2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று பிளே-ஆப் ஆட்டங்கள் டிசம்பர் 4-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நேபாளத்தில் நடைபெற உள்ளன. இதற்கான அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. இந்தப் போட்டியில் நேபாளம், நமீபியா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலி, உகாண்டா, ஜெர்சி, குவைத் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இவை அனைத்தும் ரவுண்ட் ராபின் முறையில் தலா 7 போட்டிகளில் விளையாடும். புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2027 உலகக் கோப்பைக்கான 10 அணிகள் பங்கேற்கும் தகுதிச்சுற்றுக்கு முன்னேறும்.
தொடக்க நாளான டிசம்பர் 4-ம் தேதி போட்டியை நடத்தும் நேபாள அணி இத்தாலியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதே நாளில் மற்றொரு ஆட்டத்தில் நமீபியா – உகாண்டா அணிகள் அப்பர் முல்பானி மைதானத்தில் மோதுகின்றன. டிசம்பர் 5-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் – ஜெர்சி, குவைத் – கனடா அணிகள் மோதுகின்றன. இரண்டு மைதானங்களில் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 28 போட்டிகள் இடம்பெறுகின்றன.
உலகளாவிய தகுதிச்சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக 2027 ஒருநாள் உலகக் கோப்பையின் பிரதான சுற்றுக்கு முன்னேறும். 2, 3 மற்றும் 4-வது இடங்களைப் பிடிக்கும் அணிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சூப்பர் சீரிஸ் சுற்றில் விளையாடும். தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் 14 அணிகள் பங்கேற்க உள்ளன. மொத்தம் 57 போட்டிகள் நடைபெற உள்ளன. இதனால் நேபாளத்தில் நடைபெற உள்ள இந்தத் தகுதிச்சுற்று பிளே-ஆப், உலகக் கோப்பையில் இடம்பிடிக்கும் அணிகளுக்கான முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது.