ஸ்பெஷல்ஸ்

சூரிய குடும்பத்தை தாண்டி பால்வெளி அண்டத்தை நோக்கிய பயணம்.. வாயேஜர் விண்கலங்கள்.. ஓர் பார்வை

வாயேஜர் விண்மலன்கள் விண்மீன்களுக்கு இடையேயான எல்லையற்ற விண்வெளியில் (Interstellar Space) பயணம் செய்து வருகின்றன.

இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் ஒரு சிறிய பகுதியாக பால்வெளி மண்டலம் விளங்குகிறது. இந்த பால்வெளி மண்டலத்துள்ளே இருக்கும் நட்சத்திரம்தான் சூரியன். இந்த சூரியனை 9 கோள்கள் சுற்றி வருகின்றன. இதையே நாம் சூரியக் குடும்பம் என்கிறோம். சூரியக் குடும்பத்தில் 3-வதாக நமது பூமி உள்ளது. பூமியின் மேற்பரப்பில் நாம் வசித்து வருகிறோம். நில அமைப்பு, நீர், காற்று, சூரிய வெளிச்சம் என உயிர் வாழ தகுந்த அம்சம் பூமியில் நிலவுவதால் இங்கு மனிதர்கள் உட்பட பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

விண்வெளி குறித்தும், பூமியை தாண்டி, வேறு ஏதாவது ஒரு கோள் மனிதான் வாழ தகுதி வாய்ந்ததாக உள்ளதா? என நாம் ஆய்வு செய்து வருகிறோம். இதற்காக பல்வேறு விண்கலன்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவ்வாறு அனுப்பப்பட்ட விண்கலன்கள்தான் வாயேஜர் விண்கலன்கள்.

வாயேஜர் விண்கலன்கள்:

நாசாவால் உருவாக்கப்பட்ட வாயேஜர்-1 மற்றும் வாயேஜர்-2 விண்கலங்கள் 1977ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டன. வாயேஜர்-1 விண்கலம் ஜூபிடர், சனி கிரகங்களை எட்டிப் பார்த்துவிட்டும், வாயேஜர்-2 விண்கலம் யுரேனஸ், நெப்டியூன் கிரங்களுக்கு அருகே சென்று படம் பிடித்துவிட்டும் இப்போது அண்டவெளியை அடைந்துள்ளன.

நோக்கம்;

175 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் ஒரு அரிய கிரக சீரமைப்பு (Planetary Alignment) 1970-களின் இறுதியில் வரவிருந்ததை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கு கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுக்கும் இந்த அமைப்பைப் பயன்படுத்தி, ஒரு விண்கலத்தைக் கொண்டு அனைத்துக் கோள்களையும் அடுத்தடுத்து ஆய்வு செய்யத் திட்டமிட்டனர். இதுவே வாயேஜர் திட்டத்தின் அடித்தளமாகும்.

விண்கலத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு

விண்வெளியின் கடுமையான குளிர் மற்றும் கதிர்வீச்சுகளைத் தாங்கும் வகையில் இவை மிக உறுதியாகக் கட்டமைக்கப்பட்டன:மாபெரும் ஆண்டெனா: பூமியுடன் தொடர்புகொள்ள 3.7 மீட்டர் (12 அடி) விட்டம் கொண்ட ஒரு பெரிய பரவளைய ஆண்டெனா (High-Gain Antenna) இதன் மையப்பகுதியாக வைக்கப்பட்டது.

கணினி நினைவகம்: ஆச்சரியமாக, இன்றைய நவீன ஸ்மார்ட்போன்களை விட பல்லாயிரக் கணக்கான மடங்கு குறைந்த திறன் கொண்ட 69 கிலோபைட் (KB) நினைவகம் (Memory) மட்டுமே இதில் இருந்தது.

அறிவியல் கருவிகள்

புகைப்படக் கருவிகள், காந்தமானி (Magnetometer), கதிர்வீச்சு கண்டறியும் கருவிகள் மற்றும் பிளாஸ்மா அலைகளை அளவிடும் கருவிகள் என மொத்தம் 11 முக்கிய அறிவியல் உபகரணங்கள் இதில் பொருத்தப்பட்டன.

ஆற்றல் மூலம் (அணுசக்தி பேட்டரி)

சூரியனிலிருந்து பில்லியன் கணக்கான கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் பயணிக்கும் என்பதால், இந்த விண்கலன்களில் சூரிய ஒளித் தகடுகளைப் (Solar Panels) பயன்படுத்த முடியாது. எனவே, ஆற்றலுக்காக புளூட்டோனியம்-238 (Plutonium-238) மூலம் இயங்கும் மூன்று ரேடியோஐசோடோப் தெர்மோஎலக்ட்ரிக் ஜெனரேட்டர்கள் (RTG) பொருத்தப்பட்டன. இந்த அணுசக்தி பேட்டரிகள் வழங்கும் வெப்பமே மின்சாரமாக மாற்றப்பட்டு, கடந்த 50 ஆண்டுகளாக விண்கலனை இயக்கி வருகிறது.

