புனே,
அஜித்பவாருடன் சேர்ந்து பா.ஜனதா ஆட்சி அமைத்ததால் தான் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி விலகி நன்மை ஏற்பட்டது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.
3 நாள் அரசு
மராட்டியத்தில் 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டது. பா.ஜனதா, சிவசேனா கூட்டணி முதல்-மந்திரி பதவிக்கான போட்டியால் உடைந்தது. சிவசேனா கொள்கை மாறுபாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டது. இதற்காக பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந் தேதி அதிகாலையில் கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.
ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு கிடைக்காததால் இந்த திடீர் அரசு 3 நாட்களிலேயே கவிழ்ந்தது.
சரத்பவாரின் ஆதரவு
இந்த சம்பவம் இன்றளவிலும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில், அந்த சமயத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு தெரிந்து தான் ஆட்சி அமைத்தோம், அவருடைய ஆதரவு தங்களுக்கு இருந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இதை தேசியவாத காங்கிரஸ் மறுத்து இருந்தது.
இதுகுறித்து புனே பிம்ப்ரி- சிஞ்ச்வட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்த சரத்பவாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-
நன்மை
அஜித்பவாருடன் இணைந்து ஆட்சியமைக்க பா.ஜனதாவுடன் இணைந்ததால் ஏற்பட்ட நன்மை என்ன என்றால், மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி நீங்குவதற்கு அது காரணமாக அமைந்தது. அதன் பிறகு என்ன நடந்து என்பதை அனைவரும் பார்த்திருப்பீர்கள்.
இதுபோன்ற ஒன்று நடக்காமல் இருந்திருந்தால், ஜனாதிபதி ஆட்சி நீக்கப்பட்டு இருக்குமா? ஜனாதிபதி ஆட்சியை நீக்காமல் இருந்தால், உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்று இருப்பாரா?
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னணியில் இருப்பவர்கள்
மேலும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை உண்மையான சிவசேனா என அங்கீகரித்த தேர்தல் ஆணைய முடிவு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "அரசியலில் கருத்து வேறுபாடு சகஜம் தான். ஆனால் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஒரு கட்சியின் பெயரும் சின்னமும் பறிக்கப்பட்ட சம்பவம் இந்திய வரலாற்றில் இதுவரை நடந்ததில்லை. கட்சி சின்னம் குறித்து முடிவு எடுத்தது யார்? தேர்தல் ஆணையமா அல்லது ஆணையத்தை வழிநடத்துபவர்களா? கடந்த காலங்களில் இதுபோன்ற தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை. இதன் பின்னணியில் இருக்கும் மிகப்பெரும் பலம் வாய்ந்தவர்களின் பங்கை நிராகரிக்க முடியாது.
சுற்றுப்பயணம்
அதிகப்படியான அதிகார துஷ்பிரயோகத்தால், ஒரு கட்சியை ஒடுக்க முயற்சிக்கும் போதெல்லாம் பொதுமக்கள் அந்த கட்சிக்கு ஆதரவாக நிற்கிறார்கள். நான் சமீபத்தில் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அப்போது முக்கிய தலைவர்கள் சிவசேனாவை விட்டு வெளியேறினாலும், தீவிரமான சிவசேனா கட்சி தொண்டர்கள் இன்னும் உத்தவ் தாக்கரேவுடன் ஆதரவாக இருப்பதை பார்க்க முடிந்தது. அது தேர்தலில் நிரூபிக்கப்படும்" என்றார்.
அதேபோல கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் ராஜினாமாவுக்கு மகிழ்ச்சி தெரிவித்த சரத்பவார், "மராட்டியத்தில் பல கவர்னர்கள் வந்தனர். எல்லோரும் கவர்னர் பதவியின் கண்ணியத்தை உயர்த்தினார்கள். ஆனால் அந்த பட்டியலில் ஒரே ஒரு விதிவிலக்கு உள்ளது. அது கோஷ்யாரி மட்டும் தான்" என்றார்.