கிரிக்கெட்

கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்ற வழக்கில் மேலும் 14 பேர் கைது

அவர்களிடம் இருந்த 18 டிக்கெட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 15-ந் தேதி பெங்களூரு - லக்னோ அணிக்கு இடையே நடந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக, சின்னசாமி ஸ்டேடியத்தில் உள்ள லட்சுமி கேண்டினில் ஊழியர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். மேலும், போலீசார் ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது குறித்து விசாரணையை தொடங்கினர்.

இந்தநிலையில், கப்பன் பார்க் போலீசார், கடந்த 24-ந் தேதி பெங்களூருவில் நடைபெற்ற பெங்களூரு-குஜராத் அணிக்கு நடந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் மர்மநபர்கள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சின்னசாமி ஸ்டேடியத்தின் வெளியே மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியை தொடங்கினர். அப்போது ஐ.பி.எல்.டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 19 டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 14 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து நடைபெற்று முடிந்த போட்டிக்கான விற்காத 18 டிக்கெட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் 16 வழக்குகளும், அல்சூர் கேட் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் என்று மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.