பூமியில் இருந்து தற்போதைய தூரம்

வாயேஜர் 1 விண்கலம் பூமியிலிருந்து சுமார் 25.5 பில்லியன் கிலோமீட்டர் தொலைவிலும், வாயேஜர் 2 விண்கலம் சுமார் 21.3 பில்லியன் கிலோமீட்டர் தொலைவிலும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அதாவது, இவை இரண்டுமே ஒரு நொடிக்கு 5 கி.மீ. தூரம் என்ற வேகத்தில் பறந்து கொண்டுள்ளன. இந்த இரு விண்கலங்களுமே இன்னும் பூமிக்கு தகவல்களை அனுப்பிக் கொண்டுள்ளன என்பது தான் இதில் மிகவும் முக்கியமான விஷயம்.

விண்கலன்களின் கண்டுபிடிப்புகள்

இந்த இரு விண்கலங்களும் வியாழன், சனி, யுரானஸ், நெப்டியூனின் 23 நிலவுகளைக் கண்டுபிடித்தன, வியாழனின் நிலவான 'லோ'-வில் வெடித்துச் சிதறும் எரிமலையைக் கண்டுபிடித்தன, சனி கிரகத்தைப் போல வியாழனுக்கும் வளையங்கள் இருப்பதை கண்டுபிடித்தன, நெப்டியூனில் மணிக்கு 1,200 கி.மீ. வேகத்தில் வீசும் புயல்களைக் கண்டுபிடித்தன, நெப்டியூனின் நிலவான ட்ரைடனில் இருந்து நைட்ரஜன் வாயு அண்டவெளியில் பாய்வதைக் கண்டுபிடித்தன.

மேலும் வியாழனின் நிலவான 'லோ'-விலிருந்து வெடித்துச் சிதறும் எரிமலைத் துகள்கள் ஒன்று சேர்ந்து தான் ஜூபிடருக்கு வளையத்தை உருவாக்கியதையும் வாயேஜர் விண்கலங்கள் கண்டுபிடித்தன. மேலும் சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையங்கள் அனைத்தும் பல்வேறு சிறிய வளையங்களால் ஆனவை என்பதும், இதில் 'எப்' என்ற வளையத்தை இரு சிறிய துணைக் கோள்கள் கட்டுப்படுத்துவதையும் வாயேஜர் விண்கலங்கள் கண்டுபிடித்தன.

மேலும் சனி கிரகத்தின் இந்த வளையங்களில் அலைகள் இருப்பதும், இந்த கிரகத்தின் நிலவுகளால் தான் இந்த அதிர்வு-அலைகள் உருவாவதையும் இந்த விண்கலங்கள் கண்டுபிடித்தன. இதை வைத்து அந்த வளையங்களின் எடையையும் கூட நாசாவால் கணக்கிட முடிந்தது.

வேற்றுகிரகவாசிகள்..

விண்கலன் உருவாக்கத்தின் போது, வேற்றுக்கிரகவாசிகள் யாராவது இதை எதிர்காலத்தில் கண்டெடுத்தால் பூமி மற்றும் மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு தங்க முலாம் பூசப்பட்ட தாமிர வட்டு (Golden Record) விண்கலனின் பக்கவாட்டில் இணைக்கப்பட்டது. இதில் பூமியின் இயற்கை ஒலிகள், பறவைகளின் சத்தம், 55 மொழிகளில் வாழ்த்துகள் (தமிழிலும் உள்ளது), மற்றும் 115 புகைப்படங்கள் டிஜிட்டல் வடிவில் சேமிக்கப்பட்டுள்ளன.

ஒளி-நாள் (Light-Day) சாதனை:

நவம்பர் 2026-க்குள், வாயேஜர் 1 பூமியிலிருந்து துல்லியமாக ஒரு ஒளி-நாள் (One Light-Day) தொலைவை எட்டும் என்று நாசா அறிவியல் (NASA Science) கணித்துள்ளது. அதாவது, பூமியிலிருந்து அனுப்பப்படும் ரேடியோ சிக்னல் விண்கலத்தை அடைய 24 மணி நேரமும், அங்கிருந்து பதில் வர மேலும் 24 மணி நேரமும் (மொத்தம் 48 மணி நேரம்) ஆகும்.

செயல்பாடு:

கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பழமையான இந்த விண்கலத்தில் ஆற்றலைச் சேமிப்பதற்காகப் பெரும்பாலான கருவிகள் அணைக்கப்பட்டுவிட்டன. தற்போது காந்தமானி (Magnetometer) மற்றும் பிளாஸ்மா அலை துணை அமைப்பு (Plasma Wave Subsystem) உள்ளிட்ட இரண்டு கருவிகள் மட்டுமே தரவுகளைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. இதன் அணுசக்தி பேட்டரிகள் (RTGs) மூலம் 2036 வரை பொறியியல் தரவுகளைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1990ம் ஆண்டில் சூரிய குடும்பத்தின் கடைசி கோளான புளுட்டோவைக் (தற்போது இது குறுங்கோள் வகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது) கடந்த இந்த இரண்டு விண்கலன்களுமே சூரியனின் காந்தப்புல எல்லையைக் கடந்து தற்போது விண்மீன்களுக்கு இடையேயான எல்லையற்ற விண்வெளியில் (Interstellar Space) தொடர்ந்து பயணம் செய்து வருகின்றன.