ஸ்பெஷல்ஸ்

நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதல்... ஓராண்டு கடந்தும் ஆறாத வடு

இந்த ஓராண்டு காலம் நமக்கு ஒரு பாடத்தை உணர்த்தியுள்ளது.

நினைவு தினம்:-

இந்தியாவின் 'மினி சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படும் பஹல்காம் பகுதியில், கடந்த ஆண்டு இதே நாளில் அப் பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் நாட்டையே உலுக்கியது. இந்தத் துயரச் சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

பஹல்காம் பள்ளத்தாக்கு:-

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ளது பஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கு. இது சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பகுதி. சுற்றுலா பயணிகள் அங்கும், இங்குமாக சுற்றித் திரிந்து தங்களுடைய பயண அனுபவங்களை பதிவு செய்யும் வகையில் 'செல்பி' எடுத்தும், குடும்பத்தினரு டன் நேரங்களை செலவிட்டும் பொழுதை கழித்து செல்வார்கள்.

அப்படித்தான் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ந்தேதி காலைப்பொழுதில் இளஞ்ஜோடிகள், சுற்றுலா பயணிகள் என பலர் மகிழ்ச்சியாக அங்கு இருந்தனர். பிற்பகலில் எங்கிருந்தோ வந்த பயங்கராவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல், அப்பாவி சுற்றுலா பயணிகளின் எதிர்காலத்தை சிதைத்துவிட்டது.

கண்டனக் குரல்கள்:-

அன்றைய தினம் மதியம் 1 மணி முதல் 2.45 மணிக்குள் கையில் துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாதிகள் சிலர் அங்கிருந்தவர்களை குருவிகளை சுடுவது போல சரமாரியாக சுட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் ஆவார்கள். அதில் ஒருவர் உள்ளூர் குதிரை சவாரி நடத்துனர் ஆவார்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையுமே அதிர்ச்சி அடைய வைத்தது. கண்டனக் குரல்கள் ஆங்காங்கே எழுந்தன. சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை துடைத்தெறிய வேண்டும். அவர்கள் மீது கடுமையான எதிர்வினையாற்ற வேண்டும் என்ற குரல்கள் இந்தியா முழுவதும் ஏன் உலகத்தின் மூலை முடுக்குகளில் இருந்தும் கூட எதிரொலித்தன.

பயங்கரவாதிகள் முகாம் அழிப்பு:-

தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நடத்திய விசாரணையில், இந்தத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டது லஷ் கர்-இ-தொய்பா என்பதும், தாக்குதலில் ஈடுபட்டவர்களும் அதே அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இது திட்டமிடப்பட்ட பயங்கரவாத செயல் என்றும் இந்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது. இதற்கு நிச்சயம் இந்தியா பதிலடி கொடுக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதற்கேற்ப தாக்குதல் நடந்த சில வாரங்களுக்குள்ளேயே இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. அதன்படி, கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி இந்திய ஆயுதப்படைகள் ஒருங்கிணைந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த 9 முக்கிய முகாம்கள் துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டன.

ஆபரேஷன் சிந்தூர்:-

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டது. தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதக் கட்டமைப்புகளை அழிப்பதை மட்டுமே இந்தியா இலக்காக வைத்திருந்தது. அதே நேரம் நம்மீது தேவையின்றி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

அதே நேரம் தேவையற்ற போரை தவிர்க்க இந்தியா தனது நடவடிக்கைகளை நிறுத்தியது. இந்த விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை உலக நாடுகளிடம் தெளிவாக எடுத்துரைத்தது. தாக்குதலுக்குப்பின் எழுந்த பதற்றத்தைத் தணிக்க, இருநாடுகளுக்கும் இடையே ராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு போர்நிறுத்த ஒப்பந்தம் உருவானது.

'ஆபரேஷன் சிந்தூர்' என்பது. பயங்கரவாதத்தை எந்த வகையிலும் இந்தியா பொறுத்துக்கொள்ளாது என்பதையும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு இந்தியா எந்த அளவுக்கு தயாராக இருக்கிறது என்பதையும் உலகிற்கு பறைசாற்றிய ஒரு நிகழ்வாகும்.

ஆறாத வடு...:-

பஹல்காம் பள்ளத்தாக்கில் அமைதியை குலைத்து, பயங்கரவாதத்தின் கோர முகத்தால் சிதைக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. காலங்கள் கடந்தாலும், பயங்கரவாத தாக்குதலின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட வலிக்கும் மருந்து இல்லை.

அந்தத் துயரச்சம்பவத்தில் நாம் இழந்தது வெறும் உயிர்களை மட்டுமல்ல, பலரது பயணிகளின் கனவுகளையும், ஒரு தேசத்தின் அமைதியையுமே இழந்தோம். இருப்பினும், பயங்கரவாதம் என்பது ஒருபோதும் இந்திய மண்ணின் உறுதி யைச் சிதைக்க முடியாது என இந்த ஓராண்டு காலம் நமக்கு ஒரு பாடத்தை உணர்த்தியுள்ளது.

'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் நாம் அளித்த பதிலடி, நமது மண்ணையும், மக்களையும் பாதுகாக்க இந்த தேசம் எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காது என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது. இன்று, நாம் அந்த அப்பாவி உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதே வேளையில், எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை வேரறுப்பதில் இந்தியா கொண்டுள்ள அதே தீவிரமான உறுதியையும் புதுப்பித்துக் கொள்கிறோம்.

நினைவுகள் நிலைத்திருக்கும்:-

பஹல்காம் சம்பவம் ஒரு வடுவாக வரலாற்றில் இருந்தாலும், அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு உணர்வே பயங்கரவாதத்திற்கு நாம் அளிக்கும் மிகப்பெரிய வெற்றியாகும். இழந்த உயிர்கள் நம் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும்; அந்த நினைவுகள். அநீதிக்கு எதிரான நமது அறப்போரைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் சக்தியாக இருக்கும்.