தலைப்புச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு யாருக்கும் எதிரான ஒன்றல்ல - மோகன் பகவத் பேச்சு

ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட சிலர் அரசியலில் இருக்கலாம். ஆனால் அமைப்புக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என மோகன் பகவத் கூறினார்.

மும்பை,

மும்பை ஒர்லி பகுதியில் உள்ள நேரு மையத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:-

ராஜா ராம் மோகன் ராய், சுவாமி விவேகானந்தர் மற்றும் தயானந்த சரஸ்வதி போன்ற சீர்திருத்தவாதிகள் காட்டிய வழியில் சுதந்திர போராட்ட காலத்தில் பல்வேறு சிந்தனைகள் உருவெடுத்தன. இருப்பினும், சமூகத்திற்கு முறையான திசையை வழங்கி, அதற்கான சூழலை உருவாக்கும் பணி இன்னும் முழுமையடையவில்லை

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு யாருக்கும் எதிரான ஒன்றல்ல. நாங்கள் எப்போதுமே புகழுக்காகவோ அல்லது அரசியல் அதிகாரத்தை பிடிப்பதற்காகவோ இயங்கியது கிடையாது. இந்திய சமூகத்திற்கு ஒரு சரியான திசையை காட்டி, நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களுக்கு உறுதுணையாக இருப்பதே எங்கள் ஒரே இலக்கு.

பலர் எங்களை ஒரு ராணுவம் போன்ற அமைப்பு என்று நினைக்கிறார்கள். நாங்கள் அணிவகுப்பு நடத்துவதாலோ அல்லது லத்தி வைத்திருப்பதாலோ எங்களை ஒரு மல்யுத்த குழுவாகவோ அல்லது ராணுவமாகவோ பார்க்க வேண்டாம். அதேபோல், ஆர்.எஸ்.எஸ் நேரடியாக அரசியலில் ஈடுபடுவது கிடையாது. ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட சிலர் அரசியலில் இருக்கலாம். ஆனால் அமைப்புக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.