தேர்தல் செய்திகள்

‘தொட்டது போல் கனவு கண்டேன்..’ 7 ஆண்டுகளுக்கு பிறகு இளம்பெண் வாக்குமூலம் - போக்சோ வழக்கில் இருந்து விமானப்படை வீரர் விடுதலை

7 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த விசாரணையில், புகாரளித்த இளம்பெண் கோர்ட்டில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் அனுராக் சுக்லா. விமானப் படையில் சிப்பாயாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வந்த ஷிவானியை கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்தார். சம்பவத்தன்று ஷிவானியின் 15 வயது தங்கை அனுராக் சுக்லா வீட்டில் தங்கியிருந்தார்.

அப்போது நள்ளிரவில் மைத்துனியை அனுராக் சுக்லா பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இதுகுறித்து ஷிவானியின் தங்கை தனது தந்தை மூலமாக போலீசில் புகாரளித்தார். அனுராக் சுக்லா மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. மேலும் இதுதொடர்பாக அனுராக் சுக்லா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த விசாரணையில் புகாரளித்த இளம்பெண் கோர்ட்டில் நேரில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். பெண் நீதிபதி முன்பாக அந்தப் பெண் தனது புகாரை மாற்றிக் கூறினார். "சம்பவம் நடந்த அன்று நான் ஆன்டிபயாடிக் மருந்து கள் உட்கொண்டிருந்ததால் அரை மயக்கத்தில் இருந்தேன். அந்த நபர் என்னைத் தொட்டது போல எனக்கு கனவில் தோன்றியது. உடனே நான் அலறினேன், ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை" என்று அவர் சாட்சியம் அளித்தார்.

அவருடைய இந்த வாக்குமூலத்தை அடுத்து, அனுராக் சுக்லா வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். மேலும், அவருக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே தன் மீது பொய் புகார் அளிக்கப்பட்டதாக சுக்லா கோர்ட்டில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT