கடத்தாமல் 15, 25, 35 ஆண்டுகள் முடித்தவர்களுக்கு சிறப்பு பதவி உயர்வு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களிடம் கனிவாக...
இதனை தொடர்ந்து பேசிய போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், போலீசாரின் பிரச்சினைகளை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும். பொதுமக்கள் புகார் அளிக்க வரும்போது அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும். அவர்கள் கொடுக்கும் புகாரை அலட்சியப்படுத்தாமல் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் மீது பொதுமக்கள் நல்ல நம்பிக்கை வைத்துள்ளனர். அதற்கு மதிப்பளித்து ஒவ்வொரு போலீசாரும் செயல்பட வேண்டும் என்றார்.