ஆன்மிகம்

சைவ சமய வளர்ச்சிக்கு வழிகாட்டிய சமயக்குரவர்கள்

சமயக்குரவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் பல அற்புதங்களை செய்ததுடன், சைவ சமயத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்தனர்.

சைவ நெறியை உலகம் அறியச்செய்தவர்கள், சமயக்குரவர்கள் எனப்படும் நால்வர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் இவர்கள் நால்வரும் சிவபெருமான் மீது ஒவ்வொரு வழியில் பக்தியைச் செலுத்தினர். தேவாரம், திருவாசகம் உள்ளிட்டபல்வேறு பாடல்களின் வாயிலாக ஈசனை போற்றிப் புகழ்ந்தனர்.

சமயக்குரவர்கள் நால்வரின் முதன்மையானவராகப் போற்றப்படுகிறார் திருஞானசம்பந்தர். இவர் பிறந்த ஊர் சீர்காழி. 3-வது வயதிலேயே சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, அம்பிகையிடம் இருந்து சிவஞான பால் அருந்தியவர். இவர் வாழ்ந்த காலம் 7-ம் நூற்றாண்டு. இவர் பாடிய தேவாரப் பாடல்கள்தான் பன்னிரு திருமுறையின் வரிசையில் முதலாவதாக வைத்து எண்ணப்படுகிறது. ஆம் 1 முதல் 3 வரையிலான திருமுறைகளில் திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

இவர் சிவபெருமானையும், பார்வதியையும் தாய் தந்தையாக நினைத்து பக்தி செலுத்தியவர். 16 வயது வரை வாழந்த இவர், ஆச்சாள்புரம் என்று அழைக்கப்படும் திருநல்லூர் பெருமணத்தில் உள்ள சிவலிங்கத்தில் தோன்றிய பேரொளி ஜோதியில் கலந்து முக்தியடைந்தார்.

சமயக்குரவர்கள் நால்வரில், இரண்டாவதாக வைத்து போற்றப்படுபவர் திருநாவுக்கரசர். இவரது இயற்பெயர் மருள் நீக்கியார் என்பதாகும். இவரை அப்பர் என்றும் அழைப்பார்கள். இவர் வாழ்ந்ததும் 7-நூற்றாண்டுதான். திருஞானசம்பந்தரின் சமகாலத்தில் வாழ்ந்தவர் இவர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவாமூர் தலத்தில் பிறந்தவர். இவரது நாவில் இருந்து பிறந்த இனிய பாடல்களைக் கேட்டு ரசித்ததன் காரணமாக, திருநாவுக்கரசர் என்ற பெயரை சிவபெருமானே சூட்டி அருளினார். பன்னிரு திருமுறைகளில் இவர் பாடிய பாடல் 4, 5, 6 ஆகிய திருமுறைகளில் இடம்பெற்றுள்ளன. இவர் ஈசனைத் தலைவனாகவும், தன்னைத் தொண்டனாகவும் கருதி பக்தி செலுத்தியவர். 61 ஆண்டுகள் வாழ்ந்த இவர், திருப்புகலூர் என்ற தலத்தில் முக்தி அடைந்தார்.

சமயக்குரவர்களின் மூன்றாவதாக வைத்து வணங்கப்படுபவர். இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநாவலூரில் பிறந்தார். இவரது காலம் 7-ம் நூற்றாண்டின் இறுதியும், 8-ம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும். சிறு பருவத்திலேயே இல்லற வாழ்க்கைக்குள் நுழைய இருந்த சுந்தரரை, முதியவர் வேடத்தில் வந்த சிவபெருமான் தடுத்தாட்கொண்டு, அவரை பக்தி மார்க்கத்தின் வழியில் செல்ல வைத்த திருத்தலமாக திருவெண்ணெய்நல்லூர் இருக்கிறது. இது திருநாவலூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

18 ஆண்டுகள் வாழ்ந்து சைவத்திற்கு தொண்டாற்றிய இவர் பாடிய தேவாரப் பாடல்கள். பன்னிரு திருமுறையில் 7-வது திருமுறையாக இடம்பிடித்துள்ளன. இவர் சிவபெருமானைத் தன்னுடைய தோழனாக நினைத்து பக்தி செலுத்தியவர். இவர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள திருஅஞ்சைக்களம் என்ற இடத்தில் முக்தி அடைந்தார். இந்த திருத்தலம் தற்போது திருவஞ்சிக்குளம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

சமயக்குரவர்களில் நான்காவதாக வைத்து புகழப்படுபவர், மாணிக்கவாசகர். இவர் பிறந்த ஊர், திருவாதவூர். இதனால் இவரை திருவாதவூரார் என்று அழைப்பார்கள். இவர் ஆரம்ப காலத்தில் அரிமர்த்தன பாண்டியனின் அரசவையில் முதன்மை அமைச்சராக பணியாற்றியவர். திருப்பெருந்துறை என்ற ஆவுடையார் கோவில் தலத்தில் ஈசனால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, சைவத் திருப்பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். இவர் வாழ்ந்த காலம் பற்றிய தெளிவான தகவல் இல்லை. இவர் வாழ்ந்தது, கி.பி. 9-ம் நூற்றாண்டு என பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள். சமயக்குரவர்கள் நால்வரின் முதன்மைமானவர் என்றும், கி.பி. 3-ம் நூற்றாண்டு இவருடையது என்றும் சிலர் கூறுகிறார்கள்.

32 ஆண்டு காலம் வாழ்ந்த இவர் பாடிய பாடல்கள் திருவாசகம், திருக்கோவையார் என்ற நூல்களாக உள்ளன. இந்த நூல்களும், சிவபெருமானே தம் கையால் எழுதும் பேறுபெற்றவையாக திகழ்கின்றன. இவை இரண்டும், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக தொகுக்கப்பட்டுள்ளது. இதில் திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் படிப்பவர்களின் மனதை கரையச் செய்யும் வகையிலானவை. இதனால்தான் "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்ற வாக்கியம் உருவானது. மாணிக்கவாசகருக்காக சிவபெருமான் நிகழ்த்திய சில அற்புதங்கள் திருவிளையாடல் புராணம் என்ற சிவபெருமானின் அற்புதங்களில் இடம்பிடித்துள்ளன. இவர் சிதம்பரத்தில் பலர் பார்க்கும் தருணத்தில், சிவலிங்க திருமேனி மீது மீது கலந்து முக்தி அடைந்தார்.

சைவ சமயக்குரவர்கள் நான்கு பேரும் சென்ற இடங்களில் எல்லாம் பல அற்புதங்களை செய்ததுடன், சைவ சமயம் உயர்வு பெறும் வழியினை பாடல்கள் மூலம் அருளினர்.