புதுடெல்லி,
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகளை(எஸ்.ஐ.ஆர்.) இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாட்டிலேயே அதிகமாக குஜராத் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர். மூலம் 68 லட்சத்து 12 ஆயிரத்து 711 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக மத்திய பிரதேசத்தில் 34 லட்சத்து 25 ஆயிரத்து 078 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் 31,36,286 பேர், சத்தீஷ்காரில் 24,99,823 பேர், கேரளாவில் 8,97,211 பேர், கோவாவில் 1,27,468 பேர், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் 52,364 பேர், புதுச்சேரியில் 77,367 பேர் மற்றும் லட்சத்தீவுகளில் 206 பேரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து எஸ்.ஐ.ஆர். மூலம் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இறப்பு, நிரந்தர இடமாற்றம், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் பதிவு அல்லது பிற தகுதிச் சிக்கல்கள் ஆகிய காரணங்களுக்காக வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. மேலும், வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகவே உள்ளது என்றும், தகுதியுள்ள குடிமக்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.